இறை நியதியும் மனித முயற்சியும்
(''கழா கத்ர்' பற்றிய ஆய்வு)
அஷ்ஷெய்க்.M.S.றியாஸ் முஹம்மத் (நளீமி) M.A., Dip.in Edu.
(''கழா கத்ர்' பற்றிய ஆய்வு)
அஷ்ஷெய்க்.M.S.றியாஸ் முஹம்மத் (நளீமி) M.A., Dip.in Edu.
கழாகத்ர்' பற்றிய நம்பிக்கையானது இஸ்லாமிய அடிப்படை நம்பிக்கைக் கோட்பாடுகளில் ஒன்றாகும். இந்நம்பிக்கையானது ஒரு மனிதனை சமநிலையான ஆளுமை கொண்டவனாக வாழச் செய்கிறது. மனிதனிடத்தில் காணப்படம் விரக்தி நீங்கி அவனை அமைதியோடும், உள ஆறுதலோடும் வாழ வைக்கிறது. மனிதன் செயலற்று முடங்கிக் கிடக்காது அவனது செயற்பாட்டு வேகத்தை அதிகரிக்கிறது.
மறுபுறத்தில், இதே நம்பிக்கையானது பிழையாக, இஸ்லாம் எதிர்பார்க்கும் நம்பிக்கைக்கு முரணாக விளங்க முற்படும்போது மனிதனை மிக இழி நிலைக்கு இட்டுச் செல்கிறது. அவனது செயற்பாடுகளை மழுங்கடிக்கச் செய்து, முடங்கிக் கிடப்பதற்கும், செயற்பாடுகளற்று விதியின் படி நடக்கட்டுமென 'தவக்குலை' பிழையாக விளங்கி உலக பௌதீக நியதிகளை அனுசரிக்காது வாழும் நிலையும் அதனால் ஏற்படும் பாதிப்புக்கள் பல.
இவை ஒருபுறமிருக்க, சிலர் இந்நம்பிக்கையை பிழையாக விளங்க முற்பட்ட காரணதம்தினால் தாமும் இஸ்லாமிய வட்டத்துக்குள் இருந்து வெளியேறி, பிற முஸ்லிம்களையும் வழிகெடுத்து விட்டனர். இத்துறையில் வரம்புமீறி ஆய்வுகளில் ஈடுபட்டு, பல குழுக்களாகப் பிரிந்து இஸ்லாமிய சமுகத்தின் ஒருமைப்பாட்டையும், ஐக்கியத்தையும் சீர்குழைத்தனர். மாத்திரமன்றி முஸ்லிம்களது அரசியல், சமுக வீழ்ச்சிகளுக்கும் வழியமைத்தனர்.
எனவே, இத்துறையில் அளவுகடந்த ஆய்வுகள் மேற்கொள்வது பொறுத்தமற்றதாக இருப்பினும், இத்துறையில் காணப்படும் தவறான, இஸ்லாமிய அகீதாவுக்கு முரண்பட்ட சிந்தனைகளிலிருந்து மீழ்வதற்கு சரியான இஸ்லாமிய சிந்தனையின் அடிப்படையிலான கழாகத்ர் பற்றிய ஆய்வுகளும் இன்றியமையாததாகும்.
கழா கத்ருக்குரிய வரைவிளக்கனம் :
'கழா' எனும் அரபுப் பதத்திற்கு படைத்தல், தீர்ப்பளித்தல், நிறைவேற்றுதல் போன்ற கருத்துக்கள் வழங்கப்படும். இஸ்லாமிய பரிபாசையில் இப்பதம், 'அல்லாஹ் தனது அறிவுக்கும் நாட்டத்திற்கும் ஏற்ப பிரபஞ்சத்தையும் அதில் உள்ள அனைத்தையும் படைத்துள்ளான்' என்பதாகும்.
'கத்ர்' எனும் சொல்லுக்கு நிர்ணயித்தல், மட்டிடுதல், முன்னேற்பாடு, ஒரு விடயத்தின் முடிவு போன்ற கருத்துக்கள் வழங்கப்படும். இப்பதம் இஸ்லாமிய பரிபாசையில், 'அல்லாஹ்வின் கண்காணிப்பின் கீழ் இயங்கும் சகல விடயங்;களும் நிகழ்வதற்கான கால, நேர, இடம் குறித்தும், அவ்விடயங்கள் எத்தகைய தோற்றங்களையும், அளவுப்பிரமாணங்களையும், உள்ளார்ந்த ஆற்றல்களையும் கொண்டவனாகத் அல்லாஹ்வைக் காட்டும் வகையிலான அவனது விஷேய ஞானத்திற்குட்பட்ட அவனது நிர்ணயமாகும்'.
பொதுவாக இவ்விரு சொற்களையும் இணைத்து 'அல்கழாஉ வல்கத்ர்' என்பதை இறைவனால் விதிக்கப்பட்ட 'விதி' என்று கூற முடியும். அல்லது அல்லாஹ்வின் கட்டளை என்றோ, அவன் நிர்ணயித்து விட்டிருக்கும் வானம், பூமி, மனிதன், ஏனைய ஜீவராசிகள், சடப்பொருட்கள் இவை அனைத்தினதும் நடத்தைகள், செயற்பாடுகள் அனைத்தினையும் உள்ளடக்கிய பிரபஞ்ச அமைப்பு குறித்த இறை ஞானத்தை இது குறிக்கிறது.
கழாகத்ரை விசுவாசிப்பதன் அவசியம்
ஒரு முஸ்லிம் தனது நம்பிக்கையை பூரணப்படுத்த விசுவாசம் கொள்ள வேண்டிய அடிப்படை அம்சங்களுள் ஒன்றாக கழாகத்ர் பற்றிய நம்பிக்கை காணப்படுகிறது. இதனை மறுக்கும் நிலையில் ஒருவன் முஸ்லிமாக கருதப்பட முடியாது.
இப்னு உமர் (ரழி) அவர்கள் தனது தந்தையிடமிருந்து அறிவிக்கும் 'ஹதீஸூ ஜிப்ரீல்' எனும் பிரபலமிக்க ஹதீஸில் ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களிடம், 'ஈமான் பற்றி எனக்கு அறிவியுங்கள்?' என்று கேட்டமைக்கு பதிலளித்த நபியவர்கள், 'அல்லாவையும், மலக்குமார்களையும், வேதங்களையும், இறைத்தூதர்களையும் நம்பிக்கை கொள்வதோடு, நன்மை, தீமை யாவும் (அல்லாஹ்) அவனது நிர்ணயப்படி நடைபெறும் என்பதையும் நீங்கள் நம்பிக்கை கொள்வதாகும்.' என குறிப்பிட்டார்கள். (முஸ்லிம்)
மற்றுமொரு முறை நபி (ஸல்) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உபாதா இப்னுஸ் ஸாமித் (ரழி) கூறினார்கள், 'தன் படைப்புகளில் முதன் முதலாக எழுதுகோலைப் படைத்த அல்லாஹ், 'எழுதுவாயாக' என்று கூறினான். 'என் இறைவா எதை எழுத வேண்டும்?' எனக் கேட்டது. அல்லாஹ், 'கத்ரை எழுதுவாயாக' என பதிலளித்தான். அன்று முதல் கியாம நாள் வரை இவ்வுலகில் நிகழும் சகல விடயங்களும் பதிவு செய்யப்பட்டன. நன்மையையும் தீமையையும் உள்ளடக்கிய இக்கத்ரை கொண்டு விசுவாசம் கொள்ளாதவர்களை அல்லாஹ் நெருப்பினால் பொசுக்குவான். (திர்மிதி)
கழாகத்ரை விசுவாசிப்பதானது மறைவானவற்றை விசுவாசிப்பதில் முதலிடம் வகிக்கின்றது. இந்நம்பிக்கையானது நேரடியாக அல்லாஹ்வை விசுவாசிப்பதுடன் தொடர்பு படும் ஒன்றாகும். அல்லாஹ்விற்குரிய பண்புகளான அறிவு, நாட்டம், சக்தி, படைப்பாளன் என்ற பண்புகளுடன் நேரடியாக தொடர்பு பட்ட ஒன்றாக கழாகத்ர் பற்றிய அறிவு காணப்படுகின்றது. இத்தகைய பண்புகளைக் கொண்டு ஈமான் கொள்ளாதவரை ஒருவரின் ஈமான் பூரணப்பட மாட்டாது.
இந்த பிரபஞ்சம், அதில் காணப்படும் அனைத்து படைப்பினங்களையும் அவதானித்து நோக்கும் போது, இவை ஒவ்வொன்றுமே இறை நியதியுடன் தொடர்பு பட்டதாக காணப்படுகின்றது. இறை நியதிக்கேட்பவே மனித வாழ்வின் ஒவ்வொரு கட்டமும் தொழிற்படுகின்றன. ஆரோக்கியமும், பிணியும், ஏழ்மையும், செல்வமும், பலமும், பலவீனமும்... இறைநாட்டத்தின் அடிப்படையிலானது என்ற வகையில் ஒரு விசுவாசியின் வாழ்வுடன் இந்நம்பிக்கை பிண்ணிப்பிணைந்துள்ளது.
