Sunday, March 4, 2012

இஸ்லாம் வழங்கும் மனித உரிமைகள் 2

இஸ்லாம் வழங்கியுள்ள அடிப்படை மனித உரிமைகள் 2

   அடிப்படை மனித உரிமை என்று கூறும் போது, முதலாவது அடிப்படை விடயம் இஸ்லாம் மனிதனை, மனிதனாக மதிக்கிறது. அதன்விளைவாக அவனுக்கு பல உரிமைகளை வழங்கியுள்ளது. ஒவ்வொரு மனிதனும், அவன் எந்த நாட்டை, இனத்தை சார்ந்தவனாக, எந்த மொழி பேசுபவனாக இருப்பினும் அவர் ஒர் இறை நம்பிக்கையாளனாக இருந்தாலும் இறை மறுப்பாளனாக இருப்பினும், காட்டில் வாழ்பவனாக இருப்பினும் பாலைவனத்தில் வாழ்ந்தாலும் மனிதன் என்ற காரணத்தினால் பல அவன் பல அடிப்படை உரிமைகளை அவன் பெறுகிறான். அந்த உரிமையை இஸ்லாத்தைப் பின்பற்றும் ஒவ்வொருவரும் ஏற்று, மதித்து நடப்பது கடமையாகும். அந்தவகையில், இஸ்லாம் வழங்கியுள்ள அடிப்படை மனித உரிமைகளை  சுருக்கமாக நோக்கினால் பின்வருமாறு கூறலாம்.

 வாழும் உரிமை
    இஸ்லாம் மனிதனுக் எத்தகைய தலையீடுகளுமின்றி சுதந்திரமாக உலகில் வாழும் உரிமையை வழங்கியுள்ளது. இஸ்லாமிய நோக்கில், படைப்புகளில் சிறப்பும் மேன்மையும் கண்ணியமும் கொண்ட படைப்பாக மனிதன் காணப்படுகிறான். அவனுக்கு, 'கலீபதுல்லாஹ்' அல்லாஹ்வின் பிரதிநிதி என்ற உயர் அந்தஸ்தை இஸ்லாம் வழங்கியுள்ளது. அல்குர்ஆன் பல சந்தர்ப்பங்களில் மனிதனின் உயர்ந்த நிலை பற்றியும், ஏனைய படைப்புகளை விட மேலான அவனது சிறப்பு பற்றியும் குறிப்பிடுவதைக் காணலாம். ' நிச்சயமாக  நாம் ஆதமுடைய சந்ததியை கண்ணியப்படுத்தினோம். கரையிலும்(வாகனங்கள் மீதும்) கடலிலும் (கப்பல்கள் மீதும்) நாம் அவர்களை சுமந்து செல்கின்றோம். நல்ல ஆகாரங்களையும் நாமே அவர்களுக்கு அளிக்கின்றோம். நாம் படைத்த (மற்ற சீவராசிகளில்) அனேகமானவற்றின் மீது (பொதுவாக) நாம் அவர்களை மேன்மையாக்கி வைத்துள்ளோம்'. (17:70)

     அல்குர்ஆன் மனிதனின் உரிமையினை பெறுமதியானதாக மதித்து அதனைப் புனிதமானதாகக் கருதுகிறது. அது முஸ்லிமின் உயிர் என்பதற்காகவல்ல. மனிதன் என்ற கண்ணோக்கிலேயானும்;. அந்தவகையில், மனித உயிர் அழிக்கப்படுவதை அது தடுப்பதோடு, தற்கொலையை மிக வன்மையாகக் கண்டித்து தடை செய்துள்ளது. 'உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது மிக்க அன்புடையவனாக இருக்கின்றான்' (4:29)

     நியாயமான காரணமின்றி மனித உயிர் அழிக்கப்படக் கூடாது என குறிப்பிடும் அல்குர்ஆன், இவ்வாறு நியாயமான காரணமின்றி ஒரு தனி மனிதனைக் கொலை செய்வதானது, மனித சமுகம் முழுவதையும் செய்வதற்கு சமமானதாகக் கருதுகின்றது. 'எவனொருவன் மற்றொரு ஆத்மாவைக் கொலை செய்ததற்குப் பிரதியாகவோ அல்லது பூமியில் குழப்பத்தைத் தடை செய்வதற்காகவோ அன்றி (அநியாயமாகக்) கொலை செய்கிறானோ அவன் மனிதர்கள் யாவரையும் கொலை செய்தவன் போலாகின்றான். அன்றி எவன் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறானோ, அவன் மனிதர்கள் யாவரையும் வாழ வைத்தவன் போவான்'. (5:32)

     எனவே, ஒரு மனிதனின் உயிரை இன்னொரு மனிதன் தன்னிச்சையாகப் பறிப்பதற்கு எவ்வித உரிமையோ, அதிகாரமோ கிடையாது. எனவேதான் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், 'இணைவைப்பதற்கு அடுத்தபடியான மிகப்பெரிய குற்றம் மனிதக் கொலையாகும்' எனவும்,
   'இறைவனுக்கு இணை கற்பிப்பதும் மனிதர்களைக் கொள்வதும் பெரும் பாவமாகும்' எனவும் நவின்றார்கள்.

    ஒரு தனிமனிதன் அடுத்தவரின் வாழ்வுக்கு பங்கம் ஏற்படுத்தி, கொலை செய்வது, அடுத்த மனிதர்களின் வாழ்வுக்கும் உரிமைகளுக்கும் அவரது அமைதிக்கும் பங்கம் விளைவிப்பதன் மூலம் ஒருவன் தான் வாழும் உரமையை இழந்து விட்டான் என்பதை அதற்கென அமைக்கப்பட்ட நீதிமன்றம் மட்டுமே முடிவு செய்யும். இதனை அல்லாஹ், 'அல்லாஹ் புனிதமாக்கிய (மனித) உயிரை முறையான நீதி விசாரணையின்றி கொலை செய்யாதீர்கள்' (6:151)

     மேலுள்ள அனைத்து வசனங்களும் 'உயிர்' என்பது பொதுவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது. எதில் முஸ்லிம்களுக்கென சிறப்புப் பொருளும், பாகுபாடுகளும் காணப்படவில்லை. அவ்வாறு பயன்படுத்தப்பட்டிருந்தால் அது இஸ்லாத்தை ஏற்ரோரின் சார்பாக வந்த சட்டமாகக் கொள்ள இடமுன்டு.

