தப்ஸீர் கலையின் தோற்றமும் வளர்ச்சியும்
அஷ்ஷெய்க்.M.S.றியாஸ் முஹம்மத் (நளீமி) M.A., P.G.D.E.
தப்ஸீர் வரைவிளக்கணம்
'தப்ஸீர்' என்ற சொல், 'பஸ்ஸர' என்ற வினைச்சொல்லிலிருந்து பிறந்ததாகும். இச்சொல் மொழி ரீதியாக, தெளிவு, விளக்கம், உள்ளார்ந்த கருத்தை வெளிப்படுத்தல், திரையை நீக்குதல் போன்ற கருத்துக்களில் பிரயோகிக்கப்படுகின்றது.
அல்குர்ஆனியக் கலை அறிஞர்கள் 'தப்ஸீர்' என்ற பதத்திற்கு பல்வேறு வகையான வரைவிளக்கணங்களை கொடுத்துள்ளனர். இமாம் அபூ ஹையான் (ரஹ்) அவர்களின் வரைவிளகணப்படி, 'அல்குர்ஆன் வார்த்தைகளை மொழியும் விதம், மொழி ரீதியான கருத்துக்கள், குர்ஆனிய சொற்களும் வசனங்களும் உணர்த்தி நிற்கும் யதார்த்தம் மற்றும் அல்குhஆனியக் கலைகள் என்பன குறித்து ஆராயும் ஓர் அறிவியலே தப்ஸீராகும்'.
அல்குர்ஆனின் எழுத்துக்கை உச்சரிக்கும் முறைமை, அதன் விதிகள் என்பவற்றை உள்ளடக்கியதான, 'கிராஅத்' எனும் கலை, மொழியியல், பதவாக்கம், உயிர்க்குறிகள், சொல் நயம், பொருள் நயம், வாக்கியத்தின் உட்பொதிந்த கருத்துக்கள், அல்குர்ஆனின் அற்புதத்தன்மை, ரத்து செய்யப்பட்ட சட்டங்கள், குர்ஆன் வசனங்கள் அருளப்பட்ட பின்னணி, குர்ஆன் வசனங்களிலிலிருந்து பெறப்பட்ட சட்டங்கள் முதலான அம்சங்களை உள்ளடக்கி, அல்குர்ஆனுக்கு விளக்கமளிப்பதையே தப்ஸீர் கலை குறிக்கிறது என்ற கருத்தை ஆ.ஐ.ஆ.அமீன் அவர்கள் கூறுகிறார்கள்.
அல்குர்ஆன் 'தப்ஸீர்' எனும் பதத்தை விளக்கவுரை, வியாக்கியானம் எனும் பொருளில் பயன்படுத்தியுள்ளது. '(இந்நிராகரிப்போர் எத்தகைய கேள்விகளையும் கேட்டு அதற்காக) எந்த உதாரணத்தை உம்மிடம் அவர்கள் கொண்டுவந்தபோதும், (அதைவிட) உண்மையான (விடயத்)தையும் அழகான வியாக்கியானத்தையும் (அஹ்ஸன தப்ஸீர்) உமக்கு அருளாமல் இல்லை'. (25 : 33)
'தப்ஸீர்' எனும் பதம் தரும் அதே பொருளில் 'தஃவீல்' எனும் பதமும் கையாளப்படுவதைக்காணலாம். குறித்த ஒரு பதத்தின் புறப்பொருளிலிருந்து பெற்றுக்கொள்ள முடியாத ஒரு பொருளைப் பெறுவதற்கும் 'தஃவீல்' எனும் பதம் பயன்படுத்தப்படுகிறது. அத்தகு சந்தர்ப்பங்களில் பதத்தின் புறப்பொருளுக்கு வெளியே செல்கின்ற அப்பொருளைப் பெறுவதே சரியானது என்பதை நிறுவ போதிய காரணங்கள் இருப்பது அவசியமானதாகும். அத்துடன், அவ்வாறு பெறும் கருத்தை சஹாபாக்களும், பின்வந்த பரம்பரையினரும் ஏற்றிருப்பதும் அவசியமானதாகும். இவ்வகையில் பெற்றுக்கொள்ளப்பட்டால் மட்டுமே தஃவீல் வழியான கருத்து சட்டத் தீர்மானங்களை எடுக்க உதவ முடியும் எனினும், ஆரம்ப கால முபஸ்ஸிர்களும், பிரபல அல்குர்ஆன் விரிவுரையாளருமான இப்னு ஜரீர் அத்தபரியும் இவ்விரு பதங்களையும் ஒரே பொருளில் கையாண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இதற்கு பின்வரும் வசனத்தை சான்றாகக் கொள்ள முடியும், 'அதற்கவர், எனக்கும் உமக்குமிடையில் பிரிவினை(க்குரிய) நேரம் இதுவே. நீர் பொறுத்துக்கொள்ள முடியாமல் போன விடயங்களின் உண்மையை (தஃவீல்) உமக்கு அறிவிக்கிறேன்'. (18 : 78)
தப்ஸீரின் முக்கியத்துவமும் அவசியப்பாடும்
முஸ்லிம்களிடையே தோன்றி வளர்ந்த பல்துறை கலைகளுள் தப்ஸீர் கலை முதன்மை வாய்ந்ததாகும். அதனை மஸ்லிம் சமுகத்தின் அறிவியற் பணியின் முதல் வடிவம் என்று கூறினாலும் பொருந்தும். அல்குர்ஆனுடன் ஒட்டி வளர்ந்த கலைகளுள் தப்ஸீர், வாழ்வின் அனைத்துத் துறைகளுகளுக்குமான அல்குர்ஆனின் வழிகாட்டல்களை தெளிவுபடுத்துகின்ற பிரதான கலை என்ற வகையில் அது ஏனைய கலைகளுடன் ஒப்பிட்டு நோக்குமிடத்தி முதலிடம் வழங்கவேண்டிய ஒன்றாகும்.
இமாம் தபரி அவர்கள் கூறுகின்றார்கள், 'அல்குர்ஆனை எவர் அதன் விளக்கம் தெரியாமல் வாசிக்கிறாரோ அவர் எவ்வாறு அதன் இனிமையை சுவைக்க முடியும்'
இஸ்லாத்தின் அனைத்துப் போதனைகளும், ஷரீஅத் சட்டங்களும் அல்குர்ஆனின் வழிநின்று ஆராயப்படுவதன் காரணத்தினால் அல்குர்ஆனுடன் நேரடித் தொடர்புடைய இக்கலை குறித்த அறிவு அத்தியவசியமாகும்.
அல்குர்ஆனுக்கு விளக்கவுரை 'தப்ஸீர்' ஏன் அவசியப்படுகிறது? என்ற விடயத்தை நோக்கினால், அல்குர்ஆன் அரபு மொழியில் சாதாரண அரபுகளுக்கும் விளங்கக்கூடியதாக அருளப்பட்டபோதும், ஜாஹிலிய்யாக்காலத்தின் இலக்கியத்திறனை விஞ்சும் வகையில் அருளப்பட்டதால், அல்குர்ஆனுக்கு விளக்கம் வழங்குவதற்கு அரபு மொழி, இலக்கியம், இலக்கணம் முதலான விடயங்களை அறிந்து வைத்திருப்பது அவசியமாயின.
இவற்றில் புலமை படைத்தவர்களாலும் சிலபோது அல்குர்ஆனை புரிந்துகொள்வது சிரமமாகியது. எனவே, பினவரும் காரணிகள் அல்குர்ஆனுக்கு தப்ஸீர் செய்ய வேண்டிய நிலையை ஏற்படுத்தியது.
01.அரபு மொழியாற்றலும், தப்ஸீர் கலைத்துறையில் ஆர்வமும் உடையவர்களில் சிலரும், அல்குர்ஆனில் கையாளப்பட்டுள்ள சில சொற்களின் பொருளை அறிய சிரமப்பட்டனர். பெரும் நபித்தோழர்கள் சிலரால் கூட அல்குர்ஆனின் சில பதங்களை புரிந்து கொள்ள முடியாமல் போனது. அல்குர்ஆனுக்கு விளக்கவுரை வழங்குவதில் ஆற்றல் பெற்றிருந்த அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரழி) அவர்கள் அல்குர்ஆனில் கையாளப்பட்டிருந்த 'பாதிர்' என்ற பதத்தின் பொருளை தான் அறியாதிருந்ததாகவும், நாட்டுப்புற அரேபியர் இருவர் வந்து தமக்கிடையே ஏற்பட்ட தகராறு பற்றி முறையிட்டபோது அப்பதத்தைக் கையாண்டதால் அச்சொல்லின் பொருளை தன்னால் புரிந்துகொள்ள முடிந்தது என்றும் கூறியுள்ளமை நோக்கத்தக்கது.
உமர் (ரழி) அவர்களும் அல்குர்ஆனில் வரும், 'வபாகிஹதை வஅப்பா' என்ற தொடரில் வரும் 'அப்பா' என்ற பதத்தின் பொருளை அறியாதிருந்தார்கள் என்ற வரலாற்றை அனஸ் (ரழி) அவர்களின் ரிவாயத்தின் மூலம் அறிய முடிகிறது.
02. அல்குர்ஆனில் சில சொற்கள் சில இடங்களில் அகராதிகளில் கையாளப்பட்டுள் பொருளில் இல்லாமல், இஸ்லாமிய சிந்தனை வழியிலான பொருளில் கையாளப்பட்டுள்ளன. ஆதலால், அத்தகைய சொற்கள் தரும் பொருள்கள் பற்றி அறிய தப்ஸீர் அவசியப்பட்டது.