இந்த நம்பிக்கை முன்னைய இறை வேதங்களிலும் கூறப்பட்ட ஒன்று என்பதை அல்குர்ஆன் கூறும் சம்பவங்களை வைத்து நோக்கும் போது அறிய முடிகிறது.
நூஹ் (அலை) கூறியதை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது, ' அவ்வேதனையை உங்களிடம் கொண்டு வருபவன் அல்லாஹ் தான். அவன் நாடினால் (அதனைக் கொண்டு வந்து விடுவான்). அவனை நீங்கள் இயலாமலாக்குகிறவர்களும் அல்லர் என்று கூறனார். நான் உங்களுக்கு நல்லுபதேசம் செய்ய நாடினாலும், அல்லாஹ் உங்களை வழிகேட்டில் விட்டுவிடவேண்டுமென்று நாடியிருந்தால் என்னுடைய நல்லுபதேசம் உங்களுக்கு யாதொரு பயனையும் அளிக்காது... (சூரா ஹூத் - 33,34)
இப்றாஹிம் (அலை) அவர்கள் தமது மைந்தரை அறுத்துப் பழியிடச் சென்ற போது இஸ்மாஈல் (அலை) கூறிய வார்த்தைகள் அவரது கழாகத்ர் பற்றிய நம்பிக்கையை பிரதிபளிப்பதாக அமைகிறது. ' தந்தையே, நீங்கள் உங்களுக்கு ஏவப்பட்டவற்றையே செய்யுங்கள். அல்லாஹ் நாடினால் நீங்கள் பொறுமையாளர்களில் உள்ளவராக என்னைக் காண்பீர்கள்'. ( அஸ்ஸாப்பாத் - 102) இங்கு அவர் தனது பொறுமையை இறை நாட்டத்துடன் தொடர்பு படுத்தியுள்ளதைக் காண முடிகிறது.
யூசுப் (அலை) தனது தந்தையிடம் தான் கண்ட கனவு பளித்த செய்தியைக் கூறிய பின்,'நிச்சயமான எனது இரட்சகன் தான் நாடியதை மிக நுட்பமாக செய்கின்றவன். நிச்சயமான அவனே யாவற்றையும் அறிந்தோன்.' யூசுப் - 100) என்று கூறுவது அவருடைய கத்ர் பற்றிய நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது.
மூஸா (அலை) அவர்களது கத்ர் பற்றிய நம்பிக்கைக்கு சான்று பகரும் அல்குர்ஆன், '... இதனைக் கொண்டு நீ நாடியவர்களை வழிதவறச்செய்கிறார். நீ நாடியவர்களை சேர்வழியில் செலுத்துகிறார். நீயே எங்களுடைய பாதுகாவலன்... (அல் அஃராப் - 155) என குறிப்பிடுகிறது.
எனவே, உலகில் தோன்றிய எல்லா சமுகங்கங்களுக்கும் அனுப்பப்பட்ட நபிமார்கள் போதித்த ஏகத்துவக் கொள்கையில் இந்த கழாகத்ருடன் தொடர்பான அம்சம் பிரதான இடத்தை வகித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கழாகத்ரும் மனித உழைப்பும், முயற்சியும்
கழாகத்ர் இரு வகைப்படும்
01. முதல் வகை மனித செயல் சுதந்திரத்திற்கு அப்பாற்பட்டவை
மனிதன் மீது சில விடயங்களை அல்லாஹ் நிர்ப்பந்தித்து மனிதனது தெரிவுச் சுதந்திரத்திற்கு அப்பாற்பட்டதாக ஏற்படுத்தியுள்ளான். அவை முற்றிலும் இறை நாட்டத்துடனும் அவனது நுணுக்கமான திட்டமிடலுடனும் தொடர்பானவை. மனிதனது பிறப்பு, இறப்பு, பிறக்கும் காலம், நேரம், இடம், அவனது உயரம், உடற்தோற்றம், அழகு, அவனது பெற்றோர்கள், உடன்பிறப்புக்கள், அவனது ஆளுமை, அவனில் பொதிந்துள்ள உணர்வுகள், உள்ளார்ந்த ஆற்றல்கள், விஷேட திறன்கள் போன்றவற்றை உதாரணங்களாக குறிப்பிட முடியும். இவை தவிர மனிதனல்லாத பிரபஞ்சம் அதனது நியதிகள், அதிலுள்ள உயிரினங்கள், அவற்றினது இயக்கங்கள் தொடர்பாகவும் மனித முயற்சிக்கு அப்பாற்பட்ட சக்தி இயக்குவதை அவதானிக்கலாம்.
இவற்றிற்கும் மனித முயற்சி, உழைப்பு, சுயவிருப்பத்தேர்வுக்கும் எவ்வித தொடர்பும் இல்லை. இவை முற்றிலும் இறை விருப்பம், அவனது தெரிவு, நாட்டப்படியே நடைபெறுகின்றன. இக்கருத்தை அல்குர்ஆன் பின்வரும் வசனங்களினூடாகக் கூறுகின்றது.
'அவன்தான் (அல்லாஹ்) தான் விரும்பியவாறு கருவறைகளில் உங்களை உருவமைக்கிறான்.' (ஆல இம்றான் - 06)
'நபியே! உமதிறைவன் தான் விரும்பியவர்களைச் சிருஷ்டித்துத் (தனது தூதர்களாக தான் விரும்பியவர்களைத்) தெர்ந்தெடுக்கிறான். (அவ்வாறு) தேர்ந்தெடுப்பதில் இவர்களுக்கு எத்தகைய உரிமையுமில்லை. இவர்கள் இணை வைப்பவைகளிலிருந்து அல்லாஹ் மிக பரிசுத்தமானவனாவான். உமதிறைவன் அவர்கள் தங்களது உள்ளங்களில் மறைத்து வைத்திருப்வைகளையும் அவர்கள் வெளியிடுவதையும் நன்கறிந்தவன்.' (அல்கஸஸ் - 68,69)
'எந்தவொரு ஆன்மாவுக்கும் ஏற்கனவே (அதற்கு) நேரம் குறிக்கப்பட்ட (அல்லாஹ்வின்) எழுத்துப்படி, அல்லாஹ்வின் கட்டளையைக் கொண்டே தவிர அது மரணிப்பதற்கில்லை...' (ஆலஇம்றான் - 145)
'அவன் எத்தகையவனென்றால், உங்களை களிமண்ணால் படைத்தான். பின்னர் உங்களுக்கு ஒரு தவணையையும் நிர்ணயம் செய்தான்...' அல் அன்ஆம் - 02)
'மேலும் அல்லாஹ் உங்களை (துவக்கத்தில்) மண்ணிலிருந்து படைத்தான். பின்னர் ஒரு துளி இந்திரியத்திலிருந்து. பின்னர் (ஆண், பெண் கொண்ட) ஜோடிகளாக்கினான். அவனது அறிவைக் கொண்டேயல்லாது எந்தப் பெண்ணும் கர்ப்பமாவதும் இல்லை. அவள் பிரசவிப்பதுமில்லை. வயதானவரின் வயது அதிகப்படுத்தப்படுவதும், அவரின் வயதிலிருந்து குறைக்கப்படுவதிலிருந்தும் (லவ்ஹூல் மஹ்பூல் எனும பாதிவுப்) புத்தகத்தில் இல்லாமலில்லை. நிச்சயமாக இவை யாவற்றையும் செய்வது அல்லாஹ்வுக்குச் சுலபமானதே.' (பாதிர் - 11)
' ஒவ்வொரு சமுதாயத்தாருக்கும் ஒரு தவணையுண்டு. அவர்களது தவணை வந்துவிட்டால் ஒரு கணப்பொழுது பிந்தவுமாட்டார்கள், முந்தவுமாட்டார்கள்' (அல்அஃராப் - 34)
'எவ்வூராரையும் அதற்கு குறிப்பிட்ட காலத்தவணையிலன்றி நாம் அவர்களை அழித்துவிடவில்லை.'( அல்ஹிஜ்ர் - 4)
'பூமியிலுள்ள எந்த ஊர்வனமும் அவற்றின் உணவு அல்லாஹ்வின் மீது பொறுப்பாக இருக்கிறது. அதன் தங்குமிடத்தையும், அவை ஒப்படைக்கப்ப(ட்)டு (சேரு)மிடத்தையும் அவன் நன்கு அறிகிறவன். இவை யாவும் 9லவ்ஹூல் மஸ்பூல் எனும்) தெளிவான புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.' (ஹூது - 11)
'அவனே அதிகாலை நேர (வெளிச்ச)த்தை (இரவின் இருள்களிலிருந்து) வெடிக்கச் செய்கிறவன். அவனே (படைப்பினங்கள் அனைத்தும் களைப்பாறுவதற்காக) இரவை அமைதமியானவையாகவும், காலக் கணக்கிற்காக சூரியனையும், சந்திரனையும் ஆக்கினான். இவை யாவும் (யாவரையும்) மிகைத்தோனாகிய, மிக்க அறிந்தோனாகியவனின் ஏற்பாடாகும்.' (அல் அன்ஆம் - 96)
போன்ற வசனங்களை உதாரணங்களாகக் குறிப்பிட முடியும்.