    மனிதனுக்கு வாழும் உரமையை வழங்கியது இஸ்லாம் மட்டுமே.  மனித உரிமை பற்றி பேசுவோரின் ஏனைய தரப்பினரை நோக்கினால், மனித உரிமைகள் அவர்களது அரசியல் சாசனத்தில் அல்லது பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் அவ்வுரிமைகள் அவர்களது குடிகளுக்கு மட்டுமே அல்லது இனத்தவர்களுக்கு மட்டுமே என்ற நிலை காணப்படும்.

    எனவேதான், அவஸ்திரேலியாவில் வெள்ளையர்கள்களை குடியமர்த்துவதற்காக அங்கு காணப்பட்ட பழங்குடி மக்களை மிருகங்களைப் போல் வேட்டையாடப்பட்டு அழித்தொழிக்கப்பட்டார்கள். அமேரிக்காவில் வெள்ளையர் குடியமர்வதற்காக அங்கு காணப்பட்ட செவ்விந்தியர்களை வெறித்தனமாக கொன்று குவித்தனர். செவ்விந்தியர்கள் குறிப்பிட்டதொரு சிறு பகுதியில் தமக்கென அமைத்து வாழ வேண்டிய சூழல் ஏற்பட்டது. ஆபிரிக்க நாடுகளில் வெள்ளையர் ஊடுருவி, காட்டு விலங்குகளை வேட்டையாடுவதைப் போல அங்கிருந்த கருப்பர்களை வேட்டையாடினர்.

     இந்த வரலாறுகள் அவர்களுக்கு மனித உயிர்கள் மீது எவ்வித அக்கறையும் இல்லை என்பதை நிரூபிக்கிறது. அவர்கள் மதிப்பளித்தாலும் கூட தேச, இன, நிற வேறுபாடுகளுக்கமைய அவை பேனப்படுகின்றவே தவிர ஒட்டுமொத்த மனித சமுகத்துக்குமல்ல.

    ஆனால் இஸ்லாமிய உரிமைகளைப் பொருத்தவரையில், ஒரு மனிதன் காட்டில் வசிப்பவனாக இருப்பினும், நாகரிகத்தின் உச்சத்தில் வாழ்பவனாக இருப்பினும் அனைவருக்கும்  சமனே.

உயிர் பாதுகாப்புக்கான உரிமை
    மனித உரிமை பற்றி பேசும் போது, இஸ்லாத்தில் வாழும் உரிமை இல்லை என்ற விமர்சனம்  முன்வைக்கப்படுகின்றது. 'மனித உரிமைச்சட்டம் வாழும் உரிமை பற்றி பேசுகிறது. ஆனால் இஸ்லாத்தில் இஸ்லாமிய நம்பிக்கையை ஏற்றுக்கொள்லாதவர்களும், கடவுள் மறுப்பாளர்களும் இஸ்லாமிய நாட்டில் வாழத் தகுதியற்றவர்கள்' என்ற விமர்சனத்தை மாற்று மத சகோதராகள் முன்வைக்கின்றனர்.
  
   ஆனால், உண்மையில் இஸ்லாம் மனிதனுக்கு வழங்கும் உரிமைகளில் பிரதானமான அடுத்த உரிமையாக இதனைக் கருதலாம். இஸ்லாம் மனிதனுக்கு உலகில் சுதந்திரமானவனாக வாழும் உரிமையை வழங்குகிறது. எந்த ஒரு மனிதனாலும் அவனது உயிர்வாழும் அவ்வுரிமையை பறித்துவிட முடியாது.

   'அன்றி எவன் ஒரு ஆத்மாவை வாழ வைக்கிறானோ, அவன் மனிதர்கள் யாவரையும் வாழ வைத்தவன் போவான்'. (5:32) என அல்குர்ஆன் இவ்வுரிமை பற்றி குறிப்பிடுகிறது.

    இக்கருத்தை யூதர்களின் 'தல்மூத்' வேதத்திலும் இக்கருத்தைக் காணலாம், 'எவனொருவன் ஒரு இஸ்ரவேலரின் உயிரைக் கொல்கின்றானோ, அவன் இவ்வுலகையே அழித்தவன் போலாவான். மேலும், எவனொருவன் ஒரு இஸ்ரவேலரின் உயிரைப் பாதுகாக்கின்றானோ, வேதத்தின் பார்வையில் அவன் உலகம் முழுவதையும் காப்பாற்றியவன் போலாவான்' என்று கூறும் வேதத்தில், 'இஸ்ரவேலர் அல்லாதவர் நீரில் மூழ்கிக்கொண்டிருக்கும்போது நீங்கள் காப்பாற்றினால் நீங்கள் ஒரு பாவியாவீர்கள்' என்ற மனிதர்களது கையாடலும் அதே வேதத்தில் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

     இவ்வாறே, அவர்களது மத இலக்கியத்தில் காணப்படும் 'கோயிம்' என்ற வார்த்தை ஆங்கிலத்தில் 'புநவெடைந' என்று பிரயோகிக்கப்படுகிறது. அதாவது, 'எழுத வாசிகத்தெரியாத' என்ற கருத்தில் பிரயோகிக்கப்படும். இக்கொள்கையின் படி படிப்பறிவில்லாத மனிதர்கள் மீது அவர்களுக்கு எது வேண்டுமானாலும் செய்ய முடியும். அவர்கிடம் என்ன வகையில் வேண்டுமானாலும் உரிமைகளை மீற முடியும் என்று யூதர்கள் கருதியிருந்தனர். இதனை அல்குர்ஆனும் கண்டிப்பதனைக் காணலாம், 'படிப்பறிவில்லாதவர்(உம்மி)கள் மீது (நாம் செய்யும் எந்த செயலுக்கும்) நம்மீது குற்றம் பிடிக்க வழியில்லை. என்று அவர்கள் கூறுகின்ற காரணத்திலாகும். அவர்கள அறிந்துகொண்டே (தங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான் என்று) அல்லாஹ்வின் மீது பொய்யையும் கூறுகின்றனர்' (3:75) இவ்வாறு நோக்கும் போது, இஸ்ரவேலர்கள் அல்லாதோரை அவர்கள் மனிதர்களாகவே கருதுதுவதில்லை. அவர்கள் பிறரிடம் உதவி கோறுவதற்கு எந்த அருகதையும் அற்றவர்கள், என்ற கருத்தையே அவர்கள் கொண்டுள்ளனர் என்ற நிலையை அறிந்து கொள்ள முடிகிறது. 
இவ்வாறு இன வெறியுடன் இஸ்லாம் மனித உரிமைகளைப் பேசவில்லை. மனிதன் நீரில் மூழ்குபவகாக இருக்கலாம், நோயுற்றவனாக இருக்கலாம், காயப்பட்டவனாக இருக்கலாம் எவ்வாறு இருந்தபோதிலும் அவன் மனிதன் என்ற ரீதியில் அவனுக்கு சுதந்திரமாக வாழவும் தனது உயிரைகாக்கவுமான உரிமைகளை இஸ்லாம் வழங்கியுள்ளது.

