இலங்கையின் காலநிலை மாற்றங்கள்
அறிமுகம் :
காலநிலை மாற்றமானது, நீண்ட காலம் தொட்டு (சாதாரணமாக பல தசாப்பங்கள் அல்லது அதை விடவும் கூடுதலான காலம்) காலநிலையின் பொதுவான நிலையான தன்மையில் அல்லது அதில் மாற்றத்தில் புள்ளிவிபர ரீதியிலான முக்கிய மாற்றங்கள் எனப் பொருள்படும். காலநிலை மாற்றங்கள் இடம்பெறுவதற்கு இயற்கையான உள் செயற்பாடுகள் காரணமாக அல்லது வெளித் தாக்கங்கள் காரணமாக அல்லது வளிமண்டலத்தில் மனிதர்கள் தொடர்ச்சியாக மேற்கொள்கின்ற மாற்றங்கள் அல்லது பூமியை பயன்படுத்துவதில் ஏற்படுகின்ற மாற்றங்கள் என்பன மூலம் இடம்பெறலாம். (IPCC, 2001)
கைத்தொழில் புரட்சியின் பின்னர் அதிக எரிபொருள் பாவனை மற்றும் பூமியின் பயன்பாட்டுச் செயற்பாடுகளின் மாற்றங்கள் (முக்கியமாக ஏற்படுகின்ற மாற்றங்கள்) கைத்தொழில்களில் இருந்து நச்சு வாயுக்களை வெளியிடல் போன்ற மனித செயற்பாடுகளின் பிரதிபலனாக மிகவும் துரிதமாக காலநிலை மாற்றங்கள் இடம்பெற்று வருகின்றன. துரிதமாக அதிகரித்து வருகின்ற பச்சை வீட்டு விளைவின் காரணமாகவும் வளிமண்டலத்தில் பூகோள வெப்ப நிலையானது அதிகரித்துள்ளது. பச்சை வீட்டு விளைவின் காரணமாக பூமியின் மேற்பரப்பிலே பூகோள வெப்ப நிலையானது சாதாரண நிலையிலும் பார்க்க (அதாவது 19 0 C இற்குப் பதிலாக சராசரி மேற்பரப்பு வெப்ப நிலையானது 14 0 C) 30 0C வரையில் வெப்பமடைவதுடன், இதன் மூலம் உயிரியல் தன்மைகள் அழிந்துவருகின்றன. இயற்கை வளிமண்டலத்தில் இவ்வாறு அதிகரித்து வருகின்ற பச்சை வீட்டு விளைவிற்கு காரணமாக அமைகின்ற வாயுக்களாக நீராவி(H2O), காபன்டயொக்சைட் (CO2), நைட்ரஸ் ஒக்சைட் (N2O), மீதேன் (CH4), ஓசோன் (O3), ஹைட்ரோபுளோரோ காபன் (HFC5), சல்பர் ஹெக்சாபுளோரைட் (SF6) மற்றும் பர்ப்புளோகாபன் (PFC5) என்பன காரணமாக அமைகின்றன. மனித வாழ்க்கையினை மிகவும் சுகபோகமாக அமைத்துக் கொள்வதற்காக மேற்கொள்ளப்படுகின்ற மனித செயற்பாடுகள் அதிகரித்துள்ளமையால் வளிமண்டலத்தில் CO2 செரிவானது கைத்தொழில் மயமாவதற்கு முற்பட்ட காலத்தில் 280 ppm இருந்து இன்று 365 ppm வரையில் அதிகரித்துக் காணப்படுகின்றன.