மேலுள்ள வசனங்கள் மனித வாழ்வில் வரையறைக்குற்பட்ட அம்சங்கள் தொடர்பாக பேசுவதை அவதானிக்கலாம். இந்தவகையில், மனிதன் மீது நிர்ப்பந்தமாகச் செயற்படும் அம்சங்களில் அவனுக்கு எத்தகைய பங்கும் கிடையாதுஎன்றவகையில் அனிடம் அது குறித்து வினவப்படவோ, கூலி வழங்கப்படவோ மாட்டாது. மேலே குறிப்பிடப்பட்டது போன்ற அம்சங்களைப் பொறுத்தவரையில் உலகில் பிறந்து வாழ்ந்து மரணித்த, வாழ்ந்துகொண்டிருக்கும், மறுமை வரை பிறந்து வாழவிருக்கும் ஒவ்வொரு மனிதருக்கும் அல்லாஹ்வின் தீர்ப்பு நிச்சயிக்கப்ட்டுவிட்டது. இவற்றில் மாற்றங்கள் நிகழவோ, விதித்த விதிக்கு முரணாக இடம்பெறவோ மாட்டாது. அவன் விதித்த விதியின் படி குறித்த நேரத்தில் குறித்த விடயம் குறித்த அவனது படைப்பில் வெளிப்பட்டே தீரும்.
இதனை விசுவாசம் கொள்வது ஒரு முஸ்லிமின் மீது கட்டாயக் கடமை என்றவகையிலே எமது முன்னோர்கள் செயற்பட்டனர். அல்லாஹ் விதித்த இந்த விதிகளுக்கு முரணாக எதுவும் நடைபெற முடியாது தமக்கு விதித்த விதியின் படியே அனைத்தும் நிகழும் என்ற விடயத்தில் அவர்கள் உறுதியாய் இருந்தனர். தமது கடமைகளை, பொறுப்புக்களை உரிய முறையில் நிறைவேற்றியும் வந்தனர். இதற்கு அல்குர்ஆனும், நபி (ஸல்) அவர்களும் வழிகாட்டியிருப்பதையும் அவதானிக்கலாம்.
'ஆகவே, நிபியே! அவர்களை நோக்கி, 'அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேரொன்றும் நிச்சயமாக எங்களை அனுகாது. அவன்தான் எங்களுடைய இரட்சகன்' என்று நீர் கூறுவீராக! விசுவாசிகள் யாவரும் அல்லாஹ்வையே நம்பி இருக்கவும்.' (அத்தௌபா - 51)
முஆவியா இப்னு ஜாஹிமீ அஸ்;ஸூலமி (ரழி) அவர்கள் அறிவிக்கிறார்கள். நபி (ஸல்)கூறினார்கள், 'நீங்கள் உங்களுக்கு கீழுள்ளவர்களைப் பாருங்கள், உங்களுக்கு மேலுள்ளவர்களைப் பார்க்காதீர்கள். அதுதான் அல்லாஹ் உங்களுக்குத் தந்த அருட்கொடைகளைப் புரக்கணித்து (அவனது கத்ரில்) குறைகூராமல் இருப்பதற்கான ஒரே வழியாகும்' ( அஹ்மத், நஸாஈ, இப்னுமாஜா)
அபூ ஹூரைரா (ரழி) அறிவிக்கிறார்கள் நபி (ஸல்) கூறினார்கள், ' பலமான விசுவாசி பலவீனமான விசுவாசியை விட சிறந்தவனாகவும் அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானவனாகவும் இருக்கிறான். இருப்பினும் இருவரிலும் நன்மையே இருக்கின்றது. உனக்கு பிரயோசனமளிப்பனவற்றில் வேட்கை கொள். அல்லாஹ்விடம் உதவி தேடு, எதனையும் இயலாமைக்குரியதாக கருதாதே. உனக்கு ஏதேனும் ; பீடித்தால், 'நான் இவ்வாறு செய்திருந்தால் இவ்வாறு, இவ்வாறு நடந்திக்கும்' என்று கூறாதே. மாறாக, ' அல்லாஹ்வின் நிர்ணயமும், அவனது நாட்டமுமே' என்று கூறிவிடு. இல்லையெனில் நீ ஷெய்த்தானின் வாயிலை திறந்துவிடுகிறாய்.' என்பதாக குறிப்பிட்டார்கள். ( முஸ்லிம்)
02) மனிதனது செயல்சுதந்திரத்துடன் தொடர்பானவை
சில விடயங்களை இறைஞானத்தின் அடிப்படையில் மனதனுக்கு நிர்ப்பந்தித்த அல்லாஹ் மனதன் இவ்வுலகில் சுதந்திரமாகவும், தன்னிச்சையாகவும் இயங்கவேண்டும் என்பதற்கான வரையறைகளையும் ஏற்படுத்தியுள்ளான். இந்த விடங்களில் மனதன் தனது அறிவு, ஆற்றல், சக்தி என்பனவற்றைப் பயன்படுத்தி செயற்படுமாறு வேண்டப்பட்டுள்ளான். இந்தவகையில், மனிதன் தனது அன்றாட வாழ்வின் போது சில கடமைகளையும், பொறுப்புக்களையும் நிறைவேற்ற கடமைப்பட்டவனாக உலகில் வாழ்கின்றான். அவன் உலகில் உழைத்து, முயற்சிசெய்து சில விளைவுகளைப் பெற்றுக்கொள்ள வேண்டியவனாகின்றான்.
மனிதன் தனது அன்றாட நடவடிக்கைகளின்போது சுதந்திரமாக செயற்பட முடியும். அவன் உலக நடவடிக்கைகளில் ஈடுபட முயற்சிக்கும்போது அவனது எண்ணமும், சிந்தனையும், விருப்பமும் அதில் காணப்படுவதை இயல்பாகவே அவதானிக்க முடியும். அதே நேரம் அச்செயற்பாட்டில் அவனது சக்திப்பிரயோகமும் இடம்பெறுவதனை அவனானிக்கலாம். எந்தவொரு மனித நடவடிக்கையும் தன்னிச்சையாக நடைபெறுவதை எம்மால் கூறமுடியாது. எனவே, நடைபெறும் நிகழ்வொன்றிற்கு விதியை எம்மால் காரணம் காண்பிக்க முடியாது. அதனை அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
'(நபியே!) நீர் கூறும், 'மனிதர்களே! நிச்சயமாக உங்கள் இறைவனிடமிருந்தே இந்த சத்திய வேதம் உங்களிடம் வந்திருக்கிறது. எவர் (இதனைப்) பின்பற்றி நேரான வழியில் செல்கின்றாரோ அவர் தன்னுடைய நன்மைக்காகவே நேரான வழியில் செல்கின்றார். எவர் (இதனைப் பின்பற்றாது) வழிதவறிவிடுகின்றாரோ அவர் நிச்சயமாக தனக்கு கேடான வழியிலேயே செல்கின்றார்;. அன்றி நான் உங்களை (நிர்ப்பந்தித்து) நிர்வகிக்கத்தக்க அதிகாரம் பெற்றவனல்லன்.' (யூனுஸ் - 108)
(நபியே!) நீர் கூறுவீராக, 'முற்றிலும் உண்மையான இ(வ்வேதமான)து உம் இறைவனால் அருளப்பெற்றது. விரும்பியவர் (இதை) விசுவாசிக்கலாம். விரும்பியவர் (இதை) நிராகிரித்து விடலாம். (ஆனால் இதை நிராகரிக்கும்) அக்கிரமக்காரர்களுக்கு நிச்சயமாக நாம் நரகத்தைத் தான் சித்தப்படுத்தியுள்ளோம். (அல்கஹ்ப்- 29)
இவ்வசனங்களும், இவைபோன்ற வசனங்களும், அல்லாஹ் கத்ரை நிர்ணயம் செய்துவிட்டான். எனவே, மனிதன் முயற்சி செய்தாலும், செய்யாது விட்டாலும் அவன் நிர்ணயித்தது நடந்தே தீரும் என்று வாதிடுபவர்களது வாதங்களை உடைத்தெரிந்து விடுவதோடு, கலாகத்ரின் ஒரு பகுதி மனித முயற்சியுடனும், அவனது விருப்பு வெறுப்புகள், சுயதேர்வுடன் தொடர்புபடுவதை அவதானிக்க முடியும்.
கழாகத்ருடன் தொடர்புடைய இப்பகுதியை ஒரு முஸ்லிம் விளங்கியிருப்பது மிக அடிப்படையான அம்சமாகும். கழாகத்ரின் இப்பகுதியை சரிவர புரிந்துகொள்ளாமையால் உலகில் பல்வேறு அகீதாவுக்கு முரண்பட்ட, இஸ்லாத்தை விட்டும் விலகிச்செல்லும் பல்வேறு குழுக்கள் உருவாகி இஸ்லாமிய சமுகத்தில் பாரிய பாதிப்புக்களையும், தாக்கங்களையும் ஏற்படுத்தி, சமுகத்தை பிளவுபடுத்தியிருப்பதை வரலாற்றை கற்பதனூடாக புரிந்து கொள்ள முடியும்.