03. பல பொருள்களைத் தரக்கூடியதாக இருக்கும் ஒரு குறித்த சொல், குறித்த வசனத்தில் எப்பொருளில் கையாளப்படுகிறது என்பதனை அறிவதற்கும் தப்ஸீர் அவசியப்பட்டது.
04. சொற்சுருக்கமும் பொருட்செரிவும் கொண்டதே அல்குர்ஆனின் நடை ஒழுங்காகும். ஸஹாபாக்களது காலத்தைய பல பிரச்சினைகளின் போது, வழிகாட்வதற்கான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டபோது, தீர்வுகள் மட்டும் கூறுவது அல்குர்ஆனின் ஒழுங்காகும். ஸஹாபாக்கள் எதிhகொண்ட பிரச்சினைகள் என்பதனால் அத்தீர்வுகளை அவர்கள் முழுமையாகப் புரிந்துகொண்டாலும் அடுத்த பரம்பரையினர் அவற்றை விளங்க அவ்வாயத்துக்கள் அருளப்பட்ட பின்னணியை எடுத்துக் காட்டி விளக்கமளிக்கவும் தப்ஸீர் அவசியப்பட்டது.
05. மயக்கமான பொருளைத் தரக்கூடியதும் பொருள் தெளிவு குறைந்ததுமான 'முதஷாபிஹாத்தான' வசனங்களுக்கு விளக்கம் வழங்க தப்ஸீர் இன்றியமையாதாகும்.
தப்ஸீர் கலையின் வளர்ச்சி
ஆரம்பத்தில் தப்ஸீர் கலை தனியான கலையாகவும் துறையாகவும் வளர்ச்சி கண்டிருக்கவில்லை. பிற்காலத்திலேயே ஏனைய எல்லாக்கலைகளைப் போலவே தப்ஸீர் கலையும் தனித்துறையாக வளர்ச்சிகாணவாரம்பித்தது. தப்ஸீர் கலையின் வளர்ச்சிக்கட்டங்களை முக்கிய நான்கு காலகட்டமாக நோக்க முடியும்.
01. நபி (ஸல்) காலம்
02. ஸஹாபாக்களது காலம்
03. தாபிஈன்களது காலம்
04. ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டுக்கு பின்னுள்ள காலம்.
நபி (ஸல்) அவர்களது காலம்
தப்ஸீர் கலை வளர்ச்சியின் முதலாவது காலகட்டத்தினை நோக்கினால், அல்குர்ஆனுக்கான முதலாவது முபஸ்ஸராக நபி (ஸல்) அவர்கள் விளங்கினார்கள். அவர்கள் உயிர்வாழ்ந்த காலப்பகுதியில் ஸஹாபாக்கள் தமக்கு விளங்காத அல்குர்ஆன் வசனங்களுக்கான விளக்கங்களை நபி (ஸல்) அவர்களிடம் நேரடியாகக் கேட்டறிந்து கொண்டனர்.
அல்லாஹ்வும் அல்குர்ஆனுக்குரிய விளக்கத்தினை வழங்குவதற்கு பொறுப்பேற்றுக் கொண்டான். 'நிச்சயமாக அதனை ஒன்றுசேர்ப்பதும், அதனை ஓதிகாண்பிப்பதும் எங்களது கடமையாகும்... அதன் பின்பு அதனை விளங்கப்படுத்துவதும் எம்மீது கடமையாகும்' (75:18-20)
பின்; நபி(ஸல்) அவர்கள் மீது இந்தப்பொறுப்பை அல்குர்ஆன் சுமத்துகிறது. 'மேலும், மனிதர்களுக்கு அவர்கள் பால் இறக்கி வைக்கப்ட்டதை நீர் அவர்களுக்கு தெளிவுபடுத்துவதற்காக மற்றும் அவர்கள் சிந்திப்பவர்களாக மாறிவிடலாம் என்பதற்காக நாம் இவ்வேதத்தை உம் மீது இறக்கினோம்'. (16:44)
நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்கள் பொருள் விளங்காத பல வசனங்களுக்கு தான் விளக்கம் கூறி வந்துள்ளார்கள். இது பற்றி கூறும் அல்குர்ஆன், 'அவ்வாறே உங்களுக்கு நம்முடைய வசனங்களை ஓதிக் காண்பித்து, உங்களைப் பரிசுத்தமாக்கி வைக்கவும், உங்களுக்கு வேதங்களையும், (அவைகளிலுள்ள) ஞானத்தையும் கற்பித்து, நீங்கள் அறியாதவற்றை உங்களுக்குக் கற்றுக்கொடுக்கவும் கூடிய ஒரு தூதரை உங்களிலிருந்தே உங்களுக்கிடையில் அனுப்பி வைத்தோம்'.(2:151) என கூறுகின்றது.
வேதத்துக்கு விளக்கம் வழங்குவது ஒவ்வொரு நபியினதும் பொறுப்பு என்பதை அல்குர்ஆன் கூறிக்காட்டுகிறது, 'மேலும், (நபியே! ஒவ்வொரு சமுகத்தார்க்கும்) அவர்களுக்கு (நம் தூதுத்துவத்தை) அவர் விளக்கிக் கூறுவதற்காக எந்தவொரு தூதுவரையும்அவருடைய சமுகத்தாரது மொழியைக் கொண்டேயல்லாது நாம் அனுப்பியது கிடையாது'. (14:4)
பொதுவாக, நபி (ஸல்) அவர்களது காலத்தைய அல்குர்ஆன் விளக்கவுரைகளும் சுருக்கமாகவே இடம்பெற்றன. காரணம், நபி (ஸல்) அவர்களது வார்த்தைகளும் வஹி என்ற வட்டத்துக்குள் வருவதால் அவர்களுடை வார்த்தைகளும் 'ஜவாமிஉல் கலிம்' என்ற சொற்சுருக்கத்தைக் கொண்டதாக அமையப் பெற்றமையேயாகும்.
இவர்களது காலத்து விளக்கவுரைகள் இரண்டு வகையில் அமைந்திருந்தன. முதலல்வகை, தன்னிடம் கட்கப்படும் கேள்விகளுக்கு பதில் வழங்கும் அமைப்பிலிருந்தது. அடுத்து, தாமாக முன்வந்து வழங்கும் விளக்கங்களைக் குறிப்பிட முடியும்.
முதல்வகைக்கு உதாரணமாக, 'எவர்கள் மெய்யாகவே விசுவாசம் கொண்டு, தங்கள் விசுவாசத்துடன் அக்கிரமத்தையும் (அல்ளுல்ம்) கலந்துவிடவில்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக அபயம் உண்டு. அவர்கள்தாம் நேர்வழியில் இருக்கின்றவர்கள்' (6:82) இவ்வசனத்தில் வரும் 'ளுல்ம்' என்ற சொல்லின் கருத்தை ஸஹாபாக்களால் புரிந்துகொள்ள முடியாமல் போனபோது நபியவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவ்வசனத்தில் அச்சொல்லை, 'நிச்சயமாக இணைவைத்தலானது மிகப்பெரும் அக்கிரமமாகும்' (ளுரம்) என்ற வசனத்தை ஓதிக்காண்பித்துவிட்டு ''ளுல்ம்' என்பது இணைவைத்தலைக் குறிக்கிறது' (புஹாரி, முஸ்லிம், அஹ்மத்) என்று விளக்கம் கூறினார்கள்.
இரண்டாவது வகைக்கு உதாரணமாவது, 'உங்களுக்கு முடியுமான சக்தியை நீங்கள் அவர்களுக்கெதிராக ஒன்றுதிரட்டிக்கொள்ளுங்கள்' (8:60) இவ்வசனத்தில் வரும் 'குவ்வா' சக்தி என்பதற்கு விளக்கம் கூறவந்த நபி (ஸல்) அவர்கள், குத்பாவின் போது மிம்பரிலிருந்து கொண்டு, ' உங்களுக்கு முடியுமான சக்தியைத் திரட்டிக்கொள்ளுங்கள். அறிந்துகொள்ளுங்கள், சக்கி என்பது அம்பெறிதலாகும். (முஸ்லிம்) என குறிப்பிட்டார்கள். நபி (ஸல்) அவர்களது வபாத்துடன் ஸஹாபாக்களுக்கு அந்த வாய்ப்பு அற்றுப்போகின்றது.
நபியவர்கள் அல்குர்ஆன் வசனங்களின் பொருளை விளக்கியது மாத்திரமன்றி, அல்குர்ஆனின் ஏவல்களை அமுல் நடத்தும் வழிமுறை பற்றிய விளக்கத்தினையும் அவர்களே வழங்கினார்கள். அல்குர்ஆன் தொழுமாறு, நோன்பு நோற்குமாறு, ஹஜ் செய்யுமாறு பல இடங்களில் வலியுறுத்தியபோதும் அவற்றின் செயன்முறை விளக்கத்தினை நபி (ஸல்) அவர்களே வழங்கினார்கள். எனவேதான் அவர்கள், 'நிச்சயமாக நான் அல்குர்ஆனும் அதனைப்போன்ற ஒன்றும் வழங்கப்பட்டுள்ளேன்' எனக் கூறினார்கள்.
அந்தவகையில் நபி (ஸல்) அவர்களால் அல்குர்ஆனுக்கு வழங்கப்பட்ட விளக்கங்கள் 'அத்தப்ஸீர் அந்நபவீ' என வழங்கப்படுகின்றன. அவை, புஹாரி, முஸ்லிம், திர்மிதி போன்ற பல ஹதீஸ் கிரந்தங்களில் தனியாக தொகுக்கப்பட்டுளமை குறிப்பிடத்தக்கது.