       எனவேதான், உமர் (ரழி) அவர்கள், 'யூப்ரடீஸ் நதிக்கரையில் ஒர் ஒட்டகக்குட்டி சங்கடத்துக்குள்ளானாலும் இந்த உமர் மறுமையில் அல்லாஹ்விடத்தில் பதில் சொல்லியாக வேண்டும்' என்ற கழுத்து இஸ்லாம் முஸ்லிமல்லாதாருக்கான வாழும் உரிமையை மறுக்கிறது என்ற வாத்தினை முன்வைப்போரை வாயடைக்கச் செய்து விடுகிறது.

இஸ்லாத்தல் தனிமனித சுதந்திரத்திற்கான உரிமை
   அடிமைத்தனம் கூடாது என்று மனித உரிமைகள் சட்டம்கூற, இஸ்லாம் அதனை அனுமதிக்கிறது. அல்குர்ஆனின் சூரா நிஸாவின் 25 ஆவது வசனத்தில் அல்லாஹ் இதனை அனுமதிப்பதாயும், அவர்களுடன் இணைந்து வாழ முடியும் என்று கூறுவதாவும் விமர்சிப்பதுண்டு. ஆனால் அல்குர்ஆனின் வசனங்கள் இறங்கிய பின்னணியும், அது இறக்கப்பட்டமைக்காக காரணங்களையும் விளங்க முடியாதவர்களாளேயே இத்தகை விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனர்.
      
         இஸ்லாம் மனிதர்கள் சுதந்திரமானவர்களாப் பிறக்கின்றனர், அவர்கள் சுதந்திரமானவர்களாக வாழ வேண்டுமென எதிர்பார்க்கிறது. மனிதர்களை அடிமையாக்கும் நோக்கத்துடனோ, அடிமையாக விற்றுவிடும் நோக்கத்துடனோ, மனிதனை சிறை பிடிக்கும் ஆரம்ப காலத்து பழக்கத்தினை இஸ்லாம் கண்டிப்பாக தடை செய்துள்ளது. இந்த விடயத்தில் நபி (ஸல்) அவர்கள் திட்டவட்டமாகவும், தெளிவாகவும் கூறியதுடன் தான் ஒரு முன்மாதிரியாகவும் நடந்து கொண்டார்கள். 'மூன்று விதமான மக்களுக்கு எதிராக நான் மறுமை நாளில் வாதிடுவேன். அவர்களுள் ஒருவர் மனிதர்களை அடிமைப் படுத்தி விற்று அந்தப் பணத்தில் சாப்பிடுபவர்' (புஹாரி, இப்னுமாஜா) என்று கூறிய நபியவர்கள் தனது வாழ்நாளில் 63 அடிமைகளை வாங்கி விடுதலை செய்துள்ளார்கள்

      நபியவர்களது இந்த முன்மாதி நடைமுறைகளையும் வார்த்தைகளையும் உடன் செயற்படுத்திய ஸஹாபாக்கள் மூலம் குறுகிய காலத்துக்குள் அரபு தேசத்துக்குள் அடிமைத்துவம் இல்லாத சூழல் உருவாகியிருந்தது. ஆயிஷா (ரழி) அவர்கள் 67 அடிமைகளையும், அப்பாஸ் (ரழி) 70 அடிமைகளையும், அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) 1000 அடிமைகளையும், அப்துர்ரஹ்மான் இப்னு அவ்ப் (ரழி) 30000 அடிமைகளையும் விலைக்கு வாங்கி விடுதலை செய்தனர் என இஸ்லாமிய வரலாறு கூறுகிறது.

   இந்தப்பின்னணியிலேயே, ரப்ஈ இப்னு ஆமிர் (ரழி) அவர்கள் பாரசீக மன்னனிடம், 'எதற்காக நீங்கள் வந்திருக்கிறீர்கள்' என்று கேட்டமைக்கு, 'அல்லாஹ் தான் நாடியோரை, அடியார்களுக்கு அடிமைப்படுவதிலிருந்து மக்களை வெளியேற்றி, அல்லாஹ்வுக்கு மாத்திரம் அடிமைப்படச் செய்வதற்கும், இவ்வுலகின் நெருக்கடிகளிலிருந்து, மறுமை எனும் சுபீட்சத்தின்பால் இட்டுச்செல்வதற்கும், மதங்களின் அநீதியிலிந்து இஸ்லாம் எனும் நீதியின் பால் அழைத்துச் செல்வதற்காக அல்லாஹ்வினால் அனுப்பப்பட்ட ஒரு கூட்டம்' என பதில் கூறினார்கள்.

,  இவைதவிர, இஸ்லாம் முஸ்லிம்கள் செய்த தவறுகளுக்கு பரிகாரமாகவும், தன்டணையாகவும் முதன்மைப் படுத்தியது அடிமை விடுதலையையேயாகும்.

     இஸ்லாமிய வரலாற்றில் அதன் பின்பு அடிமைத்துவம் என்பது காணப்பட்டது போர்க்கைதிகள் விடயத்திலாகும். கைதிகளாகப்பிடிபட்டவர்களுக்குப் பகரமாக எதிரிகளிடமிருந்து பிடிபட்ட முஸ்லிம் வீரர்களை விடுவிக்கப்பயன்படுத்தும் அல்லது பனயத் தொகையைப் பெற்று அவர்களை விடுவிக்கும் நிலை காணப்பட்டது. அதுவும் சாத்தியப்படாதபோது பிடித்த இராணுவ வீரர்களிடம் ஒப்படைத்து விடும் நிலை காணப்பட்டது. இஸ்லாமிய வரலாற்றில் அவ்வாறு பிடிபட்ட கைதிகளை இராணுவ வீரர்கள் கொடுமைப் படுத்தினார்கள் என்றோ, அவர்களை பலாத்காரப் படுத்தினார்கள் என்றோ காண முடியாது. மேற்கு நாடுகளில் போன்று அவர்களை சிறையில் தள்ளி சித்திரவதை செய்வதை விட மனிதர்களோடு மனிதர்களாக இருந்து வருவது எவ்வளவோ மேலானதாகும். அவர்களுக்குரிய அடிப்படை வசதிகள் அனைத்தையும் வழங்கி அவர்களை நல்ல முறையில் நடத்துமாறு இஸ்லாம் கட்டளையிட்டுள்ளது. 'மேலும், அ(ல்லாஹ்வாகிய அ)வன் மீதுள்ள அன்பின் காரணமாக ஏழைக்கும், அநாதைக்கும். சிறைப்பட்டவர்களுக்கும் அவர்கள் உணவளிப்பார்கள்' (76:8)