இந்தப்பின்னணியில்தான் அல்லாஹ் காலத்துக்குக் காலம் உலகின் பல்வேறு பகுதிகளுக்கும் வேதங்களை அருளச்செய்து நபிமார்களின் ஊடாக வழிகாட்டினான். மனிதன் அல்லாஹ்வின் விருப்பப்படி, அவன் விதித்த வரையறைக்குள் மாத்திரம் தான் இயங்குபவகான இருந்திருந்தால் அல்லாஹ் வேதங்களை அருளியதும், நபிமார்களை அனுப்பியதும், அவர்கள் அழைப்புப் பணியின் போது எதிர்கொண்ட துண்பங்களும், மார்க்கத்தை உலகில் நிலைநாட்டவேண்டும் என்பதற்கான பல உயிர்த்தியாகங்களை மேற்கொண்டமையும், எவ்வகையிலும் அர்த்தமற்றதொன்றாக காணப்படும். எனவே, மனிதனுக்கு அவனது சக்திக்குற்பட்ட எல்லைக்குள் நின்று செயலாற்றும் தெரிவு வழங்கப்பட்டுள்ளதை எவ்வகையிலும் மறுப்பதற்கில்லை.
இந்தவகையில், மனிதன் உலகில் எந்த நடவடிக்கையாக இருப்பினும் அவனது முயிற்சியின் விளைவினாலேயே அல்லாஹ் விளைவை தருவதற்கு காத்திருக்கிறான். மாறாக, நிர்ணயம் செய்திருப்பதன் மூலம் அவன் உலக நியதிகளை மீறி அற்புதமாக விளைவுகளை தந்துவிடுவான என எதிர்பார்ப்பது மடத்தனமாகும். இந்த விடயத்தில் மார்க்க சம்பந்தப்பட்ட விடயங்களாக இருப்பினும் சரியே. உதாரணத்திற்காக இப்பூமியில் இஸ்லாமிய மார்க்கம் மற்றெல்லா மார்க்கங்களை விட மேலோங்கிய மார்க்கமாக வெற்றியடைந்தே தீரும். இது இறை நியதியில் உள்ள விடயம்.
'இணைவைத்து வணங்குவோர் வெறுத்தபோதிலும், மற்ற எல்லா மார்க்கங்களையும் வெற்றிகொள்ளும் பொருட்டு அவனே தன்னுடைய தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பி வைத்தான்.' (அஸ்ஸப்ஃ - 09)
'நிராகரிப்போர், தாங்கள் தப்பித்துக் கொண்டதாக எண்ணவே வேண்டாம். நிச்சயமாக அவர்கள் (நம்மைத்) தோற்கடிக்கவே முடியாது.' (அல்அன்பால் - 59)
இந்த வசனங்கள் அல்லாஹ் விதியை முஸ்லிம்களுக்கு சார்பாக நிர்ணயித்து விட்டான். எனவே, நாம் இதற்குரிய முயற்சியை, உழைப்பை மேற்கொண்டாலும், மேற்கொள்ளாவிட்டாலும் அல்லாஹ் அந்த வெற்றியை தந்துவிடுவான் என்று கருதிவிட முடியாது. எனவேதான் மறைந்து காணப்;படும் இறைநியதியை முஃமின்களுக்கு நன்மாராயமாக கூறிவிட்டு, அதனைப் பெற்றுக்கொள்வதற்காக போர் புரியும் படியும், அதற்குரிய ஆயுதங்களைத் தயார் செய்யும் படியும் அல்லாஹ் கட்டளையிடுகிறான்.
'அவர்களை எதிர்ப்பதற்காக (ஆயுத) பலத்தையும், (திறமையான) போர்க்குதிரைகளையும், உங்களுக்கு சாத்தியமான அளவு நீங்கள் (எந்நேரமும்) தயார்படுத்தி வையுங்கள். இதனால் அல்லாஹ்வுடைய விரோதியையும், உங்களுடைய விரோதியையும் நீங்கள் பயப்படச் செய்யலாம்.' (அல் அனபால் - 60)
விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவிபுரிவீர்களானால் அவனும் உங்களுக்கு உதவிபுரிந்து உங்களது பாதங்களை உறுதிப்படுத்துவான்.'
(முஹம்மத ;- 7)
இவ்விறை வசனங்களின் படி வெற்றி கிடைப்பது இறை நியதியாக இருப்பினும், அதற்குரிய காரணிகளை அனுசரித்து, உழைப்பையும், முயற்சியையும் மேற்கொள்ளும் போதே அது சாத்தியப்படுகிறது. எனவேதான் வெற்றிக்குரிய காரணிகளை அனுசரித்து போராடிய அகழ் யுத்தத்தில் பல நாட்கள் நபி (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் பட்டினி கிடந்து கஷ்டங்களை சகித்துக் கொண்டு எதிரிகளால் அண்ட முடியாதவாறான அகழிகளை வெட்டினர். இதன் விளைவாகவே எதிரிப்படைகள் மதீனாவுக்குள் நுழைய முடியாத நிலையில் திண்டாடிக் கொண்டிருக்கும் வேளையில் ஹீதைபதுல் யமானி (ரழி) அவர்களை எதிரிப் படைக்குள் ஊடுறுவி அவர்களுக்கு மத்தியில் வேவு பார்க்கவும், பகைமையை மூட்டிவிடவும் நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். இவ்வாறு காரணங்களை, பௌதீக விதிகளைப் பின்பற்றியதாலேயே அந்த யுத்தத்தில் அல்லாஹ் வெற்றியை முஸ்லிம்களுக்கு நிச்சயப்படுத்தினான்.
அதேவேளை, காரணிகளை, பௌதீக விதிகளை புறந்தள்ளிவிட்டு, உலக சுகபோகங்களுக்கு ஆசைப்பட்டு உஹத் மலையுச்சியிலிருந்து தலைவரின் கட்டளையையும் புறக்கணித்தன் விளைவாக எழுபதிற்கும் மேற்பட்ட ஸஹாபாக்களின் உயிர்களை விலையாகக் கொடுக்க நேர்ந்தது. நபி(ஸல்) அவர்கள் தோண்டப்பட்டிருந்த குழிக்குள் விழ, அவர்களது நெற்றி காயப்படவும், பல் உடையவும், கண்ணங்களில் கேடயத்தின் இரு துண்டுகள் துளைக்கவும் காரணமாயின.
'ஹிஸ்ரத்' நிகழ்வு இறை நியதி, இறைக்கட்டளை, அல்லாஹ் பாதுகாப்பான் என்றிருந்த போதிலும் நபி (ஸல்) அவர்கள் பௌதீக விதிகளை அனுசரித்து பல முன்னேற்பாடுகளை செய்திருந்தார்கள். போவதற்கு ஒட்டகையை தயார்செய்தல், வழிகாட்டியாக ஒருவரை கூலிக்கமர்த்திக் கொள்ளல், பிரயானத்தின் போது வழமைக்கு மாற்றமான வழியைத் தெரிவு செய்தல், காபிர்களது கண்ணில் தமது கால் தடம் பட்டு விடக்கூடாதென்பதற்காக ஆடுகளை ஓட்டச்செய்து அவற்றை அழித்துவிடல், தொடர்ந்து பிரயாணம் மேற்கொள்ளாது நிராகரிப்பாளர்கது தேடுதல் வேட்டைகள் ஓயும்வரை 3 நாட்கள் 'தௌர்' குகையில் தங்கியிருத்தல், அஸ்மா (ரழி) அவர்களை உணவு கொண்டு வர ஏற்பாடு செய்தல் போன்ற ஏராளமான ஏற்பாடுகளை பௌதீக விதிகளை அனுசரித்து மேற்கொண்டுள்ளதையும், இறை நியதியை நினைத்து, அவன் எழுதியது நடக்கட்டும் என்று கவனயீனமாக நடந்து கொண்ட வரலாற்றினை அவர்கள வரலாற்றில் காண முடியாது.
எனவே, நல்ல விளைவுகள் தோன்றுவதற்கும், தீய விளைவுகளைத் தவிர்ப்பதற்கும் காரணங்களை, உலக நியதிகளை, பௌதீக விதிகளைப் பேணி நடந்து கொள்வது அத்தியவசியமாகும். அவ்வாறு பேணி நடக்கின்ற போதே அல்லாஹ் அதற்குரிய விளைவைத் தருவான்.
அல்குர்ஆனும் காரணங்களை, பௌதீக விதிகளை அனுசரித்து நடக்குமாறு பல இடங்களில் வலியுறுத்தியுள்ளது. 'துல்கர்னைன்' பற்றிய சம்பவத்தை கூறும் அல்குர்ஆன், கிராமவாசிகளுக்கும், 'யஃஜூஜ் - மஃஜூஜ்' கூட்டத்தாருக்கிடையில் தடுப்பை ஏற்பதுத்தும் போது அவர் காரணத்தைப் பின்பற்றியதாக பல தடவைகள் மீட்டிக் கூறுகிறது. தடுப்பை ஏற்படுத்த அவர் இரும்புப் பாலங்களை கொண்டுவரச் செய்து, அதனை தடுப்பாக ஏற்படுத்தி, மழையின் போது அவை துருப்பிடித்து இடிந்துவிடும் என்பதற்காக செம்பை உறுக்கி அதிலே ஊற்றினார். இவ்வாறு பௌதீக விதிகளைப் பின்பற்றியதன் விளைவாகவே அவருக்கு அல்லாஹ் உலகின் நாலாப்புரங்களிலும் ஆட்சி, அதிகாரத்தைக் கொடுத்தான்.