ஸஹாபாக்கள் காலம்
இரண்டாவது காலகட்டமான ஸஹாபாக்களது காலகட்டத்தைப் பொருத்தவரையில், அவர்களது காலத்தில் இஸ்லாமிய இராச்சிய வியாபகத்தின் காரணமாக குலபாஉர் ராஷதூன் காலம் தொடக்கம் பிற கலாசாரத்துடன் முஸ்லிம்கள் தொடர்புகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. இதனால் பல புதிய பிரச்சினைகள் தோன்றவாரம்பித்தன. அப்பிரச்சினைகள் தோடர்பான தீர்வுகளை நாடி அல்குர்ஆனில்பால் மீள வேண்டிய தேவை ஏற்பட்டது. இதனால் அல்குர்ஆனை முடிந்தவரையில் கால, சூழலுக்கு ஏற்றமுறையில் விளங்கிக்கொண்ள வேண்டிய நிர்ப்பந்த நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக, விளக்கம் குறைவான வசனங்களின் பொருள்களை அறிவதற்கு, அல்குர்ஆனையும், வேறு சில வசனங்களையும், அல்குர்ஆனுக்கான விளக்கவுரைகளாக வந்துள்ள ஹதீஸ்களையும் வைத்து தீர்வுபெற வேண்டியதாயிற்று.
அல்குர்ஆனின் வசனங்களுள் சில தெளிவான பொருளைத் தந்தன. மேலும் சில வசனங்கள் பொருள் தெளிவு குறைவானவை. இத்தகைய பொருள் விளக்கம் குறைவானதும் சுருக்கமானதுமான வசனங்கள் தெளிவையும் விளக்கத்தினையும் வேண்டி நின்றன. இத்தகைய சில வசனங்களை மேலும் சில வசனங்களில் சிலதை சில வசனங்கள் விளக்குவனவாக அமைந்திருந்தன. உதாரணத்திற்கு அல்குர்ஆன் கூறும், 'உங்களுக்கு இனிக் கூறப்படுவனவற்றைத் தவிர, மற்ற நாற்கால் பிராணிகள் ஆகுமாக்கப்பட்டுள்ளன' (5:1) இவ்வசனத்தில் சுருக்கமாக வந்துள்ள விடயத்தை மேலுமொரு அல்குர்ஆன் வசனம் விளக்குவதைக் காண முடியும். 'விசுவாசிகளே! புசிக்க உங்களுக்கு தடுக்கப்பட்டவைகளெல்லாம் (தானாக) இறந்தும், இரத்தமும், பன்றியின் மாமிசமும் (அறுக்கும்போது) அல்லாஹ் அல்லாதவற்றின் பெயர் கூறப்படாமல் இருந்தவையுமே' (2;173) என விளக்குகின்றது.
அதேபோன்று, பொருள் விளக்கம் குறைந்த வசனங்களை அல்குர்ஆனில் இல்லாதபோது நபி (ஸல்) அவர்களது ஹதீஸ்களில் தேடியறிந்து விளக்கம் கூறும் மரபும் இக்காலத்தில் பின்பற்றப்பட்டது. உதாரணத்துக்கு, 'கவ்ஸர்' என்ற சொல்லுக்கு நபி (ஸல்) அவர்கள் கூறிய விளக்கத்தினைப் பயன்படுத்தியதைக் குறிப்பிட முடியும். 'கவ்ஸர் என்பது அல்லாஹ் எனக்கு மறுமையில் வழங்கிய பிரத்தியேகமான நீர் அருவியைக் குறிக்கிறது' (அஹ்மத், முஸ்லிம்) என்று நபி (ஸல்) வழங்கிய விளக்கத்தினை மையமாகக் கொண்டு தப்ஸீர் விளக்கம் வழங்கினர். அதேபோன்று, சூரா பாதிஹாவில் வரும் 'கோபத்துக்குள்ளானவர்ளும் வழிதவறியவர்களும்;' என்ற சொல்லுக்கு நபியவர்கள் வழங்கிய 'யூத, கிருஸ்தவர்கள்' என்ற விளக்கத்தினை வழங்கினார்கள். 'பயபக்தியுடைய வாழ்க்கையை அவர்களுக்கு நிலையாக்கியும் வைத்தான்' (48:26) என்ற வசனத்திற்கு அது 'லா இலாஹ இல்லல்லாஹ்வாகும்' (திhமிதி) என விளக்கினார்கள். 'அவர் இலகுவான கேல்வி கணக்காக கணக்குக் கேட்கப்படுவார்' (884:8) என்ற வசனத்திற்கு 'அது கேள்வி கணக்கன்று மாறாக, படடோலையை காண்பிப்பதாகும்' (புஹாரி, முஸ்லிம்)என விளக்கினார்கள். இத்தகைய வசனங்களை இதற்கு உதாரணங்களாக்கக் குறிப்பிட முடியும்.
சில சஹாபாக்கள் இஸ்லாத்தின் ஆரம்ப கட்டத்திலேயே இஸ்லாத்தை ஏற்றிருந்தனர். மற்றும் சிலர் பிற்காலத்தில் ஏற்றனர். சிலர் தமது இளம்பராயத்திலும் வேறு சிலர் தமது முதுமைப் பராயத்திலும் இஸ்லாத்தை ஏற்றனர். அவர்களில் சிலர் அல்குர்ஆன் குறிப்பிடும் சில வசனங்களுடன் நேரடி தொடர்பு கொண்டிருந்தனர். மற்றும் சிலர் அது தொடர்பாக ஏனைய ஸஹாபாக்களுடன் கலந:தரையாடி அது தொடர்பான அறிவைப் பெற்றிருந்தனர். ஆயின், ஸஹாபாக்கள் எல்லோரும் அல்குர்ஆன் தொடர்பான முழுமையான அறிவைப் பெற்றிருக்கவி;ல்லை. சிலர் அறிந்து வைத்திருந்தவற்றை மேலும் சிலர் அறிந்திருக்கவில்லை. அறிந்திருந்த எல்லா ஸஹாபாக்களும்கூட ஒரே தரத்தைக் கொண்டோராக இருக்கவில்லை. அவர்கள் புரிந்துகொண்ட விளக்கத்தின் ஆழம் வித்தியாசமாக இருந்தது.
முதல் நான்கு கலீபாக்கள், அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரழி), அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத்(ரழி) போன்றவர்கள் ஏராளமான அல்குர்ஆன் வசனங்கள் இறங்கிய பின்னணி, அவற்றின் உட்பொதிந்த பொருள் என்பனபற்றிய புரண விளக்கத்தினைப் பெற்றிருந்தனர்.
அல்குர்ஆன் விதந்துரைத்த சமுகவாழ்வு நிலவிய குர்ஆனிய சமுகத்தில் ஸஹாபாக்கள் வாழ்ந்திருந்தமையினால் அவர்கள் அல்குர்ஆனியக் கோட்பாடுகள் மட்டுமன்;றி, அவற்றை நடைமுறைப்பத்தும் முறைமைகளையும் அறிந்திருந்தனர். இதனால், நபி (ஸல்) அவர்களது வபாத்தின் பினபு எழுந்த சமுக, பொருளாதார, அரசியல் பிரச்சினைகளின்போது, அல்குர்ஆனிலிந்து வழிகாட்டல் பெற அதனை நன்கு அறிந்திருந்த ஸஹாபாக்களிடம் கேட்டு, ஸஹாபாக்களும், தாபிஈன்களும் விளக்கம் பெற முற்பட்டனர். இதனால், ஸஹாபாக்கள் காலத்தில் தப்ஸீர் காலை வளர்ச்சிகாணவாரம்பித்தது.
இக்காலப்பகுதியில் அல்குர்ஆனுக்கு விளக்கம் கூறும் தகைமை நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரியது. அந்த தகுதி வேறொருவருக்குக் கிடையாது என்ற சிந்தனையை முன்வைத்து, அல்குர்ஆனுக்கு விளக்கம் வழங்குவதை எதிர்த்த சில ஸஹாபாக்களும் இருந்தனர். இக்கருத்து கி.பி. 831 வரையில் நீடித்தது குறிப்பிடத்தக்கதாகும். மேலும் சில ஸஹாபாக்கள், தாம் விளக்கமளிக்கும்போது தாம் தவறு விட்டுவிடக்கூடும் என்ற அச்சத்தின் காரணமாகவும் இக்காலப்பகுதியில் அல்குர்ஆன் விளக்கவுரை வழங்குவதைத் தவிர்த்தனர். ஆயினும், இக்கலையானது நாளடைவில் மக்களுக்கு மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு துறையாக மாறியது.
ஸஹாபாக்கள் அல்குர்ஆனுக்கு விளக்கமளிக்க அல்குர்ஆனையும் அதற்கடுத்து ஹதீஸகளையும் ஆதாரமாக் கொண்டனர். அவ்விரண்டும் போதாது போகும் சந்தர்ப்பங்களில் தங்களது பகுத்தறிவையும் மொழி அறிவையும் பயன்படுத்தி விளக்கமளித்தனர். இவ்வாறு விளக்கமளித்த ஸஹாபாக்களுள் மதல் நான்கு கலீபாக்களும், இப்னு மஸ்ஊத், இப்னு அப்பாஸ், உபையிப்னு கஃப், ஸைத் இப்னு தாபித், அபூ மூஸா அல் அஷஅரீ, அப்துல்லாஹ் இப்னு ஸூபைர், அனர் இப்னு மாலிக், அப்துல்லாஹ் இப்னு உமர், ஜாபிர் பின் அப்துல்லாஹ், அப்துல்லாஹ் இப்னு அம்ரிம்னுல் ஆஸ், ஆயிஷா (ரழி) முதலானவாகள் குறிப்பிடத்தககோராவர்.