மழைவீழ்ச்சி மாற்றம்
1931 முதல் 1960 வரையிலான ஆண்டு (சந்திரபால 1997) காலப்பகுதியுடன் ஒப்பிடும்போது 1961 முதல் 1990 வரையிலான காலப் பகுதியில் நடைமுறையில் காணப்பட்ட 234 மி.மி. முதல் 265 மி.மி. வரையில் அதிகரித்துவரும் இலங்கையின் வருடாந்த மழை வீழ்ச்சியானது 177 மி.மி. ஆல் அதாவது சுமார் 7% வீதத்தால் குறைந்துள்ளது. வடகீழ் பருவக்காற்று மழை வீழ்ச்சியானது 1931-1960 வரையிலான காலப் பகுதியின் நிலையிலிருந்து 1961-1990 வரையான காலப் பகுதி வரையில் அதிகரித்துவரும் வித்தியாசத்தால் குறைந்துள்ளது. தென்மேல் பருவக்காற்றானது இந்தக் காலப் பகுதியினுள் குறிப்பிடத்தக்களவு மாற்றத்தினைக் கொண்டிராத போதிலும் அடிக்கடி மாறும் தன்மையில் 1931 - 1960 வரையிலான காலப் பகுதியுடன் ஒப்பிடுகையில் 1961 – 1990 வரையிலான காலப் பகுதியில் குறைந்துள்ளது. ஏனைய காலநிலை அவதான நிலையங்களுடன் ஒப்பிடுகையில் மட்டக்களப்பு, குருநாகல் மற்றும் இரத்தினபுரி ஆகிய காலநிலை அவதான நிலையங்களில் இருந்து அண்மைக் காலத்தில் வருடாந்த மழை வீழ்ச்சியிலே குறிப்பிடத்தக்களவு உயர் மாறுபடும் தன்மையொன்று பதிவாகியுள்ளது. (வரைபடம் 01) கடந்த நூற்றாண்டு காலப் பகுதியினுள் வருடாந்த மழை வீழ்ச்சியில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றம் ஒன்றினைக் காணக்கூடியதாக இல்லை. வளிமண்டலத்தின் பச்சை வீட்டு விளைவானது அதிகரித்தமையால் பூகோள காலநிலை மாற்றம் இடம்பெறுகின்றமை மழை வீழ்ச்சி முறைமைகளில் பரந்தளவில் மாற்றடைவதற்குக் காரணமாக அமையலாம்.
வெப்பநிலை மாற்றம்
இலங்கையிலே வளிமண்டலத்தின் வருடாந்த சராசரி வெப்ப நிலை மாற்றமானது கடந்த சில தசாப்தங்களாக குறிப்பிடத்தக்களவு அதிகரிப்பினைக் காட்டி நிற்கின்றது. (பஸ்நாயக்க உட்பட மேலும் சிலர் 2012) 1961 - 1990 வரையிலான கால கட்டத்தில் சராசரி வளிமண்டல வெப்ப நிலையின் அதிகரிப்பு வேகமானது வருடாந்தம் 0.016C முறையே அதிகரித்துள்ளது. (சந்திரபால 1996) பெரும்பாலும் அனைத்து காலநிலை அவதான நிலையங்களிலும் வளிமண்டலத்தின் சராசரி வெப்ப நிலை அதிகரிப்பில் முன்னேற்றம் ஒன்றினைக் காட்டியதுடன், ஆகக் கூடிய அதிகரிப்பு வேகமானது ஒரு வருட காலத்தில் 0.021C வீதம் புத்தளத்தில் பதிவாகி இருந்தது. இரவு காலத்தில் வருடாந்த வளிமண்டல சராசரி வெப்பநிலையானது உயர் அளவில் அதிகரிப்பொன்றினைக் காட்டியுள்ளது. இரவு காலத்தில் ஆகக் குறைந்த வருடாந்த சராசரி வளிமண்டல வெப்பநிலையானது 0.02C நுவரெலியாவில் பதிவாகி இருந்தது.