    இது இவ்வாறிருக்க, முற்கால எகிப்திய ஆட்சியாளர்கள், பிரமட்டுக்களை கட்டுவதற்காக அடிமைகளைக் கொடுமைப்படுத்தி வேலைவாங்கியதை விட, சீன ஆட்சியாளர்கள் அடிமைகளைக் கொடுமைப்படுத்தி சீனப்பெரும்சுவரைக் கட்டியதை விட கொடூரமான முறையில் இரண்டாம் உலகப்போரில் தோற்றுப்போன ஜெர்மன் யப்பான் போன்ற நாடுகளின் கைதிகளை ரஷ்யா நடத்தியது. தாம் சிறை பிடித்த பல்லாயிரக்கணக்கான கைதிகளை அவர்கள் சைபீரியாவையும், இதர பின தங்கிய பகுதிகளையும் வளப்படுத்த பயன்படுத்தினர். இரத்தத்தை உறையச் செய்திடும் 'சீரோ' டிகிரிக்கும் குறைவாக உஷ்ன நிலையில் உண்ண உணவு வழங்காமல், உடுக்க ஆடையின்றி நிலக்கரி சுரங்கங்களில் மேற்பார்வையாளர்கள் மூலம் Nவை வாங்கப்பட்டனர்.  இவ்வாறுதான் இன்று மனித உரிமை பற்றிப் பேசும் நாடுகள் நடந்து கொண்டுள்ள வரலாற்றைப் பார்க்கிறோம்.

    தாம் தான் மனித சுதந்திரம் பற்றி முதலில் உலகிற்கு அறிமுகப்படுத்தியோர் தாம் என வாதிக்கும் மேலை நாடுகளில் மனித சுதந்திரம் எந்தளவு பேணப்பட்டது என்ற வரலாற்றை நோக்கினால், அமேரிக்காவும், மேலை நாடுகளது தீவுகளும் கைப்பற்றப்பட்ட பின்பு, வெள்ளையர்கள் அங்கு ஊடுருவி, சுமார் 350 ஆண்டுகளாக அடிமை வியாபாரம் நடைபெற்றது. ஆபிரிக்க கடற்கரைக்கு அதன் உற்புறங்களிலிருந்து கருப்பின மக்களை அடிமைகளாக்கி  வெள்ளையர் தமது குடியேற்ற நாடுகளுக்கு  சரக்குகளைப் போன்று ஏற்றுமதி செய்தனர்.

     1680-1786 வரையிலான ஒரு நூற்றாண்டு காலப்பகுதியில் பிரித்தானியா அடிமைப்படுத்திய அடிமைகளின் எண்ணிக்கை ஆங்கிலேய வரலாற்றாசிரியர்களின் கருத்துப்படி 20 மில்லியன்களாகும். 1790 ஆம் ஆண்டு மட்டும் அடிமையாக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 75000 ஆகும். மிக அழுக்கடைந்த, அடிப்படை வசதிகள் அற்ற சரக்குக் கப்பல்களில் மிருகங்களை விட கேவலமான நிலையில் 18 அங்குலமே கொண்ட கூடுகளில் அசைய முடியாவண்ணம் அடைக்கப்பட்டும், ஒருவருக்கு மேல் மற்றொருவர் கிடத்தப்பட்டும் அவர்கள் கொண்டு செல்லப்பட்டார்கள். சென்று சேறும் வழியில் 20 விகிதத்தினர் வழியிலேயே இறந்து போயினர்.

     1781 ஆம் ஆண்டு அடிமைகளை ஏற்றிக்கொண்டு மேற்கு ஆபிரிக்காவிலிருந்து அமேரிக்கா நோக்கி பிரயாணித்த கப்பலில் 400 அடிமைகள் இருந்தனர். அவர்களுக்குள் 132 பேருக்கு கொலரா ஏற்பட்டதை அறிந்த வெள்ளைக்கார வியாபாரி, ஏனைய அடிமைகளுக்கும் பரவிவிடாமல் இருப்பதற்காக ஒவ்வொருவராக 132 பேரையும் கதரக்கதர நடுக்கடலில் வீசிவிட்டான். வேடிக்கை என்னவென்றால்,  நாடு திரும்பிய அவன் அதற்காக (தனது வியாபாரப் பொருட்களுக்கு ஏற்பட்ட நட்டத்துக்காக) காப்புறுதி நிருவனத்திடம் நட்டஈடு கோரினான். அக்கோரிக்கையை அவை நிராகரிக்கவே, நீதிமன்றத்தில் அவன் வழக்குத் தொடர்ந்தான். 'அவன் அவர்களை வீசியது ஒரு பாதுகாப்பு நடவடிக்கை. எனவே, காப்புறுதி கம்பனி நட்டஈடு வழங்க வேண்டும்' என நீதி மன்றம் தீர்ப்பு வழங்கியது. உண்மையில், நீதிமன்றம் அவன் செய்த கொலைகளுக்காக அவனுக்கு மரண தன்டணை வழங்கியிருக்க வேண்டும். அதற்குப் பதிலாக அவனுக்கு நட்ட ஈடு வழங்க தீர்ப்பளித்தது வேடிக்கைக்குரிய விடயமல்லவா.

      ஐரோப்பியரிடையே அடிமை வியபாரம் இருக்கும் காலத்தில் மாத்திரம் அவர்களால் பிடிக்கப்பட்ட கருப்படிமைகளின் எண்ணிக்கை 100 மில்லியன்களாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் மனித சுதந்திரம் பற்றி பேசுவதற்கு அவர்களுக்கு  என்ன அருகதை இருக்கிறது என்பது முதல் கேள்வியாகும்.

இஸ்லாத்தில் நீதி பெறும் உரிமை

   இஸ்லாம் மனிதனுக்கு வழங்கியுள்ள அடுத்த முக்கிய உரிமையே அவர் சமுகவாழ்வின் போது நீதி பெறும் உரிமையைக் குறிப்பிட முடியும். மனிதன் மற்றொரு மனிதனின் மீது கொண்ட வெறுப்பு, குரோதம், பகைமை போன்றன அந்த மனிதனுக்கு எதிராக செயற்படுவதற்கு, அந்த மனிதனுக்கு விரோதமாக தீர்ப்பு கூறுவதற்கு இஸ்லாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டாது. அல்குர்ஆன் கூறுகிறது, 'ஒரு சாரார் மீது நீங்கள் கொண்டுள்ள வெறுப்பு உங்களை அத்துமீறலுக்கு இட்டுச்செல்லக்கூடாது'. (5:2).  'விசுவாசிகளே! நீதியை நிலைநாட்டுவதில் அல்லாஹ்வுக்காக உறுதியான சாட்களாக இருங்கள். மக்களின் ஒரு கூட்டத்தார் மீது நீங்கள் கொண்டுள்ள தவறான எண்ணம் நீதியாக நடப்பதிலிருந்து உங்களைத் தவறச்செய்து விடக்கூடாது. நீதியதக நடந்து கொள்ளுங்கள். இதுவே இறையச்சத்துக்கு மிக்க நெருக்கமானதாகும்'. (5:8) போன்ற வசனங்களின் ஊடாக அல்லாஹ் எந்தக் காரணம் கொண்டும் நீதிக்கு மாற்றமாக நடப்பதைத் தடை செய்கின்றான்.