இவர்களுள் முதலட மூன்று கலீபாக்களது விளக்கவுரைகள் மிகக்குறைவாகவே கிடைக்கின்றன. அலி(ரழி) அவாகளது அல்குர்ஆன் விளக்கவுரைகள் ஹதீஸ் தொகுப்புக்களில் எழுத்துருவில் கிடைக்கின்றன. இவர் ஒருமுறை பிரச்சாரம் செய்யும்போது, 'அல்குர்ஆனைப்பற்றி என்னிடம் கேளுங்கள். அல்லாஹ்வின் மீது சத்தியமாக அதன் ஆயத்துக்கள் ஒவ்வொன்றும் இரவிலா பாகலிலா, மலையிலா மடுவிலா அருளப்பட்டது என்பதை நான் அறிவேன்' என்று கூறினார்கள். இவர் அல்குர்ஆனில் ஆழமான அறிவுடையவராக இருந்தபோதும் அவர்கள் தப்ஸீர் எதையாவது எழுதினார்களா என்று உறுதிப்படுத்திக்கூற முடியாத நிலை உள்ளது. 'ஜம்உல் குர்ஆன் வதஃவீலிஹி' எனும் தலைப்பில் ஒரு தப்ஸீர் எழுதினார் என சிலர் கூறுவதுண்டு.
உஸ்மான் (ரழி) காலத்தில் உத்தியோகபூர்வமாகத் தொகுத்த அல்குர்ஆன் பிரதி தவிரவுள்ள அனைத்து ஏடுகளும் ஸஹாபாக்களது அங்கீகாரத்துடன் எரிக்கப்பட்டன. இந்நிகழ்வுக்கு முன்பு அலி (ரழி) அவர்களது தப்ஸீர் எழுதப்பட்டிருந்தால் அதுவும் எரிக்கப்பட்டிருக்கலாம். அந்நிகழ்வுக்குப்பின்பு ஏற்பட்ட அரசியல் சூழல், குழப்பங்கள் காரணமாக அவரால் எழுதுவதற்குரிய வாயப்பு இல்லாமல் போயிருக்கும்.
ஸஹாபாக்கள் அல்குர்ஆனுக்கு விளக்கமளிக்கும்போது இஜ்திஹாதைக் கையாண்டுள்ளனர். அவர்கள் இஜ்திஹாதைப் பயன்படுத்தும்போது பின்வரும் அம்சங்களை கருத்தில் கொண்டனர்.
'தமது மொழி அறிவும் அதனுடன் தொடர்பான இரகசியங்களும், அராபியர்களது வழக்காறுகள், அல்குர்ஆன் இறங்கிய வேளையில் அரபு தீபகற்பத்தில் காணப்பட்ட யூத, கிருஸ்தவர்களுடைய நிலைமைகள் என்பவற்றுடன் அவர்களுக்கிருந்த விளங்கும் ஆற்றலையும் பயன்படுத்தி விளக்கமளித்தனர்' (அத்தப்ஸீர் வல் முபஸ்ஸிரூன், பாகம் 1, பக்: 45)
அல்குர்ஆனுக்கு விளக்கமளித்த ஸஹாபாக்களில் இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களை 'தப்ஸீர் கலையின் தந்தை' எனக்கூறுவர். அவரிடமிருந்த அரபு மொழி இலக்கிய அறிவு, தப்ஸீர் விளக்கமளிக்க அவருக்கு பெரிதும் உதவியது. குர்ஆன் கையாண்டுள்ள அரபுப் பதங்களை விளக்க அப்பதம் கையாளப்பட்டுள்ள அரபுக் கவிதைகளை எடுத்தாளும் ஆற்றல் அவருக்கிருந்தது. மெல்லிய திரை ஒன்றினூடாகப் பார்த்து மறைந்திருக்கும் பொருளை எடுத்துக்காட்டுவது போல அல்குர்ஆனின் உட்பொதிந்த கருத்தை எடுத்துக் காட்டும் வல்லமை அவருக்கிருந்தது என்று அலி (ரழி) அவர்கள் இப்னு அப்பாஸ் (ரழி) அவாகளைப் பாராட்டியுள்ளார்கள். இந்த ஆற்றல் அவரிடம் இருந்ததால்தான் சூரா நஸ்ருக்கு அவர் விளக்கம் வழங்கும்போது பெரும் ஸஹாபாக்களால் புரிந்துகொள்ள முடியாத,'அது நபிகளாரின் மரணத்தைச் சுட்டிக்காட்டுகிறது' என்ற விளக்கத்தை வழங்கினார்கள். இவர்களைப்போன்றே, ஸஹாபாக்களில் இப்னு மஸஊத், அலி, உபையிப்னு கஃப் ((ரழி) ஆகிய நாள்வரும் தப்ஸீர் துறையில் சிறப்பிடம் பெற்றவர்களாவர்.
பிற்காலத்தில் தோன்றி முபஸ்ஸரீன்கள் ஸஹாபாக்களது அல்குர்ஆன் விளக்கவுரைகளுக்கு கூடுதல் முக்கியத்துவத்தினை வழங்கினர். எனவேதான், ஒரு வசனத்திற்கான விளக்கத்தினை அல்குர்ஆனிலோ சுன்னாவிலோ பெற முடியாத போது ஸஹாபாக்களது கருத்துக்களுக்கு முக்கியத்துவம் வழங்குவதாக இப்னு கஸீர் குறிப்பிடுகிறார்.
அல்குர்ஆனுக்கு ஸஹாபாக்கள் விளக்கமளித்தபோதும், முழுக்குர்ஆனுக்கும் அவர்களால் விளக்கமளிக்க முடியவில்லை. அதுபற்றி அவர்களில் அனேகமானோர் அறிந்திருந்தமையும், அது அவசியமில்லையென அவர்கள் கருதியிருந்தமையுமே அதற்கு காரணமாக இருக்கலாம். குர்ஆனிய சமுகத்தில் அவர்கள் வாழ்ந்தமையாலும் அதற்குரிய கருத்துக்கள் ஸஹாபாக்கள் மத்தியில் பிரபலமடைந்திருந்தமையாலும் சிலபோது அவர்கள் ஒவ்வொரு வசனத்திற்கும் விளக்கமளிப்பதை அவர்கள் அநாவசியமாக கருதியிருக்கலாம்.
ஸஹாபா காலத்தில் அவர்களது தப்ஸீர் விளக்கங்கள் எழுத்துருவில் காணப்படவில்லை. அவை ஹதீஸ்களின் ஒரு பகுதியாகவே அறிவிக்கப்பட்டு வந்துள்ளன. எனவேதான், பிற்கால ஹதீஸ் கிரந்தங்களில் அவை தனியாக 'தப்ஸீர்' என்ற பிரிவில் பதியப்பட்டிருந்தன.
தாபிஈன்கள் காலம்
ஸஹாபாக்களுக்கு அடுத்து வந்த பரம்பரையினரைப் பொருத்தவரையில், ஸஹாபாக்கள் விளக்கம் கூறாது விட்டுச்சென்ற வசனங்களுக்கு விளக்கவுரைகள் அவசியப்பட்டன. 'நபி (ஸல்) அவர்களும் ஸஹாபாக்களும் அல்குர்ஆனின் அனைத்து வசனங்களுக்கும் விளக்கமளித்திருக்கவில்லை. தமது காலத்தில் விளங்குவதற்கு மக்கள் சிரமப்பட்ட வசனங்களை மாத்திரமே விளக்கிச் சென்றனர். அவ்விளக்கங்களும்கூட மிக சுருக்கமானவையாகவே விளங்கியது. மக்கள் நபியவர்களதும் ஸஹாபாக்களதும் காலத்தைவிட்டும் தூரமாகிவரும் காலமெல்லாம் வித்தியாசமான விளகக்கங்களை வேண்டி நின்றன.
இக்குறைபாட்டை நிவர்த்திசெய்ய வேண்டிய பொறுப்பு தாபிஈன்களது முபஸ்ஸிர்களுக்கு இருந்தது. எனவே, தப்ஸீர் விளக்கங்களில் தம்மால் இயன்றவரையில் மயக்கமான கருத்துக்களைத் தரக்கூடிய வசனங்களை அவர்கள் விளக்கிச் சென்றனர். அதனைத் தொடர்ந்து வந்தோர், அரபுமொழியில் தாம் அறிந்த மொழிப் பிரயோகங்களையும், அல்;குர்ஆன் இறங்கிய காலப்பகுதியில் நடைபெற்றதாக உறுதிப்படுத்தப்பட்ட சம்பவங்களையும் ஏனைய அல்குர்ஆன் விளக்கத்திற்கான கரவிகளையும், தேடலுக்கான ஒழுங்குமுறைகளையும் பயன்படுத்தி அல்குர்ஆனுக்கு விளக்கவுரை எழுதுவதைப் பூரணப்படுத்தினர்' (அத்தப்ஸீர் வல் முபஸ்ஸிரூன், தொகுதி :1, பக: 99-100)
தப்ஸீர் கலையில் சிறப்புற்று விளங்கிய ஸஹாபாக்களது நம்பிக்கைக்குரிய மாணவர்களால் இத்துறை தொடரப்பட்டது. மக்கா, மதீனா, ஈராக் ஆகிய பகுதிகளை மையப்படுத்தி இவர்களது பணி தொடர்ந்தது. இஸ்லாமிய சாம்ராச்யம் விரிவடைந்து, பல நாடுகள் வெற்றிகொள்ளப்பட்டதும் பெரிய ஸஹாபாக்கள் பலரும் மக்கா, மதீனாவை விட்டு பல நாடுகளுக்கும் சென்று குடியேறினர். அவர்கள் சென்ற பகுதிகளிலெல்லாம் தாம் கற்றிருந்த அல்குர்ஆன் விளக்கங்களை மக்களுக்கு கற்பித்தனர். குறிப்பாக, தப்ஸீர் துறையில் சிறப்புற்று விளங்கிய பல ஸஹாபாக்கள் தாம் இருந்த பிரதேசங்களில் சிறந்த முபஸ்ஸிர்களை தமது வாரிசுகளாக உருவாக்கிச் சென்றனர்.