கடந்த காலத்திலே நாட்டின் பொதுவான வெளி வெப்பநிலையானது அதிகரித்தமைக்கான முக்கிய காரணமாக இரவு காலத்தின் மிகக் குறைந்த வெப்ப நிலை பகல் நேர ஆகக் கூடிய வெப்ப நிலையிலும் பார்க்க அதிகரித்தமையே என்பது தெளிவாகின்றது. இந்த முன்னேற்றமானது கடந்த நூற்றாண்டு முழுவதும் பூகோள வெப்ப நிலை அதிகரிப்பிற்கு சமமானதாகும். இந்த அதிகரிப்பிற்கு பச்சை வீட்டு விளைவானது அரைப் பகுதி அளவில் தாக்கம் செலுத்தி உள்ளதுடன், அண்மைக் காலமாக இடம்பெற்ற துரித நகரமயமாக்கலின் விளைவாக அதிகரித்த பிராந்திய வெப்பநிலை அடுத்த காரணமாக அமையலாம்.
மழைவீழ்ச்சி மற்றும் வெப்பநிலை பற்றிய ஆரம்பக் காலநிலை ஆய்வு
வடகீழ்ப் பருவப்பெயர்ச்சிக் காற்றுக் காலத்தில் (டிசம்பர், ஜனவரி மற்றும் பெப்ரவரி) அதிக மறைவீழ்ச்சி மத்திய மலைநாட்டில், கிழக்குப் பள்ளத்தாக்குகளிற்கு எல்லைப் படுத்தப்படுவதுடன் உச்ச அளவான 1200 மி.மீ மலைவீழ்ச்சி மத்திய மலைநாட்டின் உச்சியிற்கு சற்றுக் கீழுள்ள பிரதேசத்திற்குக் கிடைக்கிறது. இதற்குக் காரணமாவது இந்தக் காலத்திற் அதிக ஈரப்பதனுடன் கூடிய வட கீழ்க் காற்றாகும். முதல் பருவக்காற்று மலை காணப்படும் மார்ச் ஏப்ரல் போன்ற மாதங்களில் நாட்டின் தென் மேல் பிரதேசங்களிற்கு கடுமையான மழை கிடைக்கும்.
இலங்கையின் வருடாந்த சராசரி மழைவீழ்ச்சி 1931 இலிருந்து 1960 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது 1961 இலிருந்து 1990 வரையான காலப்பகுதியில் 144 மி.மீற்றரால் அதாவது 7% இனால் குறைவடைந்துள்ளதுடன் ஏற்றுக் கொள்ளப்பட்ட பின்னடைவு 234 மி.மீற்றரிலிருந்து 263 மி.மீற்றர் வரை அதிகரித்துள்ளது. (சந்திரபால 1997) இலங்கையின் வடகீழ்ப் பருவப் பெயர்ச்சி மழை 1931 - 1960 வரையான காலப்பகுதியிலிருந்து 1961 – 1990 காலப்பகுதி வரை அதிகரிக்கும் மாற்றத்துடன் குறைந்துள்ளது. இந்த காலப்பகுதி இரண்டினுள்ளும் தென்மேல் பருவப் பெயர்ச்சி மறை தெளிவான வேறுபாடு ஒன்றைக் காட்டா விடினும் 1931 – 1960 காலப்பகுதியுடன் ஒப்பிடும் போது 1961 - 1990 காலப்பகுதி மாற்றத்துடன் குறைந்துள்ளது. ஏனைய வானிலை மத்திய நிலையங்களுடன் ஒப்பிடும் போது மட்டக்களப்பு, குருனாகல் மற்றும் இரத்தினபுரி போன்ற காலநிலை மத்திய நிலையங்களில் அண்மைக் காலங்களில் உயர் மாற்றத்துடன் கூடிய வருடாந்த மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது. . கடந்த நூற்றாண்டு காலப்பகுதியில் வருடாந்த மழைவீழ்ச்சியில் குறிப்பிடக் கூடிய மாற்றம் ஒன்று நிகழ்ந்ததில்லை. சிலவேளை மழைவீழ்ச்சிப் போக்கில் உயர் மாற்றத்திற்குக் காரணம் வளிமண்டலத்தில் பச்சை வீட்டு வாயுக்கள் அதிகரிப்பதனால் ஏற்படும் பூகோள காலநிலை மாற்றமாக இருக்கலாம்.