    'விசுவாசிகளே! நீங்கள் நீதத்தின் மீதே உறுதியாக நிலைத்திருங்கள். (நீங்கள் சாட்சிகூறினால் அது) உங்களுக்கோ, அல்லது உங்களது பெற்றோருக்கோ (அல்லது) உங்களது நெருங்கிய உறவினருக்கோ விரோதமாக இருந்த போதும் (அல்லாஹ்வுக்காக) உண்மையையே சாட்சி கூறுங்கள். (நீங்கள் யாருக்காக சாட்சி கூறுகின்றீர்களோ அவர்கள் பணக்காரராக இருந்தாலும், ஏiயாக இருந்தாலும் சரியே உண்மையையே கூறுங்கள்)' (4:135) எனக்கூறுவதன் மூலம் சமுக நீதியை நிலைநாட்டுகிறது.

    எனவே, முஸ்லிம்கள் தங்களோடு நல்லுறவுள்ள மனிதர்களிடம் மட்டுமல்லாது, தமது எதிரிகளுடனும் கூட நீதியாக நடந்து கொள்ள வேண்டும் என்பதை அல்குர்ஆனின் இத்தகைய வசகங்கள் தெளிவுபடுத்துகின்றன. இஸ்லாம் வழங்கும் சமுக நீதியானது முஸ்லிம்களுக்கு மட்டுமோ, தன் நாட்டு மக்களுக்கு மட்டுமோ, தன் ஆதரவாளர்களுக்கு மட்டுமோ அல்ல மாறாக உலகில் பிறந்து வாழும் அனைத்து மனிதர்களுக்காகவுமே என்பதை பொதுப்படையாக முன்வைக்கும் இந்த வசனங்கள் தெளிவுபடுத்துவதாய் அமைகின்றன.

   மனித இனம் ஆரம்ப்தில் ஒரு சமுகமாக இருந்ததையும், கால வளர்சியின் போது அது பல இனங்களாகவும் குழுக்களாகவும், பல்வேறு மொழிகளைப் பேசுவோராகவும், பல பூகோலப் பிரதேசத்தைச் சார்ந்த பல்வேறு நிறத்தினர்களாகவும் பிரிந்தது என்பதையும் அல்குர்ஆன் மிகத்தெளிவாகக் குறிப்பிடுகிறது. 'மனிதர்கள் அனைவரும் ஆரம்பத்தில் ஒரே சமுகத்தவராகவே இருந்தனர். பின்னர் பல வகுப்பினராகப் பிரிந்து விட்டனர்.(10:19)

    நபி (ஸல்) அவர்கள் இதுபற்றிக் கூறும்போது, 'நீதியாக நடப்பவர்கள் அல்லாஹ்விடத்தில் ஒளியிலான மிம்பர்களில் இருப்பார்கள். அவர்கள் தமது ஆட்சியில் குடும்பத்தில், தங்களின் பொறுப்பில் இருந்தவர்களுடன் நீதியாக நடந்து கொண்டிருப்பார்கள்' (முஸ்லிம்) எனக்கூறினார்கள். நீதி என்பது சமுகத்தின் சகல மட்டத்தினருக்கும் பொதுவானதாகும். 'உங்களுக்கு மன்சென்ற சமுகம் அழிக்கப்பட்டமைக்குக் காரணம், அவர்கள் கீழ்மட்ட மக்களுக்கு சட்டங்களை செயற்படுத்துவார்கள். உயர் குடியினரை விட்டுவிடுவார்கள். முஹம்மதின் ஆத்மா எவன் கைவசமிருக்கிறதோ, அவன் மீது சத்தியமாக, முஹம்மதின் மகள் பாதிமா திருடினாலும் அவளது கையை வெட்டுவேன்' (புஹாரி) என நபியவர்களிடம் களவுக்குற்றத்திற்காக பரிந்து பேசவந்த 'ஸைத் பின் ஹாரிதா' (ரழி) அவர்களை நோக்கி கூறினார்கள்.

  பொதுவாக, 'இஸ்லாமிய நாட்டில் வாழும் முஸ்லிமல்லாதார், இரண்டாந்தரமாகவே மதிக்கப்படுகின்றனர். அவர்களுக்கு நீதி மஸ்லிம்களுக்கு வழங்கப்படுவதைப் போன்று வழங்கப்படுவதில்லை' போன்ற விமர்சனங்களை அண்மைக்; காலத்து முஸ்லிம் நாடுகளின் நிலையைக் கண்டு இஸ்லாத்தை விமர்சிப்பதுண்டு. ஆனால், இஸ்லாமிய வரலாற்றை, அதன் ஆட்சிக் காலத்தை சற்று ஆராய்ந்தால், முஸ்லிம்கள் எந்தளவு நீதியான முறையில் நடந்துகொண்டுள்ளார்கள் என்பதை விளங்கலாம். அலி (ரழி) அவர்கள் கலீபாவாக இருக்கும் போது அவரது போர்க்கவசத்தை ஒரு யூதன் திருடிவிட்டான்;. அதற்கு சாட்சியாக அவரது மகன் ஹஸன் (ரழி) அவர்கள் மாத்திரம் இருந்த ஒரே காரணத்திற்காக கேடயம் யூதனுக்குச் சொந்தமென கலீபாவுக்கெதிராக தீர்ப்பு வழங்கிய மார்க்கம் இஸ்லாம்.