அந்தவகையில், மக்காவில் இப்னு அப்பாஸ் (ரழி) இவர்களுடைய மாணவர்களான ஸஈத் இப்னு ஜூபைர், முஜாஹித், இக்ரிமா, தாவூஸ், அதாஃ போன்ற தாபிஈ அறிஞர்கள் இக்கலையை வளர்த்தனர். மதீனாவில் உபை இப்னு கஃப் (ரழி) அவர்களது மாணவர்களான அபுல் ஆலியா, முஹம்மத் இப்னு கஃப், ஸைத் பின் அஸ்லம், என்பவர்களும், ஈராக்கில், அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களது மாணவர்களான அல்கமா, மஸ்ரூக், ஹஸனுல் பஸரி, கதாதா, இப்றாஹீம் அந்நகஈ போன்றோரும் இக்கலையை வளர்த்துச் சென்றனர்.
இம்முபஸ்ஸிர் குழுவினர் ஒருவர் மற்றவருக்கு எதிராக இயங்கவில்லை. மாறாக, அனைவர் மத்தியிலும் சிந்தனை ஒருமைப்பாடு நிலவியது. ஈராக்கிய முபஸ்ஸிரீன்களைப் பொருத்தவரையில், அவர்கள் சிந்தனைக்கு முரண்படாதபோதும், தப்ஸீர் வழங்கும்போது பகுத்தறிவுக்கு சற்று கூடுதல் முக்கியத்துவத்தினை வழங்கினர். 'அஹ்லுர்ரஃயு' எனும் பகுத்தறிவு சிந்தனைக் குழுவுக்கான அடித்தலத்தினை ஈராக்கில் இப்னு மஸ்ஊத் (ரழி) அவர்களே அமைத்துக்கொடுத்தனர் என்பர். ஸஹாபாக்களது காலத்தில் அல்குர்ஆன் விளக்கவுரை வழங்கப்பட்ட வசனங்களைவிட அதிகமான வசனங்களுக்கு தாபிஈன்களது காலத்தில் விளக்கம் வழங்கினர். அது மாத்திரமன்றி, அவை எழுதியும் வைக்கப்படலாயின. ஆயின், அவை பெருமளவில் தமது ஆசிரியர்களின் விளக்கவுரைகளாகவே விளங்கியது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
தாபிஈன்கள் அல்குர்ஆனுக்கான விளக்கவுரை வழங்கும் போது, அல்குர்ஆன், சுன்னாவுடன் ஸஹாபாக்களது விளக்கங்களையும் வைத்து வழங்கினர். அஹ்லுல் கிதாபுகளாக இருந்து இஸ்லாத்தை ஏற்றவர்கள் அல்குர்ஆன் விளக்கங்களை வழங்கும்போது, தவ்றாத், இன்ஜீல் வேதங்களிலிருந்து பெற்ற விடயங்களையும் தமது விளக்கங்களில் சேர்த்துள்ளனர். இவர்களுக்கு உதாரணமாக, அப்துல்லாஹ் இப்னு ஸலாம், கஃப் இப்னு அஹபார், வஹப் இபனு முனப்பஹ், அப்துல் மலிக் இப்னு அப்துல் அஸீஸ் போன்றோரைக் குறிப்பிடலாம்.
முஹம்மது ஹூஸைன் அத்தஹபி அவர்கள் இதுபற்றிக் கூறும்போது, 'தாபிஈன்கள் காலத்தைய அல்குர்ஆன் விரிவுரையாளர்கள், அல்குர்ஆனில் தாம் விளங்கியவற்றையும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஸஹாபாக்களால் அறிவிக்கப்பட்டவற்றையும் ஸஹாபாக்கள் தாமாக அறிவித்த விளக்கங்களையும் வேதம் வழங்கப்பட்டவர்களிடமிருந்து தாம் அவர்களது வேதங்களிலிருந்து பெற்றுக் கொண்ட விளக்கங்களையும் அல்லாஹ் இஜ்திஹாத் மூலம் அவர்களுக்கு வழங்கிய ஆற்றலைக்கொண்டும் அவர்கள் அல்குர்ஆனுக்கான விளக்கங்களை வழங்கினர்' என குறிப்பிடுகிறார். (மபாஹிஸ் பீ உலூமில் குர்ஆன், பக். 349)
இவர்கள் தப்ஸீர் விளக்கம் வழங்கும்போது தமது முன்னைய வேதங்களில் காணப்பட்ட அம்சங்களையும் சேர்த்து விளக்கினர். இதன்போது அவை சரியானவையா இல்லையா என்று அவர்கள் பார்க்கவில்லை. இவர்கள் கூறிய பல சம்பவங்களை பிற்காலத்து முபஸ்ஸிரீன்கள் இட்டுக்கட்டப்பட்ட 'இஸ்ராஈலீயாத்'கள் என நிறுவியுள்ளனர். இதனை ஆய்ந்தறியாது முபஸ்ஸரீன்களில் பலர் இவ்வாதாரங்களை தமது தப்ஸீகளிளே எடுத்துக் கூறியுள்ளனர். இதற்கு உதாரணமாக, இப்னு ஹையான் எழுதிய, தப்ஸீர் இப்னு ஹையான், குர்துபி எழுதிய தப்ஸீர் குர்துபி போன்றவற்றைக் கூறலாம்.
தப்ஸீர் துறையின் அறிவுப்புக்கள் பலவீனப்பட்டமைக்கான காரணங்களாக,
1. தப்ஸீர் துறையில் அதிகம் இட்டுக்கட்டப்பட்டமை
2. இஸ்ராஈலீய்யாத் புகுந்தமை
3. அறிவிப்பாளர் வரிசைகள் நீக்கப்பட்டமை போன்றவற்றைக் குறிப்பிடலாம். (அத்தப்ஸீரு வல் முபஸ்ஸிரூன், பாகம் 1, பக்: 115)
எமக்குக் கிடைத்திருப்பவைளில் தாபிஈன்களது காலத்தைய அநேக விளக்கங்கள் இஜ்திஹாதைச் சார்ந்தவையே என 'மன்னாஉ கலீல் அல் கத்தான்' குறிப்பிடுகிறார்.
அக்காலம் வரையான தப்ஸீர்கலை ஹதீஸ் கலையுடன் இணைந்த ஒரு கலையாக இருந்து, தனிக்கலையாக எப்போது பிரிந்தது என்பதில் அறிஞர்களுக்கு மத்தியில் கருத்து வேறுபாடு நிலவுகிறது. ஆரம்பகால தப்ஸீர்கள் ஆய்வாளர்களுக்கு கிடைக்காமையே இக்கருத்து வேறுபாடுகளுக்கு அடிப்படைக் காரணமாகும். தாபிஈயான ஹிஜ்ரி 94 இல் மரணித்த ஸஃத் இப்னு ஸூபைர், ஹிஜ்ரி 90 இல் மரணித்த அபூல் ஆலியா ஆகிய இரவரில் ஒருவரே முதன்முதல் தப்ஸீரை ஒரு தனி நூலாக எழுதியிருக்கலாம் என்பர். அதாவது, ஹிஜ்ரி முதல் நூற்றாண்டின் இறுதித்தசாப்தத்தில் தப்ஸீர் தனிக்கலையாக ஹதீஸ் காலையிலிருந்து பிரிந்து வளர்ச்சிகாண ஆரம்பித்திருக்கிறது என்பதாகும்.
ஹிஜ்ரி இரண்டாம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட தப்ஸீரின் பதிவுக்காலம் (அஸ்ருத் தத்வீன்)
இக்காலப்பகுதியானது உமையாக்களது இறுதிக்காலத்துடனும் அப்பாசியர்களது ஆரம்ப காலத்துடனும் ஆரம்பிக்கிறது. இக்காலப்பகுதிலேயே ஹதீஸ் பல்வேறு பிரிவுகளாக பதிவு செய்யும் நிலை பூரணத்துவம் பெறுகிறது. எனவே, தப்ஸீர் ஹதீஸ் நூல்களில் ஒரு தனிப்பிரிவாக அமைகின்றது. ஆனால், ஆரம்பத்தில் ஒவ்வொரு சூராவுக்கும், வசனத்துக்குமென அல்குர்ஆனின் ஆரம்பம் முதல் இறுதி வரையில் விளக்கமளிக்கும் முறை காணப்படவில்லை.
இக்காலத்தில் ஒழு குழுவினர் இப்பணியில் ஈடுபட்டு, நபி (ஸல்), ஸஹாபாக்கள், தாபிஈன்களால் வழங்கப்பட்ட தப்ஸீர்களை ராவியின் அடிப்படையில் திரட்டும் பணியில்; ஈடுபட்டனர். அவர்களில் முதன்மையானவர்களாக, யஸீத் இப்னு ஹாரூன் அஸ்ஸலமி(ஹி.117 இல் மரணம்), ஷூஃபா இப்னு ஹஜ்ஜாஜ் (ஹி 160 இல் மரணம்), வகீஃ இப்னுல் ஜரஹ் (ஹி.197 இல் மரணம்) சுப்யான் இப்னு உயைனா (ஹி.198 இல் மரணம்), ரூஹ் இப்னு உபாதா (ஹி.205 இல் மரணம், அப்துர் ரஸ்ஸாக் இப்னு ஹம்மாம் (ஹி.211 இல் மரணம்), ஆதம் இப்னு அபீ இயாஸ் ( ஹி.220 இல் மரணம்), அப்திப்னு ஹமீத் (ஹி.249இல் மரணம்) போன்றோரைக் குறிப்பிடலாம்.