மழைவீழ்ச்சியின் எதிர்கால நிலைமை
பிரதானமாக மழைவீழ்ச்சியின் மாற்றத்தினால் காலநிலை மாற்றத்துடன் காலநிலை எல்லை கடந்த விளைவுகள் (வெள்ளப் பெருக்கு, வறட்சி போன்றன) மிகவும் கொடூரமாக அடிக்கடி ஏற்படுகின்றன. இதைத் தவிர காலநிலை மாற்றத்துடன் ஈர் நிலங்கள் மென்மேலும் ஈரத்தன்மைக்கு உட்படுவதுடன் உலர் பிரதேசங்கள் மென்மேலும் வறண்டு போகின்றன. பெற்றுக் கொண்ட பெறுபேறுகளிற்கு ஏற்ப நாட்டின் மேல் மற்றும் தென்மேல் பிரதேசங்களிற்கு மட்டுப்படுத்தப்பட்ட தென்மேல் பருவ மழை A2 நிலைமையின் கீழ் 2025, 2050 மற்றும் 2100 ஆகும் போது அதிகரிப்பதாகத் தெரிகிறது. 2025, 2050 மற்றும் 2100 போன்ற வருடங்களில் வடகீழ்ப் பருவ மழை நிலைமை காட்டப்படுவதுடன் அதனால் விசேடமாக கிழக்கு மற்றும் வடக்குப் பிரதேசங்களில் வடகீழ்ப் பருவ மழையின் அதிகரிப்பொன்றைக் காட்டுகிறது.
வெப்பநிலை பற்றிய எதிர்கால நிலைமை
பல்வேறுபட்ட வெளிப்பாட்டுத் தன்மையின் கீழ் (2001) 2100 ஆம் ஆண்டாகும் போது பூகோள சராசரி வெப்பநிலை 1.4 - 5.8C என்ற எல்லையில் அதிகரித்துச் செல்லும் எனக் காட்டப்படுகிறது. 2100ஆம் ஆண்டு வடகீழ்ப் பருவக் காற்றுக் காலம் மற்றும் தென்மேல் பருவக் காற்றுக் காலத்தில் சராசரி வெப்பநிலை ஆரம்ப மட்டத்திலிருந்து படிப்படியாக 2.9C இலிருந்து 2.5 C வரை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது.
-----------------
உலக காலநிலை மாற்றம்
கடந்த 25 வருடங்களுள் என்றுமில்லாத பனிப்பொழிவு’
‘பல ஆண்டுகளின் பின் வான்கதவுகள் திறப்பு’
‘என்று மில்லாத பெருமழை’
இவையெல்லாம் சமீபகாலமாக நாம் காணும் செய்தித் தலைப்புகள் ஆகும். அவை பற்றி நாம் பெரிதாக அலட்டிக்கொள்வது கூட இல்லை. ஆனால் அவை எல்லாம் ஏதோ அறிகுறியை வெளிக்காட்டி நிற்பனவாகவே தெரிகின்றன. இந்நிலையில் ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தின் விஞ்ஞானிகள் குழு 2007 ஆம் ஆண்டிலேயே விடுத்த எச்சரிக்கையைக் கருத்தில் கொள்வதும் சிறந்த விடயமாகும்.
காலநிலை மாற்றம் காரணமாக இயற்கையின் சீற்றங்கள் இனிவரும் காலங்களிலே அதிகரிக்கலாம் என்பதே அந்த எச்சரிக்கையாகும். உலகின் பல்வேறு பாகங்களிலும் தெரியும் புதுவித மாற்றங்கள் உலகளாவிய காலநிலை மாற்றத்தின் தோற்றப்பாடுகள் தானோ என்ற எண்ணத்தை உருவாக்கத் தொடங்கிவிட்டன.
மனிதன் இயற்கையைக் கருத்தில் கொள்ளாது, அதனுடன் இயைந்து வாழ முயலாது தன்னிச்சையாகச் செயற்படத் தொடங்கியதன் விளைவே இன்று நாம் எதிர்நோக்கும் இயற்கையின் சீற்றங்களாக இருக்கின்றன.