   ஒரு தடவை எகிப்தில் கவர்னராக இருந்த அம்ரிப்னுல் ஆஸ் (ரழி) அவர்களது மகன் அவர்கள் குதிரை ஓட்டப்போட்டியொன்றில் ஒரு ஏழை குடிமகனிடம் தோல்வியடைந்ததை தாங்கிக் கொள்ள முடியாத அம்ரிம்னுல் ஆஸ் (ரழி) அவர்களது மகன் அந்த ஏழைச் சிறுவனது முதுகில் சாட்டையால் அடித்து விட்டார்கள். அவன் தான் கலீபாவிடம் முறையிடுவதாகக் கூறி அழுதான், ஹஜ் காலப்பகுதியில்  கலீபாவை சந்தித்து நடந்த விடயத்தைக் கூறவே, உமர் (ரழி) அவர்கள், ' மக்களை அவர்களது தாய்மார் சுதந்திரவான்களாக பெற்றெடுத்திருக்க நீங்கள் எப்போது அவர்களை அடிமைப்படுத்தினீர்கள்' எனக்கேட்டு கவர்னரின் மகனுக்கு உடன் தண்டனை வழங்கினார்கள். தனது கையிலிருந்த சாட்டையை அந்த சிறுவனிடம் வழங்கி 'உனக்கு அடித்தது போலவே நீயும் அடி' என்று கூறினார்கள். இது போன்ற ஏராளமான சம்பவங்களை வரலாற்றில் கண்டுகொள்ள முடியும்.

    உலகில் நீதிக்கு ஒரு உமர் என நீதியான ஆட்சிக்கு பெயர்போன கலீபா உமர் (ரழி) அவர்கள் தன்னைத் தொடர்ந்து வரக்கூடிய கலீபாவுக்கு உபதேசிக்கும்போது, 'மக்களை எப்போதும் சமமாக நடத்துங்கள். உண்மையை நிலைநாட்டுவதில் எவரையும் பொருட்படுத்த வேண்டாம். இவ்விடயத்தில் எவரின் தூற்றுதலுக்கும் அஞ்ச வேண்டாம். அல்லாஹ் உமக்களிக்கும் அதிகாரத்தில் எவருக்கும் சார்பாகவோ, எதிராகவோ நடக்க வேண்டாம்' என உபதேசம் செய்தார்கள்.
   எனவே, இஸ்லாத்தில் நீதியைப் பெறும் உரிமை வெறும் ஏட்டுத் தத்துவமாக காணப்படவில்லை. மாறாக அவை ஒரு மனிதனின் தனிப்பட்ட வாழ்விலும்,  குடும்ப வாழ்விலும், சமுக வாழ்விலும், அரசியல் வாழ்விலும் நடைமுறை வாழ்வில் பிரதிபலிக்கக் கூடியனவாக காணப்பட்டன.

இஸ்லாத்தில் மனிதரிடையே சமத்துவம்

    இஸ்லாம், இன, நிற, மொழி, பிரதேச வேறுபாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒரு மார்க்கமாகும். இன வெறியும், கோத்திர வெறியும் உச்ச நிலைக்குப் போயிருந்த ஜாஹிலிய்ய சமுகத்திற்கு நபியாக அனுப்பப்பட்ட முஹம்மத் (ஸல்) அவர்கள், மக்களிடையே காணப்பட்ட ஏற்றத்தாழ்வுகளுக்கும், இனம், கோத்திரம், நிறம், பிரதேசம் என பிரிந்து வாழும் நிலைப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்கள்.
 
    ஆரம்பமாக இறங்கிய அல்குர்ஆன் வசனங்களே, மனித வாழ்வில் சமத்துவத்தை வலியுறுத்தின. ' மனிதர்களே! நீங்கள் உங்கள் இரட்சகனுக்குப் பயந்து (நடந்து) கொள்ளுங்கள். அவன் எத்தகையவன் என்றால், உங்களை (யாவரையும்) ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான். அதிலிருந்து அதற்குரிய சோடியையும் படைத்தான். இன்னும், அவ்விருவரிலிருந்து அனே ஆண்களையும், பெண்களையும் பரவச் செய்தான். இன்னும், அல்லாஹ்வை, அவனைக்கொண்டு (தமக்குரிய உரிமைகளை) நீங்கள் (ஒருவருக்கொருவர்) கேட்டுக்கொள்கிறீர்களே, அத்தகையவனையும், மேலும், இரத்தக் கலப்பு சொநதங்கயை (த் துண்டித்து விடுவதை)யும் நீங்கள் அஞ்சிக்கொள்ளுங்கள்...' (4:1) என கூறுவதன் மூலம் மனிதர்கள் மத்தியில் சமத்துவத்தை வலியுறுத்துகிறது.
 
     மனித இனம் ஆரம்பத்தில் ஒரு சமுகமாக இருந்ததையும், கால வளர்சியின் போது அது பல இனங்களாகவும் குழுக்களாகவும், பல்வேறு மொழிகளைப் பேசுவோராகவும், பல பூகோலப் பிரதேசத்தைச் சார்ந்த பல்வேறு நிறத்தினர்களாகவும் பிரிந்தது என்பதையும் அல்குர்ஆன் மிகத்தெளிவாகக் குறிப்பிடுகிறது. 'மனிதர்கள் அனைவரும் ஆரம்பத்தில் ஒரே சமுகத்தவராகவே இருந்தனர். பின்னர் பல வகுப்பினராகப் பிரிந்து விட்டனர்'(10:19)

    இஸ்லாத்ததைப் பொருத்தவரையில், மனிதர்களை அவர்களது இனத்தை, நிறத்தை, மொழியை, பிரதேசத்தை மையப்படுத்தி சிறப்புக்குரியவர்களாக்கவில்லை. மாறாக, இறையச்சத்தின் அடிப்படையிலேயே அது நோக்கப்படுகிறது. 'உண்மையில், அல்லாஹ்வின் பார்வையில் மிக்க கண்ணியத்துக்குரியவர் யாரெனில் உங்களில் மிக்க இறையச்சம் உடையவரே' (49:13)

     அல்குர்ஆன் கூறும் இஸ்லாமிய வாழ்க்கை முறையை தனது வாழ்க்கையின் மூலம் மக்களிடையே நிலைநாட்டிய நபி (ஸல்) அவர்கள் தனது இறுதி ஹஜ்ஜின் போது நிகழ்த்திய உரை ஒரு சமத்துவப் பிரகடனத்திற்கு மிகச் சிறந்த உதாரணமாகும். 'மக்களே! நிச்சயமாக உங்களது இரட்சகன் ஒருவனே, உங்கள் தந்தையும் ஒருவரே, நீங்கள் எல்லோரும் ஆதமின் மக்கள். ஆதம் மண்ணால் படைக்கப்பட்டவர். இறையச்சமுடையவரே உங்களில் மேலானவர். அரபியர் மற்றெவரையும் விட மேலாகவரல்லர், மற்றவர்கள் அரபியரை விட மேலானவர்களுமல்லர். வெள்ளையர், கருப்பரை விடவோ, கருப்பர் வெள்ளையரை விடவோ இறையச்சத்தாலன்னி மேலானவரல்லர்... (புஹாரி)