'நிச்சயமாக நாம் அவருக்கு பூமியில் (அவருடைய ஆட்சியை நிறுவ) வசதியளித்தோம். ஒவ்வொரு பொருளிலிருந்தும் (தக்க பயனை அடையும் காரண) வழிகளை நாம் அவருக்குக் கொடுத்திருந்தோம். எனவே, அவர் காரணங்களைப் பின்பற்றிச் சென்றார்.' (அல் கஹ்ப் - 84-85)
பூமியில் புற்பூண்டுகள், தாவரங்கள் முளைப்பது இறை நியதி என்ற போதிலும் அவையும் கூட அற்புதமாக நடைபெறவில்லை. அவற்றை மழைநீரைக் கொண்டு உயிர்ப்பிக்கிறான். அந்த மழைநீரைக்கூட அற்புதமாக இறக்கிவிடவில்லை. அவற்றுக்கும் மழைநீராக மாறுவதற்கு சில பெதீக ஒழுங்குகளை அல்லாஹ் வைத்துள்ளான்.
'(நபியே!) நீர் பார்க்கவில்லையா? நிச்சயமாக அல்லாஹ்தான் (பல பாகங்களிலிருந்து) மேகங்களை மெதுவாக இழுத்து, பின்னர் அவைகளை ஒன்றாகச் சேர்த்து, அதன்பின் ஒன்றின்மேல் ஒன்றாக இணையச் செய்கிறான். (பின்னர் அம்மேகங்களான) அவற்றிற்கு மத்தியிலிருந்து மழை வெளிப்படுவதை நீர் காண்கிறீர். அவனே வானத்திலுள்ள மழைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்கி வைக்கிறான்...'
(அந்நூர் - 43)
'அவன் எத்தகையவனென்றால், வானத்திலிருந்து நீரை உங்களுக்கு இறக்கி வைத்தான். அதிலிருந்து குடிபாணமும் உங்களுக்குண்டு. அதிலிருந்து வளர்ந்த மரங்களும் உங்களுக்குண்டு. அதில் உங்கள் கால்நடைகளை நீங்கள் மேய்க்கின்றிர்கள். அதனைக் கொண்டே (விவசாயப்) பயிர்களையும், ஜைத்தூன், பேரீச்சை, திராட்சைகளையும், இன்னும் பல வகைக் கணிகளிலிருந்தும் அவன் உங்களுக்காக முளைப்பிக்கச் செய்கின்றான். நிச்சயமாக சிந்திக்கக்கூடியவர்களுக்கு இதில் அத்தாட்சி இருக்கிறது. ( அன்நஹ்ல் - 10-11)
அல்லாஹ் உலக நியதிகளைப் பின்பற்றுவதாகக் கூறி மனிதர்களும் அதனைப் பின்பற்ற வேண்டும் என அல்குர்ஆன் கட்டளையிடுகிறது. பிரபஞ்ச நிகழ்வுகள் தானாக நிகழவில்லை அவை ஒரு பௌதீக விதிகளுக்கு ஏற்ப இயங்கிக் கொண்டிருக்கின்றன என்ற உண்மையை கூறுவதன் மூலம் மனிதனும் விளைவுகளைக் காண பௌதீக விதிகளை அனுசரித்து உழைப்பிலும், முயற்சியிலும் ஈடுபடுமாறு சூசகமாக கூறப்படுகிறது.
மனிதனது வெற்றிக்கும், தோல்விக்கும், அவனது மகிழ்ச்சிக்கும், கவளைக்கும் அவனது செயல்களே காரணங்களாகின்றன என்பதை அல்குர்ஆன் பல வசனங்களினூடாக சுட்டிக்காட்டுகிறது.
'திட்டமாக அல்லாஹ்விடமிருந்து பேரொளியும், தெளிவுமுள்ள ஒரு வேதமும் உங்களிடம் வந்திருக்கிறது. அல்லாஹ் அதன் மூலம் தனது பொருத்தத்தைப் பின்பற்றுகின்றவர்களை சமாதானத்துக்குரிய வழிகளில் அவன் செலுத்துகின்றான்...' (அல்மாஇதா - 15-16)
மேலுள்ள வசனத்தின் மூலம் எவர் அல்குர்ஆனின் மூலம் நேர்வழி பெற வேண்டுமென்ற நோக்கில் முன்னோக்கி வருகின்றாரோ அவருக்கே இறைவனின் வழிகாட்டல் இருப்பதாக அல்லாஹ் கூறுகின்றான். மேலும் அல்லாஹ் மனிதர்களை வழிகெடுப்பதற்கான காரணத்தை கூறும் அல்குர்ஆன், '(அல்லாஹ்வாகிய) அவன் அதிகமானவர்களை வழிகெடுக்கிறான். மேலும் அதிகமானவர்களை நேர்வழியில் செலுத்துகின்றான். அவன் வழிகேட்டில் செலுத்துவது பாவிகளைத் தவிர வேறெவரையுமல்ல.' (அல்பகறா - 26)
'நேர் வழியிலிருந்து அவர்கள் சறுகிய பொழுது, அல்லாஹ்வும் அவர்களது இதயங்களை நேர்வழியிலிருந்து சறுகச்செய்து விட்டான்.' (அஸ்ஸப் - 5) மனிதர்களை வழிகெடுக்க மனிதர்களது செயற்பாடுகளே காரணங்களாயிவேயன்றி இறைவனின் நிர்ப்பந்தமல்ல என்பதை இவ்வசனம் குறித்து நிற்கிறது.
அல்லாஹ்வின் மன்னிப்பும் கிருபையும் தானாக ஒருவருக்கு வருவதில்லை அது முயன்று பெற வேண்டியவையே.
'இன்னும் எவர் பட்சாதாபப்பட்டு (பாவத்திலிலருந்து தௌபாச்செய்து) விசுவாசமும் கொண்டு, நற்கருமங்களையும் செய்துஅதன் பின்னர் நேர்வழியில் நிலைத்திருக்கிறாரோ அவர்களுக்கு நிச்சயமாக நான் மிக மன்னிக்கிறவன்.' (தாஹா - 82)
'எனது அருளோ எல்லா பொருட்களின் மீதும் சூழ்ந்து விசாலமாகியுள்ளது.அதனை எனக்குப் பயந்து, ஜகாத்தையும் கொடுத்து வருகிறார்களே அவர்களுக்கும், எனது வசனங்களை விசுவாசிக்கின்றார்களே அவர்களுக்கும் நான் விதியாக்கிவிட்டேன்.' அல்அஃராப் - 156)
இறைவனின் தண்டனை வழங்கப்படுவது வெரும் இறை நியதியினால் மாத்திரமல்ல அதற்கும் காரணத்தை கூறும் அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது. 'மிக்க துர்ப்பர்க்கியம் மிக்கவர்களைத் தவிர வேரெவரும் அதில் (நரகில்) புக மாட்;டார்கள். அவர் எத்தகையவரெனில் (தூதர் கொண்டுவந்த சத்தியத்தைப்) பொய்யாக்கி புரக்கணித்துவிட்டார். ( அல்லைல் - 15-16)
'மேலும், நீங்கள் உங்கள் இரட்சகனிடத்தில் பாவமன்னிப்பைக் தேடுங்கள். அதன்பின்னர் (பாவங்களை விட்டுத் தௌபாச் செய்து) அவன் பக்கம் மீழுங்கள். (அவ்வாறு செய்தால்) அவன் குறிப்பிட்ட காலம் வரையில் உங்களை அழகாக சுகமாக வாழச்செய்வான். இன்னும் சிறப்புக்ரியவர் ஒவ்வொருவருக்கும் அவரது சிறப்பைக் கொடுபான். நீங்கள் (அவனைப்) புறக்கணித்தால் (மா)பெரும் நாளின் வேதனையை நிச்சயமாக நான் உங்கள் மீது பயப்படுகிறேன்' என்று நபியே நீர் கூறுவீராக.'
அல்லாஹ் மனிதர்களுக்கு வழங்கவிருக்கும் 'ரிஸ்க்' வாழ்க்கை வசதிகள் ஏற்கனவே நிhணயம் செய்யப்பட்டதாக இருப்பினும் அவற்றை மனிதன் முயன்று பெற வேண்டியுள்ளான். அது தானாக வந்து சேரமாட்டாது. 'அவன் எத்தகையவனென்றால் பூமியை உங்களுக்கு வாழ்வதற்கு எளிதானதாக ஆக்கிவைத்தான். எனவே, அதன் பல பாகங்களுக்கும் சென்று அவன் உங்களுக்கு அளித்திருக்கும் உணவிலிருந்து உண்ணுங்கள்.' (அல்முல்க் - 15)
'(ஜூம்ஆத்) தொழுகை நிறைவேற்றப்பட்டு விட்டால் (பள்ளியிலிருந்து வெளிப்பட்டுப்) பூமியில் பரவிச் சென்று அல்லாஹ்வுடைய பேரருளைத் தேடிக் கொள்ளுங்கள்...' ( அல்ஜூம்ஆ - 10)
அல்லாஹ்வின் அருளும், அவனது வாழ்;வாதாரங்களில் விஸ்தீரனமும் கிடைப்பதற்கு காரணத்தை அல்குர்ஆன் கூறுகிறது. 'யார் அல்லாஹ்வை அஞ்சி நடக்கின்றார்களோ அவர்களுக்கு (ஒவ்வொரு சங்கடங்களிலிருந்தும்) வெளியேறும் வழியை அவன் ஆக்குவான். மேலும், அவர் எண்ணிராத விதத்தில் அவருக்கு வாழ்க்கை வசதிகளை அவன் ஆக்குவான்.' (அத்தலாக் - 2-3)
மனிதனுக்கு ஆரோக்கியத்தையும், நோயையும் அல்லாஹ் தான் ஏற்படுத்துகிறான் என்ற போதிலும் அதற்குரிய காரணிகளைப் பேணி, ஆரோக்கியமான உணவைத் தேடி உண்பதும், உடலுக்கு கேடு விளைவிக்கக்கூடியவற்றைத் தவிர்ப்பதும், சுத்தத்தைப் பேணுவது போன்ற செயற்பாடுகள் மனிதனிடமிருந்து எதிர்பார்க்கப்படுகின்றன.