பணமும் அரசியலும் மலிந்துபோய்விட்ட இப்பூமியில் இயற்கையையும் விஞ்ஞானத்தையும் புரிந்துகொள்ளக்கூடிய நிலையில் இருப்பவர்கள் வெகு சிலரே.
காலநிலை மாற்றம் இன்னும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படவில்லை என்று விஞ்ஞானம் கூறுகிறது. அரசியல் தலைவர்களோ அத்தகையதோர் அவசர நிலையைப் புரிந்துகொள்ளும் நிலையில் இல்லை என்பதே வெளிப்படையான உண்மையாகும்.
பலரும் எதிர்பார்த்துக்கொண்டிருந்த காலநிலை மாற்றம் தொடர்பான கோப்பன்ஹாகன் மாநாடு (2009) கிட்டத்தட்ட தோல்வியில் முடிவடைந்த கதையை நாம் அறிந்திருப்போம்.
அம்மாநாட்டிலே அமெரிக்க அதிபர் ஒபாமா என்ன பேசுவார் என்று எதிர்பார்த்திருந்தவர்கள் காலநிலை மாற்றம் பற்றிப் பேசி தீர்மானமொன்றையெடுப்பதில் அதிக ஆர்வம் காட்டவில்லை.
ஏறத்தாழ கடந்த 20 வருடங்களாக உலக நாடுகளின் தலைவர்கள் மாநாடுகளிலே கூடி, புவி வெப்பமடைவது பற்றியும் காலநிலை மாற்றம் பற்றியும் மிக மும்முரமாகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
ஆனால் அப்பேச்சுக்களின் அடிப்படையில் எந்தவித ஆக்கபூர்வமான முடிவுகளும் எட்டப்படவில்லை என்பதே யாவரும் அறிய வேண்டிய உண்மை ஆகும்.
புவி வெப்பமடைதலைப் பொறுத்த வரையிலே கியோட்டோ உடன்படிக்கை மிக முக்கியமானதாகும். அது வரலாற்றுச் சிறப்பு மிக்கதாகவும் கருதப்படுகிறது.
19ம் நூற்றாண்டின் கடைப் பகுதியிலே கைத்தொழில் புரட்சி உருவாகியது. பிற்காலங்களில் தோன்றிய சகல தொழில் நுட்ப வளர்ச்சிகளுக்கும் அக்கைத்தொழில் புரட்சியே வித்திட்டது எனலாம். கைத்தொழில் புரட்சி உருவாக்கிவிட்டிருந்த எதிர்மறையான விளைவாக புவி வெப்பமடைவதைக் குறிப்பிட முடியும்.
அதாவது சுவட்டு எரிபொருட்களின் பாவனை அதிகரித்துச் சென்ற நகரமயமாக்கலும் அபிவிருத்திப் பணிகளும் காடழித்தல் துரித கதியில் நடைபெற வழிவகுத்தன.
விளைவாக வளிமண்டலத்திலே உள்ள காபனீரொட்சைட்டின் அளவு அதிகரித்தது. புவிச் சூழலின் வெப்பநிலையும் அதிகரித்தது. புவிச் சூழலைப் பொறுத்தவரையிலே அதன் வெப்பநிலை காலத்துடன் அதிகரித்து வருவதாகவே ஆய்வுகள் தெரிவிக்கின்றன. பல சமயங்களில் நாம் உணர்ந்தும் இருப்போம்.
மனித நடவடிக்கையால் அதிகளவில் வெளிவிடப்படும் பச்சை இல்ல வாயுக்களான காபனீரொட்சைட்டு, மெதேன், நைதரசன் சேர் வாயுக்கள் போன்றனவே புவிச் சூழலை வெப்பமடையச் செய்கின்றன.
இவை சூரிய கதிர்கள் புவி மேற்பரப்பில் பட்டு மீளத்தெறிப்படைந்து செல்வதைத் தடுக்கின்றன. ஆதலால் புவிச் சூழல் வெப்பமடைகிறது.