     அல்குர்ஆனினதும் நபியவர்களதும் வார்த்தைகள் வெறும் வரட்டுத் தத்துவங்களாக அமையவில்லை. அவை அன்றைய சமுகத்தில் தலைவிரித்தாடிய குல பேதம், நிற பேதம், வர்க்க பேதம் முதலான நோய்களை முளையோடு கிள்ளி எறிந்தன. தீய பண்புகளை விட்டு மிகவும் தூரமான ஒரு பண்பட்ட சமுகத்தினை இன்மண்னுலகில் உருவாக்கிவிட்டன. அனைவரையும் சகோதரர்களாக மாற்றியமைத்தது, ;' அல்லாஹ் உங்கள் மீது புரிந்திருக்கும் அருளை நினைத்துப் பாருங்கள். நீங்கள் விரோதிகளாக இருந்தீர்கள். அவன் உஙகள் இதயங்களில் அன்பையூட்டி ஒன்று சேர்த்தான். எனவே, அவனது அருளால் நீங்கள் சகோதரர்களாகி விட்டீர்கள்... (3:;103)

    இவ்வாறு சமத்துவத்தை வளர்த்த சமுகத்திலே தான் அபீஸீனியாவைச் சேர்ந்த பிலால், பாரசீகத்தைச்சேர்ந்த ஸலமான், உரோமத்தைச் சேர்ந்த சுஹைப் (ரழி) போன்ற சகல இனத்தவர்களும் ஒற்றுமையுடனும் சகோதரத்துவத்துடனும் வாழ்ந்தனர்.

    ஒரு தடவை அபுதர் (ரழி) அவர்கள் கோமடைந்த நிலையில் பிலால் (ரழி) அவர்களைப் பார்த்து 'ஏ கறுப்பியின் மகனே!' எனக் கூறவே, அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று முறையிட்டபோது, 'பேச்சு எல்லை மீறிவிட்டது. இறைபக்தியாலன்றி கறுத்த பெண்ணின் மகனை விட வெள்ளைப் பெண்ணின் மகனுக்கு எவ்வித சிறப்புமில்லை' என கண்டித்தார்கள். கோபத்தின் காரணமாக நிதானத்தை இழந்த நிலையில் தான் செய்த தவறின் பாரதூரத்தை உணர்ந்த அபூதர் (ரழி) அவர்கள், உடனே நிலத்தில் கன்னத்தை வைத்துப் படுத்துக்கொண்டு 'நான் செய்த தவறுக்காக உமது காலால் எனது கன்னத்திற்கு உதைப்பீராக' என அக்கறுபடிமையிடம் கூறினார்கள் கூறினார்கள்.

     இஸ்லாத்தில் ஒரு அடிமைகூட தனது சமத்துவத்துக்காக போராடக்கூடியளவு அது தனது அங்கத்தினர்களை பயிற்றுவித்துள்ளது. எனவே, சமத்துவம் என்ற உரிமை நேற்று ஐரோப்பியரால் முன்வைக்கப்பட்ட ஒன்றல்ல. அவ்வாறு உண்மையாகவே அவர்கள் சமத்துவம் பேணும் தன்மை கொண்டவர்களாக இருந்திருந்தால் உலகில் பல்லாயிரக் கணக்கான மக்கள் தினமும் பட்டிணியால் இறந்துகொண்டிருக்கும் நிலையில், தனது உற்பத்திப் பொருட்களுக்கு கேள்வி குறைந்துவிடும் என்பதற்காக அமேரிக்கா மிகையுற்பத்தியாகக் காணப்படும்  பல மில்லியல் மெற்றித்தொண் கோதுமைகளை   கடலில் கொட்டியிருக்க மாட்டாது.

    இஸ்லாம் வெறும் போதனைகளில் மாத்திரம் சமத்துவ உரிமைகளை நோக்கிவிடவில்லை. மாறாக, அது தனது அனைத்து இபாதாக்களிலும் சமத்துவத்தை பேணக்கூடிய அமைப்பிலேயே அமைத்துள்ளது. உதாரணமாக, தொழுகையை எடுத்துக் கொண்டால், அரசன், ஆண்டி, எஜமான், அடிமை, பணக்காரன், ஏழை, முதலாளி, தொழிலாளி, கருப்பன், வெள்ளையன், பெரியவன்,
சிறியவன், மேல் நாட்டார், கீழை நாட்டார் என்ற பாகுபடின்றி எல்லோரும் தோளோடு தோள் சேர்த்து தொழ வேண்டும். அரசன் பக்கத்தில் தொழுகின்றானே என்று ஆண்டி அச்சப்படத் தேவையில்லை. அந்தஸ்து மிக்கோருக்கென பிரத்தியேகமான இடம் ஒதுக்கப்படவில்லை. இவ்வாறுதான் இஸ்லாமியக் கடமைகள் ஒவ்வொன்றிலும் சமத்துவத்தினை வலியுறுத்தியிருப்பதனை அவதானிக்க முடியும்.

     எனவேதான், அமேரிக்காவில் கறுப்பின விடுதலைக்காக குரல் கொடுத்து, பின் இஸ்லாத்தை ஏற்றுக்கொண்ட கறுப்பினத் தலைவர். அவர் இஸ்லாத்தை ஏற்றதும் ஹஜ் கடமையை நிiவேற்ற மக்கா சென்றார். அங்கு ஆசிய, ஆபிரிக்க, அமேரிக்க, ஐரோப்பிய இனத்து மக்கள் அனைவரும் ஒன்றிணைந்து, கறுப்பர், வெள்ளையர் என்ற வித்தியாசமின்றி தொழுகையை நிறைவேற்றிக் கொண்டிருந்ததைப் பார்த்து வியப்புற்ற அவர், தான் அமேரிக்காவில் பின்பற்றிக்கொண்டிருந்த வழிமுறை இன, நிற பிரச்சினைக்கு ஒரு தீர்வல்ல என்பதையும், இஸ்லாமே அதற்கு ஒரே தீர்வு என்பதையும் புரிந்து கொண்டார்.

    இந்நிலையில், சமத்துவத்துக்கு தாம் தான் உதாரணப் புருஷர்கள் என மார்தட்டிக்கொள்ளும் அமேரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளில் நடைபெறும் சம்பவங்களை நோக்கினால் அவை எந்தவகையிலும் மனித உரிமை பேசுவதற்கு அருகதையற்றவை என்பதை அறிந்து கொள்ள முடியும். பொதுவாகவே கறுப்பர், வெள்ளையர் பிரிவிணை ஒட்ட முடியாது உடைந்து போன கண்ணாடியைப் போன்று அந்த சமுதாயத்தில் ஊறிப்போயுள்ளது. கறுப்பினத்துப் பெண்ணை ஒரு வெள்ளையன் கற்பழித்தால் அதனை பெருட்படுத்தாத நீதித்துறை, கறுப்பினத்தவன் ஒரு வெள்ளை இனத்துப் பெண்ணுடன் அவ்வாறு நடந்து கொண்டாலோ அவன் கொலை செய்யப்பட்டு தீயிலிடப்படுவான். இது தான் அவர்களது சமத்துவம்.