'விசுவாசம் கொண்டோரே! நாம் உங்களுக்கு அளித்ததில் நல்லவற்றை உண்ணுங்கள்... உங்கள் மீது (அல்லாஹ்வாகிய) அவன் தடைவிதித்திருப்தெல்லாம் தானாகச் செத்ததையும், இரத்தத்தையும், பன்றியின் மாமிசத்தையும், அல்லாஹ் அல்லாதவருக்காக அறுப்புப் பிராணிகளில் எதற்கு பெயர் கூறப்பட்டு விடப்பட்டதோ அதையும்தான்...( அல்பகரா - 172-173)
எந்த நோயாக இருப்பினும் அது குணமடைய அதற்குரிய மருந்தை மனிதன் கண்டுபிடித்து பயன்படுத்த கடமைப்பட்டிருக்கிறான். இறை நியதி என்று அது தானாக குணமாகி விட மாட்டாது. நபி (ஸல்) கூறினார்கள், 'அல்லாஹ் எந்தவொரு நோயை இறக்கினாலும் அதற்குரிய மருந்தையும் இறக்கிவிடுகிறான்.' ( புஹாரி)
அல்லாஹ் மனிதர்களுக்கு தேவைகளை கேட்கச் செல்லியிருப்பதும் மனிதன் செயற்பட வேண்டும் என்பதற்காகவே. இறை நியதி என்றவகையில் அவனுக்கு அத்தேவைகளுக்குரிய பரிகாரங்கள் தானாக வந்து சேர மாட்டாது என்ற கருத்தை அது சுட்டுகின்றது. 'இன்னும் உங்களுடைய இரட்சகன் கூறுகிறான்,'நீங்கள் என்னையே அழைத்துப் பிரர்த்தியுங்கள். நான் உங்களுடைய பிரார்தனைக்கு பதிலளிப்பேன்... ( அல்முஃமின் - 60)
மனிதர்களுக்கு ஏற்படும், நன்மைகளுக்கும், நற்பாக்கியங்களுக்கும், அவனை அடைந்துகொள்ளும் தீவினைகளுக்கும் மனித செயற்பாடுகளே காரணம் என்ற உண்மையை அல்லாஹ் கூறுகிறான்.
'மேலும் துன்பத்தால் எது உங்களை வந்தடைந்தாலும் உங்கள் கரங்கள் சம்பாதித்துக்கொண்ட(காரணத்)தினாலாகும். (உங்களைப் பிடிக்கவேண்டியவற்றிலிருந்து) பெரும்பாலானவற்றை அவன் மன்னித்தும் விடுகிறான்.' (அஷ்ஷூரா - 30)
'மனிதர்களின் கரங்கள் சம்பாதித்த தீவினையின் காரணமாக கரையிலும், கடலிலும் குழப்பம் வெளிப்பட்டுவிட்டன. அவர்கள் செய்த தீயவற்றில் சிலவற்றை அவர்களுக்கு அவன் சுவைக்கும்படிச் செய்வதற்காக இவ்வாறு சோதிக்கிறான்...' (அர்ரூம் - 41)
இவ்வசனங்கள் மனிதன் செய்யும் உழைப்புக்கும் முயற்சிக்கும் ஏற்பவே அல்லாஹ்வினால் கூலி வழங்கப்படுகிறான் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகின்றன.
உலகில் தோன்றிய இறைத்தூதர்களது வராற்றை மீட்டிப்பார்த்தாலும், அவர்கள் இறைவனது முழுப் பாதுகாப்பும், வாழ்வாதாரங்களும் உத்தரவாதப்படுத்தப்பட்ட நிலையிலும் தமது அழைப்புப்பணியுடன் சேர்த்து அவர்கள் பௌதீக விதிகளை அனுசரித்து ஜீவனோபாயத்திற்காக உழைத்த வரலாற்றை காணமுடியும். தாவூத் (அலை) அவர்கள் கேடயங்களை செய்து விற்பனை செய்பவராகவும், ஸகரிய்யா (அலை), நூஹ் (அலை) போன்றோர் தச்சர்களாகவும், பொதுவாக எல்லா இறைத்தூதர்களுமே ஆடு மேய்ப்பவர்களாகவும் இருந்துள்ளனர்.
நபி (ஸல்) அவர்களதும் கூட பொருட்களை சுமந்து சந்தைக்குச் சென்று விற்பனை செய்பவராக காணப்பட்டார்கள். நிராகரிப்பாளர்கள் அவர்களை நோக்கி, 'இந்த தூதருக்கு என்ன நேர்ந்தது? இவர் (மற்ற மனிதர்களைபப் போன்றே) உணவு உட்கொள்கின்றார், கடைத்தெருக்களில் நடமாடுககிறார்...' (அல்புர்கான் - 7) என கூறினர். ஸஹாபாக்கள தங்களது வாழ்வில் பல்வேறு சோதனைகளை எதிர்கொண்டனர் அதுவும் ஒரு இறைநியதியே.
'நாங்கள் விசுவாசம் கொண்டுவிட்டோம் என்று கூறுவதன் மூலம் (மட்டும்) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டுவிடப்படுவார்கள் என மனிதர்கள் எண்ணிக்கொண்டிருக்கின்றனரா? இவர்களுக்கு முன்னாலிருந்தவர்களையெல்லாம் நிச்சயமாக நாம் சோதித்தே இருக்கிறோம்...' (அல்அன்கபூத் - 2-3)
இத்தகைய சோதனைகளை (ஸல்) அவர்களும், ஸஹாபாக்களும் நிhணயித்த விதியாக ஏற்றுக்கொண்ட அதேவேளை, அவற்றிலிருந்து பாதுகாப்பு பெற்றுக் கொள்ளவும் முயன்றுள்ளனர். தமது விதிப்படி நடக்கட்டும் என்று பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபடாது இருந்து விடவில்லை. அம்மார் இப்னு யாஸிர் (ரழி) அவர்கள் அபூ ஜஹ்லினால் கடுமையாக துண்புறுத்தப்பட்டபோது துண்பம் பொறுக்க முடியாமல் அவர்களது கொள்கைக்கு சார்பாக மொழிந்து விட்டார். பின்பு கவளை கொண்டு நபியவர்களிடம் வந்து மறையிட்ட போது, ' நீங்கள் அவ்வாறு கூறுகின்ற போது உங்களது உள்ளம் எந்த நிலைப்பாட்டில் இருந்தது?' என நபியவர்கள் வினவவே, ' உள்ளத்தில் ஈமானை திருப்தியாக ஏற்றுக் கொண்ட நிலையில் இருந்தது' என்று பதில் வழங்கியதும், 'மீண்டும் அவர்கள் உன்னை துண்புறுத்த வந்தால் அவர்வாறே சொல்லி விடு' என்றார்கள். இதனை ஆதரித்தே அல்லாஹ் அல்குர்ஆனில் சூரா அந்நஹ்ல் 106 ஆம் வசனத்தை இறக்கி வைத்தான்.
ஸஹாபாக்களுக்கு துண்பங்கள் சகிக்க முடியாத சந்தர்ப்பத்தில் பாதுகாப்பு நடவடிக்கையாக அவர்களை முதலில் அபீஸீனியாவுக்கும், பின்பு மதீனாவுக்கும் ஹிஜ்ரத் அனுப்பி வைத்தார்கள். நபியவர்கள் மதீனாவிற்கு ஹிஜ்ரத் மேற்கொண்ட ஆரம் கால கட்டங்களில் நிராகரிப்பாளர்களது தீவினையை எண்ணி நெடு நாட்கள் இரவில் ஒழுங்காக உறக்கமின்றியிருந்தார்கள். இவ்வாறு எச்சரிக்கையாக நடந்துகொள்ள வேண்டிய சந்தர்ப்பங்களிலெல்லாம் எச்சரிக்கையாக நடந்து கொண்டுள்ளார்கள்.