வாகனங்கள், ஆகாய விமானங்கள், எரிசக்தி நிலையங்கள், தொழிற்சாலைகளிலே சுவட்டு எரிபொருட்களின் பாவனையால் வளிமண்டலத்துக்கு காபனீரொட்சைட் வெளிவிடப்படுகிறது.
சூழலில் இருக்கும் காடுகளும் மரங்களும் தான் வளி மண்டலத்திலே உள்ள காபனீரொட்சைட்டின் அளவை இயற்கையாகவே கட்டுப்படுத்தும் வல்லமை படைத்தவை. ஆனால் விவசாயம், கைத்தொழிலாக்கம், நகரமயமாக்கல் போன்ற பல தேவைகளுக்காக காடுகள் அழிக்கப்பட்டன.
புவிச் சூழலிலே வளிமண்டலத்தில் இயற்கையாக அமைந்த படலமாக ஓசோன் படை காணப்படுகிறது.
சூரியனிலிருந்து வரும் உயர் சக்திமிக்க நச்சுத்தன்மையான புறஊதாக் கதிர்கள் பூமியை வந்தடையாமல் தடுப்பதும் இந்த ஓசோன் படையேயாகும்.
குளோரோபுளோரோ காபன் என்ற வாயுவின் வெளியேற்றத்தாலும் ஏனைய சில நைதரசன் சேர் வாயுக்களின் வெளியேற்றத்தாலும் இந்த ஓசோன் படை அரிப்படையத் தொடங்கியது. அதனால் புவி மேற்பரப்பை வந்தடையும் புற ஊதாக் கதிர்களின் சதவீதம் அதிகரித்தது.
புவி மேற்பரப்பு வெப்பமடையத் தொடங்கியது.
ஆய்வாளர்கள் காலங்கடந்த பின்னரே விளைவுகளைக் கண்டுணரத் தொடங்கினர். ஒசோன் படையிலே உருவாகிய ஓட்டைகள் துருவப் பகுதிகளில் உள்ள பனிப் பாறைகள் உருகக் காரணமாயின என கண்டுபிடித்தனர்.
சுமார் 200 வருடங்களுக்கு முன்பு வளிமண்டலத்தில் இருந்த காபனீரொட்சைட்டின் அளவு 275 ppm (parts per million) ஆகும். அது தற்போது 392 ppm ஆக அதிகரித்துள்ளது.
புவி வெப்பமடைதலானது பல விளைவுகளை உருவாக்கி உலகளாவிய காலநிலை மாற்றத்துக்கும் இயற்கைச் சீற்றங்களின் அதிகரிப்புக்கும் வழிவகுத்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது.
வரலாறு காணாத, அதிக வெப்பநிலையுடைய ஆண்டாக 2010 ஆம் ஆண்டு பதியப்பட்டுள்ளது. நிலைமை விபரீதமாகிக் கொண்டு போவதை உணர்ந்த விஞ்ஞான உலகு, அரசாங்கங்களை எச்சரிக்கவும் தவறவில்லை. காலநிலை மாற்றத்துக்கு தாமும் ஒரு காரணம் என அரசாங்கங்கள் உணர்ந்தன. ஐக்கிய நாடுகள் ஸ்தாபனத்தை நடுநாயகமாக வைத்து செயற்பாடுகளில் ஈடுபட முனைந்தன.
1992 இலே, ஐக்கிய நாடுகளின் புவி உச்சி மாநாடு பிறேசிலின் ரியோ – டி – ஜெனிரோ நகரில் நடைபெற்றது. அம்மாநாட்டின் ஒரு பகுதியாக ஸினிபிவிவிவி UNFCCC (United Nations Frame work Convention on Climate Change) என்ற ‘காலநிலை மாற்றத்துக்கான செயற்றிட்டப் பேரவை ஒன்று உருவாக்கப்பட்டது. அதன்படி ஒவ்வொரு வருடமும் காலநிலை மாற்றத்துக்கான மாநாடு (Conference of Parties – COP) நடத்தப்பட்டு வருகிறது.