     அமேரிக்காவின் அலபாமாவில் 20 ஆம் நூற்றாண்டில் நடைபெற்ற ஒரு நிகழ்வு இங்கு நினைவுகூறப் பொறுத்தமானதாகும். அலபாமாவில் ஒரு கறுப்பினப் பெண் தன் கல்லூரிப்படிப்பை முடித்துக்கொண்டு மேற்படிப்புக்காக அலபாமா பல்கலைக்கழகத்துக்கு விண்ணப்பித்தார். கறுப்பினம் என்பதற்காக அவளது விண்ணப்பம்  ஏற்கப்படவில்லை. அனுமதி மறுக்கப்பட்டது. இது நியாயமற்றது என பர்மிங் ஹாம் பெடரல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தார் அந்தப் பெண். அவருக்கு அனுமதி வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் தீர்ப்பாகியது. இதனை அறிந்த வெள்ளை மாணவர்கள் அந்த தீர்ப்பை எதிர்த்து ஆர்ப்பாட்டம் செய்தனர். இவ்வெதிர்ப்பு ஆர்ப்பாட்டத்திலும் ஊர்வலத்திலும் ஏனைய பல்கலைக்கழக மாணவர்களும் பங்குபற்றி ஒத்துழைத்தனர். ஏழாயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். அந்தக் கறுப்பியை கொன்று மரத்தில் தொங்க விடப்போவதாக அவர்கள் கோஷமெழுப்பினர். அப்பெண்ணைப்போன்று உருவத்தைச் செய்து அதனை கட்டி இழுத்துச்சென்று தீயிட்டுக் கொளுத்தினர். அத்துடன், ஒரு கூட்டத்தினர் அப்பெண் செல்லுமிடமெங்கும் சென்று கற்களால் அடித்தனர். அழுகிய முட்டைகளைக் கொண்டு அவருக்கு அடித்தனர். தம்மோடு சமமாக படிக்க வந்தால் கொன்று விடுவதாகவும் பயமுறுத்தினர். இத்தனை நடந்தும் கூட அப்பல்கலைக்கழகங்கள் அம்மாணவர்களுக்கு அறிவுரைகளைக்கூட கூறவில்லை. மாறாக, இந்த நிகழ்வுகளால் அப்பெண் அப்பல்கலைக்கழகத்திற்கு வரக்கூடாது என அப்பல்கலைக்கழக நிர்வாகம் அறிவித்தது. தனக்கு நீதியைக் கோரி இரண்டாவது தடவையாக வழக்கு தாக்கல் செய்த அப்பெண் தனது உயிரைக் காக்க நீதிமன்றம் அமைந்துள்ள பர்மிங்ஹாம் நகரில் தனது சகோதரி வீட்டில் முடங்கிக்கிடந்தார். அந்நகரிலும்கூட அவர் இம்சிக்கப்பட்டார். வீட்டுத்தெலைபேசி இரண்டு நிமிடத்துக்கொருமுறை அலரியது. தூக்கினால் வசை மொழகளே கேட்டன. இவ்வாறு ஒரே இரவில் 7 மணிநேம் நடைபெற்றது. இத்தொல்லைகளிலிருந்து தப்பிப்பதற்காக யாரும் கண்காணாத இடத்துக்கு தலைமறைவாகி வாழ வேண்டிய நிலை அப்பெண்ணுக்கு ஏற்பட்டது.

   நீதி மன்றத் தீர்ப்பு மீண்டும் அப்பெண்ணுக்கு சாதகமாகவே, அதனை மறுத்த பல்கலைக்கழக நிர்வாகி ஜோன் காடீல் நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டார். அவர்கூறிய பதில், 'வெள்ளை மாணவர் அந்த கறுப்பு மாணவரைக்கொன்று எம்மையும் கொலை செய்;யலாம் என்று அச்சப்படுகிறோம். இத்தகைய அசம்பாவிதங்களைத் தவிர்ப்பதற்காகவே. அந்த மாணவியை பல்கலைக்கழகம் வர விடாது தடுத்து விட்டோம்' என்று கூறினார்.
 
     மற்றொரு முறை ஒரு கறுப்பினப் பெண் பஸ் பிரயாணத்தின் போது வெள்ளையருக்கு பிரத்தியேகமாக வைக்கப்பட்டிருந்த ஆசனத்தில் அமர்ந்துவிட்டாள். அதிலிருந்து சென்று கறுப்பினத்தாரின் ஆசனத்தில் அமருமாறு அறிவுறுத்தப்பட்டாள் அவள் அதனை மறுக்கவே, பொலிசாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டாள். நீதிமன்றம் அவளுக்கு தூக்குத் தண்டனை வழங்கியது. இதனை ஆட்சேபித்த கறுப்பினத்தவர்கள் பஸ் பிரயானத்தைப் பகிஷ்கரித்தனர். இது சட்டவிரோதமானது என்று அலபாமா நீதிமன்றம் தீர்ப்பு கூறியது. இதனால் பஸ்ஸில் பிரயாணம் செய்ய மறுத்த நூற்றுக்கணக்கான கறுப்பின மக்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டனர். இது நடைபெற்றது. ஆதி காலத்திலலல்ல. ஐ.நா.சபையின் மனித உரிமைப் பிரகடனமும் வெளியிடப்பட்ட பின் 1956 ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலாகும்.

     இந்த நிலையிலேயே இன்று மேலை நாடுகளின் சமத்துவம் காணப்படுகின்றது. இத்தகு மனிதர்களே உலகிற்கு சமத்துவம் சொல்ல வருகின்றனர் என்பது நகைப்புக்கிடமானது.

    எனவே, இன்று நடுநிலையுடன் நோக்கும் முஸ்லிமல்லாத ஏராளமான சிந்தனையாளாகள், சமுக இஸ்லாம் சாதித்ததைப் போன்று உலகில் தோன்றிய எந்த கொள்கையாலும் சாதிக்க முடியவில்லை என்பதை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
                                                                                                   (தொடரும்)

   அஷ்ஷெய்க்.எம்.எஸ்.றியாஸ் முஹம்மத் (நளீமி) எம்.ஏ.