ஆயினும், இவர்களது தப்ஸீர் விளக்கங்களில் எதுவும் இன்று காணக்கிடைப்பதில்லை. மாறாக, தப்ஸீர் பில் மஃதூர்களில் இவர்களது அறிவிப்புக்கள் காணப்படுகின்றன.
இவர்களுக்கு அடுத்த கட்டமாகத்தோன்றிய தப்ஸீரை மாத்திரம் உள்ளடக்கிய விளக்கவுரைகளை வழங்கி 'முஸ்ஹப்' அடிப்படையில் வழங்கிய விரிவுரையாளர்களில் இப்னுமாஜா, இப்னு ஜரீர் அத்தபரி, அபூபக்கர் அல்முன்திர், இன்னு அபீP ஹாதம்இப்னு ஹிப்பான், அல்ஹாகிம் போன்றோரைக் குறிப்பிடலாம். இவர்களது விளக்கவுரைகள் நபி (ஸல்), ஸஹாபாக்ககள், தாபிஈன்கள், அத்பாஇத் தாஈன்களின் விளக்கவுரைகளை இஸ்னாத் அடிப்படையில் தொகுத்தளித்திருந்தனர்.
இவர்களைத் தொடர்ந்து வந்த பரம்பரையில் வந்த முபஸ்ஸிர்கள் 'தப்ஸீர் பில் மஃதூரின்' எல்லையைத் தாண்டவில்லை. ஆயினும், அவர்கள் தமது தப்ஸீர் விளக்கங்களை இஸ்னாத் அடிப்படையில் தொகுத்திருந்தனர். அவர்களது தொகுப்பில் ஸஹீஹ், ழஈப் வித்தியாசம் இன்றி அனைத்தும் இடம்பெற்றிருந்தன.
இக்காலத்தவர்களுள் இஸ்மாஈல் அஸ்ஸூதி, அல்கல்பி, முஹாதில் இப்னு ஹையான், முஹாதில் இப்னு ஸூலைமான் என்போர் குறிப்பிடத்தக்கோராவர். இவர்களால் எழுதப்பட்ட தப்ஸீர்களில் பல இன்று கிடைப்பதில்லை. இன்று ஆய்வாளர்களுக்குக் கிடைக்கக்கூடிய மிகப் பழைய தப்ஸீர்கள், முஜாஹித் இப்னு ஜபர் அல்மக்கி, ஸைத் பின் அலி, முஹாதில் இப்னு சுலைமான் என்பவர்களது தப்ஸீர்களாகும். எனினும், பரவலாகக் கிடைக்கும் தப்ஸீர் ஜரீர் அத்தபரி எழுதிய 'ஜாமிஉல் பயான் அன் தஃவீலில் குர்ஆன்' என்பதாகும்.
ஹிஜ்ரி 4ஆம் நூற்றாண்டாகும் போது தப்ஸீர் கலை ஹதீஸ் கலையிலிருந்து பிரிந்து முழுமைபெற்றதொரு தனிக்கலையாக விளங்குவதை காணலாம். இப்னுமாஜா, ஜரீர் அத்தபரீ, இப்னு அபீ ஹாதம் முதலானவர்கள் எழுதிய தப்ஸீர்கள் ஹதீஸ் தொகுப்புக்களிலிருந்து வேறுபட்டு தனித்தப்ஸீர்கள் என்று இனங்காட்டத்தக்கதாக முழுமை பெற்றிருந்ததையும் அவதானிக்க முடிகிறது. இக்காலப்பகுதியில் ஏற்பட்ட ஹதீஸ் கலைத்துறை வளர்ச்சி, சட்டக்கலை வளர்ச்சி என்பன காரணமாக ஸஹீஹான ஹதீஸ்களைப் பெறும் வழிமுறை நன்கு பிரபலமடைந்தது. இதன்காரணமாக, தப்ஸீர் கலையும் இக்காலப்பகுதியில் ஆதாரமுள்ள ஹதீPஸ்களைக் கொண்டே வளர்ச்சி கண்டது. அனைத்து முபஸ்ஸிர்களும் ஹதீஸ்கலை பற்றிய அறிவுடையவர்களாக இருந்தனர் என்பதும் நோக்கத்தக்கதாகும்.
தப்ஸீர் கலையின் இவ்வளர்ச்சிக்கட்டத்தில் தப்ஸீர் விளக்கவுரையாளர்கள் பின்வரும் இருவழிமுறைகளைக் கொண்டே விளக்கமளித்தனர்.
01. நபி (ஸல்) அவர்களிடமிருந்தும், ஸஹபாக்களிடமிருந்தும் பெற்ற விளக்கங்களை அடிப்படையாகக் கொண்டு விளக்கமளித்தல் முதல் வழிமுறை. இதனை 'தப்ஸீர் அந்நக்லி' அல்லது 'அத்தப்ஸீர் அல்மஃஸூர்' எனக்கூறுவர்.
இதற்கு உதாரணமாக,
1. இப்னு அப்பாஸ் (ரழி) அவர்களின் அறிவிப்புகள் சுட்டிக்காட்டும் தப்ஸீர் விளக்கம். 2. தப்ஸீர் இப்னு அதீயா
3. இமாம் ஸூயுதியின் அத்துர்அல்மன்ஸூர் பித்தப்ஸீர் அல் மஃஸூர்
4. அபுல் லைஸ் அஸ்ஸமர்கந்தியின் அத்தப்ஸீர் பஹ்ர்அல்உலும்
5. அபுல் இஸஹாக் எழுதிய அல்கஷ்புல் பயான் அன் தப்ஸீரில் குர்ஆன்
6. இமாம் இப்னு ஜரீர் அத்தபரியின் ஜாமிஉல் பயான் பீ தப்ஸீரில் குர்ஆன்7. இப்னு கஸீர் எழுதிய தப்ஸீருல் குர்ஆனில் அழீம்
8. ஷவ்கானி எழுதிய பத்ஹ் அல்கதீர் போன்றவற்றைக் குறிப்பிட முடியும்
2. தமது சிந்தனையைப் பயன்படுத்தி, குர்ஆன் வசனங்களுக்கு விளக்கமளிப்பது அடுத்த வழிமுறையாகும். இவ்வழிமுறை 'அத்தப்ஸீர் பிர்ரஃயு' என வழங்கப்படுகிறது. சுய சிந்தனை அடிப்பபடையிலான விளக்கங்கள் வெறும் ஊகங்களின் அடிப்படையில் அமைவது அனுமதிக்கப்படுவதில்லை. 'எவன் ஒருவன் தனது சொந்த சிந்தனையின் வழியில் அல்லது தனது அறியாமையின் காரணமாக அல்குர்ஆனுக்கு விளக்கமளிக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்கின்றான்' (திர்மிதி, நஸாஈ, அபூதாவுத்)
இதனால், சுய சிந்தனை வழியிலான தப்ஸீர் அல்குர்ஆனிலும் சுன்னாவிலும் ஆழ்ந்த ஈடுபாடு கொண்டதன் காரணமாக பெற்றுக்கொண்ட இஸ்லாமிய சிந்தனை வழி நின்ற விளக்கமாக இருப்பது அவசியமாகும். இத்தகு தப்ஸீர்கள் பல்வேறு துறை சார்ந்ததாகம் எழுதப்பட்டது. இதற்கு உதாரணமாக பின்வருவனவற்றைக் குறிப்பிடலாம்.
1. மொழியியல் சார்ந்த தப்ஸீர்கள் :
முஹம்மத் இப்னு உமர் அஸ்ஸமாஃஸரி எழுதிய அல்கஷ்ஷாப்
அபூ ஹையான் எழுதிய தப்ஸீர் அல் பஹ்ர்அல் முஹீத் போன்றவற்றைக் குறிப்பிடலாம்.
2. தத்துவம், மெய்ஞ்ஞானம் தொட்பானவை
பஹ்ருத்தீன் ராசி எழுதிய மபாதிஹூல் கைப்
அல் ஃகாதின் எழுதிய அல்லுபாப் பீமஆனீ அத்தன்ஸீல் போன்றவற்றைக் குறிப்பிட முடியும்.
3. அல்குர்ஆனின் சட்டவாக்கம் தொடர்பானவை
இப்னுல் அரபி அல்மாலிகி எழுதிய அஹ்காமுல் குர்ஆன்
அல்குர்துபீ எழுதிய தப்ஸீர் அல் குர்துபீ என்பவற்றை உதாரணமாக கூறலாம்
4. தப்ஸீர் பிர்ரஃயு, தப்ஸீர் பில்மஃதூர் ஆகிய இரண்டையும் பொத்தமான சந்தப்பத்தில் பயன்படுத்தும் தப்ஸீர்களும் காணப்படுகின்றன.
இப்னு கஸீர் எழுதிய தப்ஸீர் அல்குர்ஆனில் அழீம்
ஷவ்கானி எழுதிய பத்ஹ் அல்கதீர் போன்றனவற்றை உதாரணமாகக் காட்டலாம்.
அப்பாசியர் காலத்தில் எழுச்சி பெற்ற அறிவியல் துறை வளர்ச்சி ஏனைய எல்லாத் துறைகளையும் போல தப்ஸீர் கலையிலும் தாக்கம் செலுத்தியது.