1997ஆம் ஆண்டு ஜப்பானின் கியோட்டோ நகரில் நடத்தப்பட்ட அத்தகைய மாநாட்டிலே தான் கியோட்டோ உடன்படிக்கையும் எட்டப்பட்டது.
கடந்த கால வரலாற்றின் அடிப்படையில் புவிச் சூழலில் வளிமண்டல காபனீரொட்சைட்டின் அளவு அதிகரிப்பதற்குக் காரணமான நாடுகள் கியோட்டோ மாநாட்டில் பட்டியலிடப்பட்டன. அவை 1991 இலே காபனீரொட்சைட் வாயு உட்பட்ட நான்கு பச்சை இல்ல வாயுக்களை எந்தளவு வெளியேற்றினவோ அந்த அளவை 2012 ஆம் ஆண்டளவில் 5.2 சதவீதத்தால் குறைக்க வேண்டுமென்பதே அந்த கியோட்டோ உடன்படிக்கை யாகும். இந்த 5.2 சதவீதமென்பது ஒரு கூட்டான அளவாகும். ஒவ்வொரு தனித்தனி நாட்டையும் கருதும்போது குறைக்க வேண்டிய சதவீதம் மாறுபடும்.
வளிமண்டலத்தை அதிகளவில் மாசுபடுத்தும் நாடாக அமெரிக்கா காணப்படுகிறது. 5.2% என்ற கூட்டு அளவின் அடிப்படையில் தனது பச்சை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை அமெரிக்கா 7 சதவீதத்தால் குறைக்க வேண்டி இருந்தது.
கியோட்டோ உடன்படிக்கையைப் பொறுத்த வரையிலே, இந்தியாவும் சீனாவும் தமது பச்சை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கு முன்வரவில்லை. அதற்கு அவை முன்வைத்த காரணம் தாம் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகள் என்பதாகும்.
மேற்குலக நாடுகளில் உருவான கைத்தொழில் புரட்சியே வளிமண்டலத்தின் பச்சை இல்ல வாயுக்கள் green house gases அதிகரிக்கக் காரணமாகியது. மேற்குலக நாடுகளின் செயற்பாட்டுக்கு மூன்றாம் உலக நாடுகளும் பலிக்கடாவாயின என்பது தான் வெளிப்படை உண்மையாகும். ஆனால் கியோட்டோ உடன்படிக்கை உருவாக்கப்பட்ட போது இணைந்த அமெரிக்கா பின்னர் அதிலிருந்து விலகிவிட்டது.
நிலைமை கையை மீறுவதை உணர்ந்த ஐ. நாவின் பன்னாட்டு விஞ்ஞானிகள் குழு 1990 ஆம் ஆண்டின் பச்சை இல்ல வாயுக்களின் வெளியேற்றத்தை 2012 அளவிலே 80 சதவீதத்தால் குறைக்க வேண்டுமென 2007 இல் அறிவித்தது.
இம்முடிவு தொடர்பாக ஒரு இணக்கப்பாட்டிற்கு வருவதற்காக 2007 ஆம் ஆண்டுக்கான காலநிலை மாற்ற மாநாடு இந்தோனேசியாவின் பாலித் தீவில் கூட்டப்பட்டது.
நடைமுறையில் இருந்து வரும் கியோட்டோ உடன்படிக்கையின் கால இலக்கை நீடிக்கவும் உறுப்புரிமையிலிருந்து விலகிய அமெரிக்காவை இணைத்து நீண்டகால நோக்கிலான கூட்டுச் செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கும் அங்கு உடன்பாடுகள் பல எட்டப்பட்டன.
அதற்காகத் தயார் செய்யப்பட்ட வழிகாட்டி பாலி வழிகாட்டி எனப்பட்டது. அவ்வழிகாட்டியின் அடிப்படையிலே 2009ஆம் ஆண்டுக்கான கோப்பன்ஹேகன் மாநாடும் திட்டமிடப்பட்டது. ஆனால் அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் பிடிவாதம் கோபன்ஹேகன் மாநாட்டைத் தோல்வியடையச் செய்தது.