எனவேதான், ஸஹாபாக்கள் வாழ்விலும் கூட இந்த பௌதீக விதிகளைப் பின்பற்றிய வரலாறு காணப்படுகிறது. சிரியா நாட்டுக்குச் சென்றுகொண்டிருந்த உமர் (ரழி) அவர்கள் அந்நாட்டில் தொற்று நோய் பரவியுள்ள செய்தியைக் கேள்வியுற்று, அங்கே செல்வதில்லையென்றும், தம்மிடனுள்ள முஸ்லிம்களுடன் மதீனாவுக்கு திரும்பிச் செல்வதாக முடிவு செய்தார்கள். அப்போது அபூ உபைதா (ரழி) அவர்கள் இவரைப் பார்த்து, ' அமீருள் முஃமினீன் அவர்களே! அல்லாஹ் விதித்துள்ள விதிக்குப் பயந்து தப்பியோடுவதற்கு முயற்சிக்கின்றீர்களா!?' என வினவினார். அதற்கு உமர் (ரழி) அவர்கள், ' ஆம் அல்லாஹ் நிர்ணயம் செய்துள்ள ஒரு விதியிலிருந்து அவன் நிர்ணயம் செய்துள்ள இன்னொரு விதியை நோக்கி தப்பித்துச் செல்கின்றேன்' என பதிலளித்தார்கள்.
'நோய்க்குரிய மருந்தை பெற்றுக்கொள்வது விதிக்கு முரணானதா?' என நபி (ஸல்) அவர்களிடம் வினவப்பட்டபோது, 'அதுவும் அல்லாஹ்வின் விதிக்குற்பட்டதே' என பதிலளித்தார்கள். இக்கருத்தை சரியாக புரிந்திருந்ததன் விளைவாகவே உமர் (ரழி) இவ்வாறு நோயிலிருந்து தம்மையும், இதர ஸஹாபாக்களையும் காத்துக் கொள்ள நடவடிக்கை மேற்கொண்டார்கள்.
மற்றொரு முறை திருட்டுப்பழி சுமத்தப்பட்ட ஒரு திருடன் உமர் (ரழி) அவர்களிடம் கொண்டுவரப்பட்டான். அவனிடம், 'நீ எதற்காக திருடினாய்' என வனவினார்கள். அதற்கவன், 'அல்லாஹ் இவ்வாறுதான் கழாகத்ரில் நிர்ணயம் செய்துள்ளான்' என பதிலளிக்கவே, 'இவனுக்கு 30 சாட்டையடி வழங்குங்கள் பின்னர் அவனது கையை துண்டித்து விடுங்கள்' எனக்கூறினார்கள். ஏன் அவ்வாறு செய்வதென வினவப்பட்டபோது, ' கைதுண்டிக்கப்படுவது அவன் செய்த களவுக்காக, சாட்டையடி அவன் 'கழாகத்ர்' விடயத்தில் அல்லாஹ் மீது பொய்யுரைத்தமைக்காக' என்றார்கள். (அஸ்ஸெய்யித் ஸாபிக், அல்அகாஇதுல்; இஸ்லாமியா - பக் 85)
உண்மையில் இந்த சம்பவங்கள் உமர் (ரழி) அவர்கள் கழாகத்ர் நம்பிக்கையில் கொண்டிருந்த ஞானத்தையும், தெளிவையுமே எடுத்துக் காட்டுகிறது. ஸஹாபாக்கள் ஏழ்மையை உழைப்பினாலும், மடமையை அறிவினாலும், நோயினை நிவாரணத்தினாலும், நிராகரிப்பினையும், பாவச் செயல்களையும் இறைவழிப் போராட்டத்தின் மூலமும் எதிர்த்துப் போராடினர். கவளை, துக்கம், இயலாமை, சோம்பேரித்தனம் போன்றவற்றை நீக்கிக் கொள்வதற்காக அல்லாஹ்விடம் பாதுகாப்பை வேண்டினர். இந்நிலையில் தமது நிராகரிப்புக்கும், தீய செயல்களுக்கும் அல்லாஹ்வின் கத்ரை காரணங்காட்டிய இறை நிராகரிப்பாளர்களை அல்குர்ஆன் சாடுகிறது.
'அல்லாஹ் நாடியிருந்தால் நாங்களும், எங்களுடைய மூதாதையர்களும் (அல்லாஹ்வுக்கு எதனையும்) இணைவைத்திருக்க மாட்டோம். (உண்ணக்கூடிய) யாதொன்றையும் (ஆகாதென்று) நாம் விலக்கியிருக்க மாட்டோம்' என்று இணைவைத்துக் கொண்டிருப்போர் கூறுவார்கள். இவர்களுக்கு முன்னிருந்தோரும் நமது வேதனையைச் சுமக்கும் வரை இவ்வாறே (தூதர்களைப்) பொய்யாக்கிக் கொண்டிருந்தனர். (ஆகவே, நீர், 'உங்களது கூற்றுக்கு) உங்களிடம் ஏதும் அறிவார்த்த(மான ஆதார)முண்டா? (அவ்வாறு இருந்தால்) அதனை நமக்கு வெளிப்படுத்திக் காட்டுங்கள். (உங்களது அர்த்தமற்ற வீணான)எண்ணத்தையல்லாது வேறு எதையும் நீங்கள் பின்பற்றவில்லை. இன்னும் நீங்கள் அனுமானம் கொள்கின்றவர்களேயன்றி வேறில்லை.' என்று கூறுவீராக!' (அல்அன்ஆம் - 148)
மேலுள்ள வசனம் இரு உண்மைகளை சுட்டுகின்றது. முதலாவது அவர்களுக்கு வழங்கப்படும் தண்டனைக்குரிய காரணம் அவர்கள் செய்த தீவினையேயன்றி கத்ரில் உள்ளது என்பதற்காகவல்ல. அடுத்து, அவர்களது அந்த வாதாட்டத்திற்குரிய காரணம் அல்லாஹ் பற்றியும், மார்க்கத்தைப் பற்றியும் அவர்களுக்கிருந்த அறியாமையை பிரதிபளிப்பதாகவே காணப்படுகிறது.
நீரை அருந்துவதானது தாகத்தைத் தனிப்பதற்கு காரணமாக அமைவது போல, உணவு உட்கொள்வது பசியைத் நீக்குவதைப் போல, நெருப்பைத தொட்டால் சுடுவது போல மனிதன் நேர்வழி பெறுவதற்கும், அவன் வழிகெட்டுச்செல்வதற்கும் அவனது முயற்சியும் செயற்பாடுகளுமே காரணங்களாகின்றன. அவனது நேர்வழிக்கும் நன்மைக்கும் அவனது நற்செயல்களும், அவனது வழிகேட்டிற்கும், தீமைக்கும் அவனது தீய நடத்தைகள் காரணங்களாகின்றன.
'மேலும், நம்முடைய வழியில் (செல்ல) முயற்சிக்கின்றார்களே அத்தகையோர், நிச்சயமாக நாம் அவர்களை நம்முடைய (நேரான) வழியில் செலுத்துகின்றோம். மேலும் நிச்சயமாக அல்லாஹ் நன்மை செய்பவர்களுடன் இருக்கிறான்.' (அல்அன்கபூத் - 69)
' (நேர்வழியிலிருந்து) அவர்கள் சறுகிய பொழுது, அல்லாஹ்வும் அவர்களது இதயங்களை (நேர்வழியிலிருந்து) அவர்களது இதயங்களை சறுகச்செய்துவிட்டான். அன்றியும் பாவிகளான சமுதாயத்தை அல்லாஹ் நேர்வழியில் செலுத்தமாட்டான்.' (அஸ்ஸஃப் - 5)
ஒரு மனிதன் தலைவிரிகோலமாக, அசுத்தமான நிலையில் கண்ணாடியின் முன் சென்று நின்றால் அவனது பிரதிவிம்பம் அவ்வாறு தான் கண்ணாடியில் தென்படும். அதேவேளை, அவன் அழகாக தலைமுடியை சீவி, சுத்தமாகவும், கம்பீரமாகவும் நின்றால் அவனது விம்பம் கண்ணாடியில் அழகானதாகத் தான் தோற்றமளிக்கும். இவ்வாறு தான் மனிதனின் செயற்பாடுகள் யாவும் எழுதப்பட்டிருந்தாலும் அவை மறைக்கப்பட்டிருக்கின்றமையினால் மனிதன் எந்த நிலையில் செயற்படுகிறானோ அந்த நிலையை வைத்தே அவன் விளைவுகளைப் பெறுவான்.
எனவே, மனிதன் உழைப்பு, முயற்சியில் ஈடுபடாது விதியை பிழையாக வளங்கி அல்லாஹ்விடம் தவக்குல் வைக்கும் நிலைப்பாட்டை இஸ்லாம் ஆதரிக்கவில்லை. நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, 'நான் ஒட்டகையை கட்டிவிட்டு தவக்குல் வைக்கவா, கட்டாது தவக்குல் வைக்கவா?' என வினவ, 'கட்டிவிட்டு தவக்குல் வைப்பீராக.' (தபரானி, இப்னு ஹிப்பான்) என்று கூறியது குறிப்பிடத்தக்கது.
இந்த ஹதீஸ் மற்றுமொரு முக்கிய கருத்தை எமக்கு கூறுகின்றது. அதாவது, ஒட்டகத்தைக் கட்டாது விட்டால் ஒட்டகம் தொலைந்து அவனுக்கு நஷ்டத்தை ஏற்படுத்திவிடும். அது தானாக அல்லாஹ்வினால் கட்டாது பாதுகாக்கப்பட மாட்டாது என்ற கருத்தை கூறுவது போன்றே, மனித வாழ்வில் துண்பங்கள், நஷ்டங்கள் வருவதற்கு முன்பு விதியை நம்பி முயற்சியில் ஈடுபடாது இருந்துவிடக்கூடாது என்ற உண்மையையும் சொல்லித் தருகிறது.