ஆரம்பத்தில் ஸஹாபாக்களது காலத்தைப் பொருத்தவரையில், அவர்களுக்கு நீண்ட விளக்கம் அவசியப்படவில்லை. எனவே, அவை மிக எளிமையானவையாகக் காணப்பட்டன. ஆனால், சாம்ராஜ்ய விஸ்தரிப்பின் விளைவாக பல கலாசாரங்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளவேண்டிய நிலை ஏற்பட்டதால் தப்ஸீர் கலையும் அப்புதிய சூழலை எதிர்கொள்ளும் அமைப்பில் வளர்ச்சிகண்டது.
ஆயினும், இவர்களது காலத்தில் எழுதப்பட்ட தப்ஸீர்கள் அறிஞர் குழாத்தை உள்ளடக்கிய வாசகர் வட்டத்தினை மையப்படுத்தி எழுதப்பட்டதாகும். அதனை ஓரளவேனும் சமயப்பின்னணியும், மொழி ஆற்றலும் உள்ளவர்களால் மாத்திரமே விளங்கக் கூடியதாக இருந்தன.
அரபு மொழியைத் தாய்மொழியாகக் கொண்ட பல சமுகங்கள் இஸ்லாத்தை ஏற்றமையினால் அல்குர்ஆனை அவர்களுக்கு விளக்க நீண்ட, பெரு விளக்கங்கள் அவசியப்பட்டன. இராச்சிய வியாபகத்துடன் மத்திய தர வகுப்பினர் தோற்றம் பெற்றமையால், அவர்கள் தமக்குக் கிடைத்த கால அவகாசத்தைப் பயன்படுத்தி அல்குர்ஆன் பற்றிய ஆய்வுகளை மேற்கொண்டனர். எனவே, இதுகாலவரைக்கும் மனித நடத்தைகளை சீராக்குவதற்கான வாழ்க்கை வழிகாட்டியாக கருதப்பட்ட அல்குர்ஆன், அதுமுதல் ஆய்வுக்குரிய நூலாகக் கருதப்படக்கூடிய போக்கு உருவானது . அல்குர்ஆனை, அதன் போதனைகளை நடமுறைப்படுத்திய ஸஹாபாக்களின் போக்குக்கு மாற்றமாக, குர்ஆனியப் போதனைகளின் உண்மைத்தன்மையை, அதன் மகிமையை, அட்புதத் தன்மையை எடுத்துக்காட்டும் போக்கு வளர்ச்சி கண்டது.
அல்குர்ஆனுக்கு விளக்கமளிக்கும் அல்குர்ஆன் வசனங்களும் ஹதீஸ்களும் மிக சொற்பமாக காணப்பட்டமையால், அக்கால பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்கும் வகையில் பகுத்தறிவைப் பயன்படுத்தி விளக்கமளிக்கும் வாய்ப்பை அது அதிகரித்தது.
இக்காலப்பகுதியிலேயே அல்குர்ஆனின் ஒவ்வொரு வசனத்துக்குமாக தப்ஸீர் எழுதும் முறை வளர்ச்சி கண்டது. இதனால் பல விரும்பத்தகாத அம்சங்கள் தப்ஸீரில் புகுந்தன. உதாரணத்திற்காக, அக்காலத்து ஒவ்வொரு சிந்தனைக்குழுவும் தப்ஸீரின் ஊடாக தமது சிந்தனைகளை நிறுவ முயற்சித்தனா. ஆதரபூhவமற்ற ஹதீஸ்களைக் கையாண்டமை, கிரேக்க தத்துவஞான சிந்தனைகளை உள்ளடக்கி அல்குர்ஆன் விரிவுரை எழுதியமை, இஸ்ராஈலிய்யாத்களை தமது தப்ஸீர்களில் ஆய்வின்றி உற்படுத்தியமை, போன்றவற்றைக் குறிப்பிடலாம். எனவே, இவற்றை சுட்டிக்காட்டி குர்ஆன் அருளப்பட்ட இலட்சியத்தை முன்னிருத்தி செயற்படத்தூண்டும் பணிகளை நவீன கால முபஸ்ஸிர்கள் மேற்கொண்டனர். அத்துடன், 19 ஆம் நூற்றாண்டு முதல் முபஸ்ஸிர்கள் தாம் வாழும் சூழலில் தாம் எதிhகொண்ட பிரச்சினைகளை அல்குர்ஆனின் நிழலில் விளக்கவும் இவர்கள் முற்படுகின்றனர்.
நவீன காலத்தில் தப்ஸீர் கலை
19 ஆம் நூற்றாண்டின் பிபகுதி முதல் முஸ்லிம் பிரதேசங்கள் பல ஐரோப்பியரின் ஆளுகைக்குட்படுகின்றது. இதனால், அப்பகுதிகளில் இதுகாலவரை இருந்த மரபுரீதியான கல்விப்போதனை முறைகள் மாற்றங்கண்டு, ஐரேப்பிய பாணியிலான நவீன கல்வி முறை வழக்குக்கு வந்தது. அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கபட்டமையும் புதிய இலக்கிய வடிவங்கள், உரைநடைகள் என்பனவற்றின் வளர்ச்சியும் தப்ஸீர் துறையிலும் புதிய மாற்றங்களைக் கொண்டுவந்தன.
இக்கால தப்ஸீர்களின் சிறப்புகளில் முக்கியமானது, அவை சாதாரண வாசகர்களுக்கும் விளங்கக் கூடிய இலகு மொழிநடையில் எழுதப்பட்டமையாகும். அச்சுவசதிகளும் மலிவு விலையும் காரணமாக தப்ஸீர்கள் சாதாரண மக்களையும் சென்றடைய வாய்ப்பேற்படுத்தின. இதனால், தப்ஸீர் பொதுமக்களிடையேயும் பிரபல்யமடைய ஆரம்பித்தன. நவீன காலத்தில் காலனித்துவத்துக்கு உட்பட்ட இஸ்லாமிய நாடுகளில், அரசியல், ஒழுக்கவியல், பொருளியல், கலாசார, பண்பாட்டியல் ரீதியாக முஸ்லிம்களுக்கு மத்தியில் தோன்றிய பிரச்சினைகளை முஸ்லிம்கள் எதிகொள்ளும் வகையிலான தப்ஸீர்களும் தோற்றம் பெற்றன. இத்துறையில் திருப்பமொன்றை ஏற்படுத்தி, நவீன தப்ஸீர் துறையில் புரடசியை ஏற்படுத்தியவராக இமாம் முஹம்மத் அப்துஹூ அவர்களையும் அவரது தப்ஸீரைப் பூரணப்படுத்திய ரஷீத் ரிழா அவர்களையும் குறிப்பிடலாம். அவர்களைத் தொடர்ந்து அத்துறையில் குறிப்பிடத்தக்கவர்களே, முஹம்மத் முஸ்தபா அல்மராகீ, முஹம்மத் இஸ்ஸத் தரூஸா, ஸையித் குதுப், மௌலானா மௌதூதி ஆகியோராவர்.
இத்தகு தப்ஸீர்கள், அல்குர்ஆனின் அறிவியல் ஆழத்தை எடுத்துக் காட்டுவதாகவன்றி, அல்குர்ஆனின் போதனைப்படி சமுக வாழ்வைக் கட்டியெழுப்புவதன் அவசியம் குறித்து வலியுறுத்துவதாய் அமைகின்றன.
இவை தவிர, அண்மைக்காலத்தில் அல்குர்ஆனில் பல இடங்களிலும் பரவிக்கிடக்கும் ஒரு தலைப்பின் கீழான வசனங்கள் அனைத்தையும் ஒன்றுதிரட்டி அது கூற வரும் கருத்தை விளக்கி, அவ்வாயத்துக்கள் கூற வரும் உண்மையான கருத்துக்களையும், அதன் இலட்சியங்களையும் புரிந்துகொள்ளும் வகையிலான தலைப்பு வாரியான தப்ஸீர்கள் 'அத்தப்ஸீர் அல்மவ்ழூஈ' என்ற பெயரில் அல்குர்ஆனுக்கு விளக்கம் கூறும் மரபு முக்கியத்துவம் பெற்று வருகின்றது. இவ்வணுகு முறை ஆரம்பகாலம் தொட்டு இருந்து வரினும், அண்மைக்காலங்களிலேயே அது பிரபல்யம் பெற்று வருகின்றது. 20ஆம் நூற்றாண்டு அறிஞர் முஹம்மத் ஷல்தூத் எழுதிய, 'தப்ஸீருள் குர்ஆனில் கரீம்' என்ற தப்ஸீர் இதற்கு சிறந்த உதாரணமாகும்.
நவீன காலத்தில் தொழில்நுட்ப சாதனங்களின் வித்தியின் காரணமாக தப்ஸீர் கலை புதிய பரிணாமமெடுத்துள்ளது. சாதாரணமாக, ஒரவரால் தேடியறிந்து கொள்ள சிரமப்படும் பல்துறை சார், பல கலை சார்ந்த தப்ஸீர்களையும் இன்றைய சூழலில் மனிதனுக்கு கணிணியின் வாயிலாக பெற்றுக்கொள்ள முடியும். இருவட்டுக்கள் மூலமும், வலைபிண்ணலின் ஊடாகவும் தான் விரும்பும் அல்குர்ஆன் விளக்கவுரைகளை பெற்றுக்கொள்ள வாய்ப்பாக உள்ளது.
ஆயினும், தமிழ் மொழியில் காணப்படும் தப்ஸீர்களின் எண்ணிக்கையை நோக்கினால், மிக விரல்விட்டு எண்ணக்கூடியளவு அல்குர்ஆன் விளக்கவுரைகளே காணப்படுகின்றன. அவற்றிலும், கிடைக்கும் சில விளக்கவுரைகளும் கூட ஒரு சில அத்தியாயங்களுக்கு மாத்திரமே மொழிமாற்றப்பட்டும், எழுதப்பட்டுமுள்ளன என்பது கவளை தரும் விடயமாகும்.