ஆயினும் 2010 இலே, பேச்சுவார்த்தைகள் தொடரப்பட்டு தீர்மானங்கள் எட்டப்படும் என அம்மாநாட்டில் முடிவு செய்யப்பட்டது. கடந்த ஏப்ரல், ஜூன், ஓகஸ்ட் மற்றும் ஒக்டோபர் மாதங்களிலே கூட்டம் கூட்டப்பட்டு ஆராயப்பட்டது. ஆனால் முடிவுகள் எவையுமே எட்டப்படவில்லை என்பது வருத்தத்துக்குரிய விடயமாகும்.
இத்தகையதோர் நிலையிலே இவ்வாண்டுக்கான ஐ.நாவின் 16வது காலநிலை மாற்ற மாநாடு கடந்த நவம்பர் மாதம் 26ம் திகதி மெக்சிக்கோவின் கான்குன் நகரில் ஆரம்பமாகியுள்ளது.
கோபன்ஹேகன் மாநாட்டிலே தவறவிடப்பட்ட உடன்பாடுகள் கான்குன் மாநாட்டிலே மேற்கொள்ளப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பல்வேறு தொனிப் பொருட்களில் கலந்துரையாடல்கள் நடைபெற்று வருகின்றன. இறுதி முடிவு தான் என்ன? என்பதை முழு உலகுமே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.
ஐரோப்பிய யூனியனின் புதிய தலைவரான ஹேர்மன் வன்ரொம்புய் ‘இம்மாநாடும் கோபன்ஹேகன் மாநாட்டைப் போல ஒரு அனர்த்தமாகவே இருக்கும்’ எனத் தெரிவித்ததாக விக்கிலீக்ஸ் கேபிள் தகவல் வெளியிட்டுள்ளது. அவர் கோபன்ஹேகன் மாநாட்டை மிக மோசமாக விமர்சித்திருந்தமையையும் விக்கிலீக்ஸ் சுட்டிக்காட்டியுள்ளது.
காலநிலை மாற்றம் தொடர்பான மேற்குலக நாடுகளின் மனப்பாங்கு எத்தகையது என்பதை இந்த விக்கிலீக்ஸ் தகவல் தெளிவாக எடுத்தியம்புகிறது.
தன்னை விஞ்சியவர் எவருமில்லையென்ற அகம்பாவம் மனிதனை மற்ற உயிர்கள் பற்றிச் சிந்திக்க விடுவதில்லை. இயற்கைச் சமநிலையைச் சீர்குலைத்து அவன் அடையும் முன்னேற்றங்கள் அவனுக்கே உலை வைக்கும் போது கூட அவன் தன் அகந்தையை ஒழிப்பானா என்பது சந்தேகமே! எப்படி இன்னும் புதிய முன்னேற்றங்களைக் கண்டு அப்பிரச்சினைகளைத் தீர்க்க முடியும் என்பது பற்றி மட்டும் தான் சிந்திப்பான்.
இந்த இயல்பு தான் இயற்கையுடன் இயைந்திருந்த மனிதனை விலக்கி இன்று எதிர்த்திசையிலே பயணிக்கச் செய்துவிட்டது.
‘நாம் மீண்டும் ஆதி மனிதர்களாக வேண்டும். அறிவியல் முற்றாக மறக்கப்பட வேண்டும். இயற்கையின் மொழி நம் மொழியாக வேண்டும்’ என்ற ஒஷோவின் வரிகள் தான் நிதர்சனமாகத் தெரிகின்றன. அவை நடந்தால் தான் மனிதனுக்கு இயற்கை வழங்கியிருக்கும் சாபத்துக்கான விமோசனமும் கிடைக்கும்.
M.R.Fazrul Ali
Post Graduate Diploma in Education, BA (Hons), M.A (Geography)
Global Climate Change
No comments:
Post a Comment