உதாரணத்திற்காக வெள்ளம் வருமன் அணை கட்ட வேண்டும் என்று கூறுவதைப் போன்று, பௌதீக விதிகளை மதித்து முன்னேற்பாடுகளை செய்துகொள்ள வேண்டும். நோய் வருவதற்கு முன் அதற்குரிய தடுப்பூசிகளை பயன்படுத்துவது, புவி நடுக்கம், சுனாமிப் பேரலைகள், சூராவளிகள் போன்றன தோன்றுவதற்கு முன்பாக அவற்றைக் கண்டுபிடிக்கும் உபகரணங்களைப் பயன்படுத்தி அவற்றிலிருந்து பாதுகாத்துக்கொள்வதற்கான ஏற்பாடுகளைச் செய்வது. மழை, வெய்யில், கோடை, மண் சரிவு, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களை வானிலை அவதானங்கள் மூலம் முன்னறிந்து பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளல் போன்ற முயற்சிகளை மேற்கொள்வதானது மனிதனுக்கு ஏற்படவிருக்கும் நஷ்டங்களை, உயிரிழப்புகளை, சேதங்களைக் குறைக்க உதவும் என்றவகையில் அவற்றை மேற்கொள்வது அவசியம். அவை விதிக்கு முரணானவைகளல்ல என்ற கருத்தையும் இந்த ஹதீஸ் எமக்கு தெளிவுபடுத்துகிறது.
எனவே, விதியை நம்பியவன் தனது வாழ்வாதாரங்களையுளும், இதர தேவைகளையும் பெற்றிடவும், இயற்கையின் பாதிப்புக்களிலிருந்து தன்னைக் காத்துக் கொள்ளவும் முயற்சி செய்யாது எல்லாம் விதியின் பிரகாரமே நடைபெறுமென்று உழைப்பு, முயற்சியின்றியிருப்பது வதியை விதியை நிராகரிப்பதற்கு சமனாகும்.
எனவேதான், அல்லாஹ்வின் கத்ரில் நம்பிக்கை வைத்து உழைப்பு, முயற்சியில் ஈடுபடாது பள்ளிவாசலுக்குள் முடங்கிக்கிடந்த ஒரு குழுவினரை உமர் (ரழி) அவர்கள் சாட்டையால் அடித்து விரட்டியதாக வரலாறு கூறுகிறது. முயற்சியும், உழைப்பும் இல்லாத சமுகம் ஒருபோதும் நிலைத்திருக்க முடியாது, அச்சமுகம் இறையருள் பெற்றதாக இருக்கமாட்டாது என்ற உண்மையை அவர் விளங்கியிருந்தமையே இதற்குக் காரணமாகும்.
அல்லாஹ் தனது விரிந்த ஞானத்தாலும், மிக நுணுக்கமான அறிவினாலும் இவ்வுலகில் நிகழும் சகலவற்றையும் பதிவுசெய்து வைத்துள்ளான். ஆயினும், அவை எமக்கு மறைத்து வைக்கப்பட்டுள்ளன.
'பூமியிலோ அல்லது உங்களுக்கோ ஏற்படக்கூடிய எந்தவொரு கஷ்டமும், நஷ்டமும் அவற்றை நாம் படைப்பதற்கு முன்னதாகவே (லவ்ஹூல் மஹ்பூல் எனும்) புத்தகத்தில் பதிந்து வைத்துள்ளோம். நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதாகும்.' (அல்ஹதீத் - 22)
இவ்வாறு அல்லாஹ் பதிந்து வைத்துள்ளான் என்பதற்காக மனிதன் விளைவுகளைப் பெறுவதற்கு உழைப்பும், முயற்சியும் அவசியமில்லை என்பது கருத்தல்ல. மாறாக மனித உழைப்பும், முயற்சியும் அத்தியவசியமாகும். விதி பதியப்பட்டிருப்பதானது அல்லாஹ்வின் சக்தி, ஆற்றலுடன் தொடர்புடையதாகும்.
இக்கருத்தினையே இமாம் அஷ்அரி (ரஹ்) அவர்கள் குறிப்பிடும் பொழுது, 'முயற்சியும், உழைப்பும் மனிதனைப் பொறுத்தது. விளைவுகளைத் தோற்றுவிப்பது அல்லாஹ்வைப் பொறுத்தது. மனித முயற்சியையும், உழைப்பையும் அடுத்து அவற்றோடு தொடர்பான விளைவுகளை அல்லாஹ் தோற்றுவிக்கிறான். உதாரணமாக ஒருவன் சாப்பிட்டால் அல்லாஹ் அவனது பசியை தீர்த்து வைக்கிறான். மருத்துவம் செய்தால் நோயைக் குணப்படுத்துகிறான்.' என்றார்கள்.
முடிவுரை
மேலுள்ள ஆதாரங்களின் அடிப்படையில் நோக்கும் போது மனிதன் முயற்சியிலும், உழைப்பிலும் ஈடுபடுவதும், அதன்மூலமே விளைவுகள் தோன்றுவதும் விதி பற்றிய நம்பிக்கையின் அடிப்படையாகும். ஏனெனில் நிகழும் நிகழ்வுகளை, விளைவுகளை அல்லாஹ் பதிவுசெய்து வைத்திருப்பது போன்றே அதற்குரிய காரணங்களையும் பதிவுசெய்து வைத்துள்ளான் என்பது குறிப்பிடத்தக்கது. அந்தவகையில் மனித உழைப்பும், முயற்சியும் அல்லாஹ்வின் சக்தியோடு சேர்ந்து இருக்கவேண்டும் என்பது அவசியமாகும். இக்கருத்து மனித முயற்சியின்றி அல்லாஹ்வின் கக்தி தொழிற்பட முடியாதென்ற கருத்தல்ல. மாறாக, அல்லாஹ் தனது சக்தியின் வெள்pப்பாட்டை மனித முயற்சியோடும் தொடர்புபடுத்தி வைத்துள்ளான் என்பதையே இது குறிக்கிறது. மனிதன் தானாக ஒன்றை செய்வதற்கு நாடுகின்றபோது அல்லாஹ் அதற்குரிய ஆற்றலை அவனில் உருவாக்கிவிடுகிறான் என்பதே உண்மையாகும்.
அத்தோடு, விதி பற்றிய நம்பிக்கையானது மனித முயற்சிக்கும், உழைப்புக்கும் எவ்வகையிலும் தடையல்ல. மாறாக அது மறைக்கப்பட்டிருப்பதானது மனிதனின் முயற்சியை, உழப்பை, அவனது செயற்பாட்டு வேகத்தை மேலும் கூட்டுமே தவிர அவனை முடங்கிக் கிடக்கச் செய்யாது. மேலும், விதி பற்றிய இந்த நம்பிக்கையானது எதி;ர்காலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்வுகளை மனிதன் தனக்கு பயன்மிக்கதாவும், நல்ல விளைவுகளைத் தரக்கூடிய வகையிலும் பயன்படுத்திக் கொள்வதற்கு இன்றியமையாததாகும்.
ஆரம்பகால 'ஸலபுஸ் ஸாலிஹீன்கள்' விதி பற்றிய நம்பிக்கையுடன் தொடர்பான அம்சங்களில் மூழ்குவதற்கு முன்வரவில்லை. உள்ளதை உள்ளவாரே ஏற்றிருந்தார்கள். சிலபோது நபி (ஸல்) அவர்களது எச்சரிக்கையும் இதற்கு காரணமாக இருக்கலாம். எனவேதான், அபூஹூறைரா (ரழி) அவர்களிடம் கத்ர் பற்றி வினவப்பட்டபோது கூறுகின்றார்கள் 'அது இருள் நிறைநத பாதை அதில் நாம் நடக்கக்கூடாது.' மீண்டுமொரு முறை வினவப்பட்டபோது, 'அது ஆழமான கடல் அதை அடைய முற்படாதே.' மீண்டுமொரு முறை வினவப்பட்டபோது, 'அது உன்னை விட்டும் மறைக்கப்பட்டுள்ள அல்லாஹ்வின் இரகசியம் அதனை ஆராய முற்படாதே.' என்று குறிப்பிடுகிறார்கள்.
அந்தவகையில், இத்துறை குறித்த விரிந்த ஆய்வுகளைத் தவிர்த்து போதிய அளவில் மனித முயற்சி, உழைப்பு என்பவற்றிற்குரிய விளைவுகளையே அல்லாஹ்வின் 'கழா கத்ர்' இறை நியதியிலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, மனிதன் அவனுக்குரிய அம்சங்களை முயன்று பெற வேண்டியுள்ளான் என்பதை இவ்வாய்வு மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுவதாக அமைகிறது.
இவ்வாய்வு மூலம் நான் கூறவந்த கருத்துக்களில் மிகச்சரியாக முன்வைத்தவை அனைத்தும் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தவையே, இதில் நான் தவறு விட்டிருந்தால் அது எனது பலவீனத்தின் விளைவுகளே.
'நன்றி'