அத்தோடு, நவீன கால அல்குர்ஆன் விளக்கவுரைகளைப் பொருத்தளவில், அவை, நவீன காலத்துக்கு ஏற்றாற் போல அமைவது அத்தியவசியமாகும். 'இஸ்லாம் பாலைவன்திற்குப் பொருத்தமானது' என்ற மேற்கத்தையரது சிந்தனைபோன்று அல்லது 'இஸ்லாம் உலகிற்கு வந்து ஆயிரம் வருடங்களைத் தாண்டிதால் அது காலம் கடந்தது' என்ற பஹாயிஸவாதிகளது கருத்தை அல்குர்ஆன் விளக்கவுரைகள் பொய்;ப்பிக்கும் வகையில், இஸ்லாம் எக்காலத்திற்கும் பொறுத்தமானது என்ற கருத்தின் அடிப்படையில் நவீன உலகின் சவால்களுக்கு முகங்கொடுக்கும் வகையிலாக அல்குர்ஆன் விளக்கவுரைகள் அமையப்பெற வேண்டும்.
அல்குர்ஆன் கூறவரும் மையக்கருத்துக்கு முரண்படாதவகையில் நவீனத்துவத்தின் சவால்களுக்கேற்ற அமைப்பில் அதற்கு வியாக்கியானம் வகுக்க வேண்டும். உதாரணமாக, அன்று நபி (ஸல்) அவர்கள், 'நீங்கள் உங்களுக்கு முடியுமான அளவு (போராடுவதற்கான) சக்தியைத் திரட்டிக்கொள்ளுங்கள்' (8:60) என அல்குர்ஆன் கூறியபோது, நபியவர்கள் அதற்கு, 'பலம் என்பது அம்பெரிதலாகும்' என விளக்கம் வழங்கினார்கள். ஆனால் இன்றைய நவீன யுகத்தில் 'அம்பெரிதல்' என்ற நடைமுறை பிரயோசனமற்ற ஒன்றாகும். எனவே, இவ்வசனத்திற்கு நவீன முறையில் எரியும் ஏவுகணைகளை உதாரணமாகக் கூற இவ்வாறு, அல்குர்ஆனின் திட்டவட்டமில்லாத வசனங்களுக்கு விளக்கம் கூற முற்படும் போது, அல்குர்ஆனின் மையக்கருத்துக்கு முரண்படாத வகையிலும் மனோ இச்சைகளளிலிருந்து தூரமாகியும் தாம் சார்ந்துள்ள கருத்து, கொள்கை வழி சாராதும் நடுநிலை நின்று அல்குர்ஆனுக்கு விளக்கம் கூறுவது இன்றியமையாத அம்சமாகும்.
முற்கால தப்ஸீர்களில் இஸ்ராஈலீய்யாத்கள், போலி, ஹதீஸ்கள் போன்றன இடம்பெற்றுள்ளன. இன்றைய தொழில்நுட்பம் வளர்ந்துள்ள காலத்தில் அவற்றை அடையாளம் காண்பது மிக இலகு என்றவகையில் அவற்றை தவிர்த்து, ஸஹீஹான ஆதாரங்களை மாத்திரம் உள்ளடக்கி இன்றைய தப்ஸீர்கள் அமையப் பெறுவது காலத்தின் தேவையாகும்.
அத்தோடு, பிற்கால முபஸ்ஸிர்களில் சிலர் முயற்சி செய்துள்ளதைப் போன்று, கிரேக்க, பாரசிக தத்துவக்கலை, மொழி அலங்காரம், சூபிச சிந்தனை, பணகத்தறிவு ரீதியிலான ஆராய்ச்சி, விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் என்பனவற்றுக்கு மையத்தலமாக அல்குர்ஆன் விரிவுரைகளைக் காண்பித்து தப்ஸீரின் இரண்டாந்தர நோக்கத்தினை மாத்திரம் பூரணப்படுத்தாமல், காலத்தின் தேவைகளைக் கருத்திற் கொள்வதுடன், 'மனிதகுலத்தை நேர்வழிப்படுத்தும் ஒரு வழிகாட்டி' என்ற சிந்தனை சிதறாத வண்ணம் அல்குர்ஆன் விளக்கவுரைகள் அமைந்து காணப்படுவது இன்றைய காலத்தின் தேவையாகும்.
முடிவுரை
தப்ஸீர் துறையின் தோற்றம், அதன் வளர்ச்சி தொடர்பாக தமிழ் மொழியில் காணப்படும் ஆய்வுகள் மிக குறைவாகும். மிக நீண்ட ஆய்வுளை வேண்டி நிற்கும் இந்த தலைப்பில் அரபு மற்றும் ஏனைய மொழிகளில் ஏராளமான ஆக்கங்கள் வெளிவந்துள்ளன.
மனித வாழ்வுக்கு இறுதி நாள் வரையில் வழிகாட்ட வந்திருக்கும் அல்குர்ஆன் அன்றைய பாலைவனச் சூழலில் இறங்கியிருந்தாலும், அது நாகரிகத்திலும், விஞ்ஞான வளர்ச்சியிலும் உச்சக்கட்டத்தை அடைந்துள்ள இந்த நவீன யுகத்திற்கும் பொருந்தக்கூடிய வகையில் காணப்பட வேண்டுமானால், அது காலவோட்டத்திற்கேற்றாற் போல விளக்கப்படவேண்டும். அன்று 'அம்பெரிதல்' என்று விளக்கப்பட்ட வசனம் இன்று, 'ஏவுகனை எரிதல்' என்ற பாணியில் விளக்கப்படல் வேண்டும்.
அல்குர்ஆனின் எந்தவொரு வசனமும் இன்றைய நவீன உலகத்திற்குப் பொருந்தாத, அன்றைய பாலைவனத்திற்குப் பொருத்தமானதாக அமைந்திருப்பதில்லை. இதற்குக் காரணம், அதன் ஒவ்வொரு வசனமும் எல்லா சூழழுக்கும் பொருந்தும் வகையில் விளக்கமளிப்பதற்கு ஏற்றாற்போல அமைந்து காணப்படுவதேயாகும்.
எனவே, அல்குர்ஆன் விளக்கங்கள், அதன் ஆன்மீகப் பரிமானத்தை இழந்துவிடாமலும், அறிவியல் நூலாக மாத்திரம் நோக்கப்படாமலும், அது இறங்கிய நோக்கம் மறக்கப்படாமலும் எல்லா மக்களையும் சென்று சேரும் வகையிலான விளக்கங்கள் காலத்தின் தேவையாகும்.
இந்த நோக்கங்களுடன் கூடிய பல தப்ஸீர்கள் தமிழ் மொழியிலும் கூட வெளியிடப்படல் வேண்டும். இன்று தமிழ் மொழியில் காணப்படும் விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலுள்ள தப்ஸீர்களும்கூட அரபு மொழி பெயர்;ப்புகளாகவும், அவையும் கூட சிற்சில அத்தியாயங்களுடன் மட்டுப்படுத்தப்பட்டதாயும் காணப்படுவது மிகப்பெரும் துர்ப்பாக்கியமாகும்.
தமிழ் பேசும் மக்களில் அரபுமொழியிலும் அல்குர்ஆனியக் கலைகளிலும் பாண்டித்தியம் பெற்றவர்கள் உருவாக்கப்பட வேண்டும். அவர்கள் தமது தாய் மொழியில் தமிழ் பேசும் மக்களுக்காக தப்ஸீர் விளக்கங்களை கால சூழ்நிலைகளுக்கேற் நவீன தப்ஸீகளை உருவாக்கிட வேண்டியதும் காலத்தின் தேவையாகும். இமாம். மௌலானா மௌதூதி அவர்கள் உருது மொழி பேசும் வாசகர்களுக்காக எழுதிய தப்ஸீர் விளக்கமான 'தப்ஹீமுல் குர்ஆன்' ஐ இதற்கு உதாரணமாகக் காட்டலாம்.
எனவே, இந்த நோக்கத்தினை பூர்த்திசெய்யும் பாக்கியசாலிகளை அல்லாஹ் எம்மிலிருந்து தேரிவுசெய்வானாக! ஆமீன்!
உசாத்துணைகள்
01. அமீன், எம்.ஐ.எம்., இஸ்லாமிய சட்டக்கலை மூலாதாரங்கள், முதல் பதிப்பு,
2006, மாவனல்லை.
02. ஆசிரியர் அறிவுரைப்பு வழிகாட்டி, இஸ்லாம் தரம்-12, சமுகக் கல்வித் துறை,
கல்வி வெளியீட்டுத் திணைக்களம், தேசிய கல்வி நிறுவகம், மகரகம.
03. மன்னாஉல் கத்தான், மபாஹிஸ் பீ உலூமில் குர்ஆன், மூன்றாம் பதிப்பு,
2000, மக்தபதுல் மஆரிப் வெளியீடு, ரியாத்.
04. கலாநிதி. முஹம்மது ஹூஸைன் அத்தஹபீ, அத்தப்ஸீர் வல்முபஸ்ஸிரூன்,
முதலாம் பாகம், ஏழாம் பதிப்பு, 2000, மக்தபது வஹ்பா, அல்காஹிரா.
05. காலநிதி. அப்துர்ரஹ்மான் பின் ஸாலிஹ், அல்அக்வாலுஷ்ஷாத்தா பித்தப்ஸீர் நஷ்அதுஹா வஅஸ்பாபுஹா வஆஸாருஹா, முதல் பதிப்பு, 2004, அல்புஹாரி
இஸ்லாமிக் சென்டர், இங்கிலாந்து.
Usefull
ReplyDeleteVery Useful...Put like this essays all that you are explaining chapters
ReplyDeleteYes very useful
Delete